

பருவ வயதில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தடுமாறும் ஆண் பிள்ளைகளுக்குத் தந்தை ஒரு சிறந்த நண்பனாக இருக்க வேண்டும். கண்டிப்புக்கு பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உடல் மாற்றங்கள் மற்றும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதே அப்பாக்கள் செய்ய வேண்டிய முதன்மையான கடமையாகும்.
சமூக பொறுப்புள்ள இளைஞனாக மாற்ற ஒரு நல்வழிகாட்டி தேவை.
1. நண்பனாக மாறுங்கள்:
பருவ வயதில் ஆண் பிள்ளைகளுக்கு மனதில் பல குழப்பங்களும் எண்ணங்களும் தோன்றும். அவர்களின் தடுமாறும் மனதைப் புரிந்துகொண்டு அப்பாக்கள் அவர்களை சரியான பாதையில் வழி நடத்தலாம்.
இந்த வயதில் இதெல்லாம் ஏற்படுவது சகஜம்தான் என்பதைப் புரியவைத்து, சரியான நேரத்தில் சரியான தகவல்களை சொல்லிக் கொடுக்கலாம். உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இது மாதிரியான விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு அப்பாக்களும், பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக் கொடுப்பது சிறப்பாக இருக்கும்.
2. உடல் மாற்றங்களைப் புரிய வையுங்கள்:
பருவ வயதில் ஆண் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இந்த சூழலில் அவர்களை கண்டிப்பதற்குப் பதிலாக நண்பனாக இருந்து வழிகாட்ட வேண்டும். அவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும்.
இந்த வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குரலில் மாற்றம், முகத்தில் முடி வளர்தல், உணர்ச்சி மாற்றங்கள் போன்றவை ஏற்படுவது சகஜம்தான் என்பதைப் புரிய வைத்து அதன் மூலம் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
3. அந்தரங்க சுத்தம் மற்றும் பாதுகாப்பு:
பிறப்புறுப்பு சுகாதாரம் மற்றும் அதை ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், அந்தரங்க சுத்தம் என்பது மிகவும் முக்கியம் என்பதையும் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் நிதானமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்றில்லாமல், ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
4. தவறான அணுகுமுறை தேவையில்லை:
கோபப்படுவது, கடுமையான வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்கள் பிள்ளைகளின் மனதை மோசமாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எந்த விஷயத்தையும் கடுமையாக விமர்சிக்காமல் மென்மையாக, அவர்கள் மனதை பாதிக்காத வகையில் எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியம். அவர்களின் உணர்வுகளை கேலி செய்யாமல், பயமின்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்.
முக்கியமாக இந்த வயதில் பெண்களை மதிக்கும் பண்பை கற்றுக்கொடுப்பது சிறப்பு. பெண்கள் ஆண்களைவிட மனதளவில் வலிமையானவர்கள் என்பதையும், அவர்களை எப்போதும் சமமாக நடத்த வேண்டும் என்பதையும் புரியவைப்பது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லது.
5. நேரத்தை செலவிடுங்கள்:
பிள்ளைகளின் பருவ வயதில் கண்டிப்பான தந்தையாக இல்லாமல் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் குறித்து வெளிப்படையாக பேசி அவர்களை குற்ற உணர்ச்சி இன்றி வழிநடத்த வேண்டும். இணையதளம் மற்றும் ஆபாசப் படங்கள் மூலம் தவறான புரிதல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அப்பாக்களே சரியான பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பது சிறப்பு. வேலையின் காரணமாக எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும், வளர்ந்து வரும் பிள்ளைகளுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டியது முக்கியம்.
6. தன்னம்பிக்கையை வளருங்கள்:
எந்த சூழ்நிலையிலும் அவர்களது சுயமரியாதைக்கு பாதிப்பு வராதவாறு பெற்றோர்கள் குறிப்பாக அப்பாக்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்த வயதில் ஏற்படும் அதிகப்படியான ஆற்றலை (energy) சொகுசாகக் கழிப்பதைத் தவிர்த்து, விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திருப்பி ஈடுபடச் செய்யலாம். வீட்டிலுள்ள சிறிய வேலைகளை அவர்களிடம் கொடுத்து பொறுப்புள்ள ஆண்களாக வளர உதவலாம்.
வளர்ப்பில் அதிகக் கெடுபிடியும் இருக்கக்கூடாது, அதேசமயம் அளவுக்கு மீறிய சுதந்திரமும் கொடுக்கக் கூடாது. குதிரை சவாரி போல கயிற்றை சரியான அளவில் பிடிக்க வேண்டும். அப்பாக்களின் தொடர்ச்சியான அன்பும், ஆதரவும், சரியான வழிகாட்டுதலும் மட்டுமே இந்த தடுமாற்றமான பருவத்தைக் கடக்க ஆண் பிள்ளைகளுக்கு உதவும்.
உங்கள் மகனுக்கு நீங்கள் அளிக்கும் இந்த வழிகாட்டுதல், ஒரு தனிமனித வளர்ச்சியைத் தாண்டி, பெண்களை மதிக்கும் ஒரு சிறந்த பண்புள்ள குடிமகனை இந்த சமூகத்திற்கு உருவாக்க வழிவகுக்கும். இது உங்கள் குடும்ப உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.