
பரீட்சை நேரம் வந்தாச்சு! ஒரு வருடத்தின் மார்ச், ஏப்ரல், மாதங்கள் நம் குழந்தைகளுக்குப் பரிட்சை நேரம். இந்த நேரத்தில் பிள்ளைகள் பரீட்சைகளைக் கவலையின்றி எழுதுவதற்குப் பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் கடமை என்ன? பிள்ளைகள் மன அழுத்தம் இல்லாமல் இருக்கப் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியக் கோட்பாடுகள் என்ன?
பிள்ளைகள் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் திறன் மற்றும் உழைப்பை மதிக்க வேண்டும். மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டாம்.
குழந்தைகளுடன் நட்பான முறையில் பேசுங்கள், அவர்களின் பயங்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். தேர்வு பற்றிய பயத்தைப் போக்கும் வகையில் ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஒழுங்கான படிப்புத் திட்டம் செய்ய உதவி செய்யுங்கள். படிப்பிற்கும் ஓய்வுக்கும் சமநிலையுடன் நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு அதே சமயம் அவர்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து கொடுத்து சந்தோஷப்பட செய்யுங்கள். மற்றும் போதுமான உறக்கம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் மனஅழுத்தம் குறைய தியானம், யோகா போன்றவை செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். வெற்றி, தோல்விகள் இயல்பானவை என்பதைக் குறிப்பிடுங்கள். அவர்களின் சிறிய சாதனைகளையும் பாராட்டி மனவலிமை கொடுங்கள். பிற குழந்தைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகள் கோபம் அல்லது பயம் கொண்டிருந்தால், அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கவும். எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று ஊக்க படுத்துங்கள். தேவையானால் சிரமங்களைச் சமாளிக்கப் பிரியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துங்கள்.
நடந்து போன பரிட்சை பற்றியும் அதில் எவ்வளவு மார்க் வரும் என்று அவர்களோடு விவாதம் செய்ய வேண்டாம். அது அடுத்தப் பரிட்சை மீதுள்ள கவனத்தைச் சிதற வைக்கும்.
பெற்றோர்களின் ஆதரவு, புத்துணர்ச்சி மற்றும் சமநிலை வாய்ந்த அணுகுமுறைதான் குழந்தைகளுக்கு ஒரு நிதானமான மற்றும் கவலையற்ற தேர்வு அனுபவத்தை ஏற்படுத்தும்.