வேலை, தொழில், உறவுகள், பொழுதுபோக்கு என எங்கும் எதிலும் மனிதன் வெற்றி பெறவே விரும்புகிறான். ஆனால், வெற்றியை அடைவதற்கு மிகவும் தேவையான விஷயம் தியாகம்.
மகாத்மா காந்தி, 'நம்மையோ பிறரையோ திருப்திப்படுத்துவதற்காக சரி என்று சொல்வதை விட, முடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒற்றைச் சொல் மிகவும் நன்மையைத் தரும்' என்றார். மிகவும் கடுமையான காலகட்டங்களில் கூட அவர் நிறைய எதிர்மறை விஷயங்களுக்கு முடியாது என்றார். தனது வாழ்நாள் முழுவதும் தனது நம்பிக்கைகளில் உறுதியாக நின்று நிறைய விஷயங்களை அவர் தியாகம் செய்ததால் மட்டுமே பாரதத்திற்கு ஒரு தேசத்தந்தை கிடைத்தார்.
அவருடைய வாழ்க்கை ஒரு மிக முக்கியமான உண்மையை உணர்த்துகிறது. ஒரு பெரிய வெற்றியை அடைவதற்கு குறிப்பிடத்தக்க சிறப்பான தியாகம் அவசியம் என்பதே அது.
எந்த மாதிரியான தியாகங்களை செய்ய வேண்டும்?
எதிர்காலத்தில் நமக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை கிடைக்க இருக்கிறது, நமது லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் உடனடி சந்தோஷங்களையும் சவுகரியங்களையும் தியாகம் செய்ய வேண்டும். நமது குறிக்கோளை நோக்கிய பயணத்தில் தடைக்கல்லாக அவை அமையக்கூடாது. உதாரணமாக, தனது லட்சியத்தை அடைய விரும்பும் ஒரு நபர் தனது செயலில் இறங்காமல் மொபைலில் அதிக நேரம் செலவிடுவது, நண்பர்களுடன் வீண் அரட்டை அடிப்பது, ஊர் சுற்றி திரிவது போன்ற வேலைகளில் இருந்தால் தனது இலக்கை எப்போது அடைய முடியும்?
1. தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைக்கும் ஒரு நபர் ஒரு மணி நேர தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு உடற்பயிற்சியில் இறங்கலாம்.
2. அடுத்த வாரம் வரப்போகிற செமஸ்டர் தேர்வுகளுக்காக நண்பர்களுடன் மல்டிபிளக்ஸில் பார்க்கப்போகும் சினிமாவை தியாகம் செய்யலாம்.
3. ஒரு சிறுகதையோ கட்டுரையோ எழுத வேண்டுமென்றால் வெட்டி அரட்டை அடிப்பதை தியாகம் செய்யலாம் அல்லது மொபைல் நோண்டுவதை நிறுத்தலாம்.
தியாகங்கள் ஏன் முக்கியம் தெரியுமா?
நமக்குப் பிடித்த விஷயங்களை தியாகம் செய்யும்போதுதான் நமது லட்சியத்தின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். என்ன செய்ய வேண்டும் என்பதை அமைதியாக சிந்திக்க நேரமும் கிடைக்கும். சுயக்கட்டுப்பாடு, மன உறுதி உத்வேகம் எல்லாமும் தியாகத்தால் கிடைக்கும். நமக்குப் பிடித்த விஷயங்களை தியாகம் செய்யும்போது ஒரு வினாடி கூட நேரத்தை வீணடிக்க மனது விரும்பாது. கவனமும் நாம் செய்யும் வேலையில் குவியும். அதுவே நாளடைவில் வெற்றியைத் தேடித் தந்துவிடும்.
அத்துடன் ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் வித்திடும். அவனுடைய குணங்களில் நல்ல மாற்றம் உண்டாகும். ஒழுக்கம், காத்திருத்தல், விடாமுயற்சி போன்ற குணங்கள் வளரும். அவனுடைய மூளை மற்றும் உணர்வு தசைகள் நன்றாக வேலை செய்யும்.
தியாகத்தின் மூலம் வெற்றியடைந்த சில பிரபலங்கள்:
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நிறுவனம் தொடங்கும் முன்பு ஏகப்பட்ட சமூக நிகழ்வுகளை தியாகம் செய்தார். மிக அதிகமான சம்பளம் தரும் வேலை வாய்ப்பை தியாகம் செய்தார்.
சாரா ட்ரெலீவன் பிளேக்லி ஒரு அமெரிக்க தொழிலதிபர். பேன்ட் மற்றும் லெகிங்ஸுடன் கூடிய அமெரிக்க ஆடை நிறுவனமான ஸ்பான்க்ஸின் நிறுவனர். முதல் எட்டு வருடங்கள் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் வேலை செய்து பில்லியன் டாலர் வணிகத்திற்காக அவற்றை முதலீடு செய்தார்.