ஷாப்பிங்கா! அம்மா தாயே! ஆளை விடு!

ஷாப்பிங்கா! அம்மா தாயே! ஆளை விடு!
Published on

ஷாப்பிங் செய்யும் மோகம் இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. வெளியே சென்று வருகையில், வெறுங்கையுடன் வீடு திரும்புவது அவர்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும். இதன் காரணம் தேவைக்கதிகமாகவே அழகு சாதனங்கள்; அலங்காரப் பொருட்கள், ஆடைகள்; கைப்பைகள் உட்பட பலவகை சாமான்கள் வீட்டில் குவிகின்றன.

ஷாப்பிங்கும் ஆண்களுக்கும் ஏழாம் பொருத்தமெனலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது, சாப்பிடுவது போன்றவைகள் ஆண்களுக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல. மனைவியுடன் ஷாப்பிங் செல்ல வேண்டுமென்றால், ‘அம்மா தாயே! ஆளை விடுமா சாமி!’ என்று ஒதுங்கி விடுகின்றனர்.

இதன் காரணம் என்னவென்றால் ‘ஷாப்பிங் என்பதே தங்கள் பர்ஸைக் காலி பண்ண, மனைவி செய்யும் தந்திரம்’ என்று எண்ணி விலகிப் போகிறார்கள். இதனால் தாம்பத்திய வாழ்வில் சலசலப்புகள் மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. சிலர் மனைவியுடன் ஷாப்பிங் செய்ய வந்தாலும், மனைவி சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டுவிட்டால், ‘புர் – புர்’ என கோபித்துக்கொண்டு சென்று விடுவார்கள். அதேசமயம் ஆண்கள் விரும்பும் கடைகளென்றால், எவ்வளவு நேரமானாலும் மனைவி பொறுமை காத்து நிற்க வேண்டும். என்னங்க நியாயம்?

இன்டர்நெட் ஷாப்பிங் எக்கச்சக்கமாக இருக்கும் காரணம், ‘ஆன்லைன்’ மூலமாகவே அநேக வகையான ஷாப்பிங் நடைபெற்றுவிடுகிறது. இருந்தாலும், நேரில் கடைகளுக்குப் போய் ஷாப்பிங் செய்யும் திருப்தி இதில் வருவதில்லை என பெண்கள் கூறுவது வழக்கம்.

திருமணமாவதற்கு முன்பு, ஜாலியாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்களை, ‘ஒருகால் கட்டு போட்டு, பொண்டாட்டி வரட்டும். நீ பை தூக்கப் போற!’ என வீட்டிலுள்ளோர் கேலி பண்ணுவது வழக்கம். அதனால்தானோ என்னவோ, ஷாப்பிங் செல்வதை, அதுவும் மனைவியுடன் செல்வதை, கெளரவப் பிரச்னையாக ஆண்கள் எண்ணுகின்றனர். திருமணமான புதிதில் உடன் செல்லும் ஆண்கள் பின்னர் சாக்குபோக்கு சொல்லி ஷாப்பிங் செல்வதிலிருந்து கழன்று விடுவார்கள்.

நுகர் பொருட்களைத் தயாரிப்பவர்களும், விளம்பர நிறுவனங்களும், ஆண்களுக்கும் ஷாப்பிங்கில் ஆர்வத்தை அதிகரிக்க புதுவகை உத்திகளை கையாண்டு வருகின்றனர். விளம்பரங்களில் அழகான பெண் மாடல்களும், அநேக சினிமா பிரபலங்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படியிருந்தும் கூட, சுமார் 75% ஆண்கள், விளம்பரங்கள் பர்ஸை சுரண்டுவதற்கேயென நினைக்கிறார்கள். எல்லா இடங்களிலும் அவசியமான பொருட்கள் கிடைக்கையில், எதற்காக குறிப்பிட்ட ஒரு சில கடைகளில் சென்று வாங்க வேண்டுமென கேள்வியை எழுப்புகின்றனர்.

விழா மற்றும் பண்டிகை நாட்களில் ஆண்களின் ஷாப்பிங் மனோபாவம் சிறிது மாறுபட்டு, குடும்பத்தினருடன் கடைகளுக்குச் செல்கின்றனர். மகிழ்வுடன் வீட்டிலுள்ளவர்களுக்குத் தேவையானதை வாங்கித் தருகின்றனர். ஆனாலும் பட்ஜெட் போடுவார்கள்.

சர்வதேச ஆய்வொன்றின்படி ஷாப்பிங் விஷயத்தில் ஆண்களின் மனப்பான்மை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாகவும், பெரும்பாலும் ஷாப்பிங் செய்வது பெண்கள்தான் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் பல பெண்கள் தனியாகவே ஷாப்பிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர். எது எப்படியிருந்தாலும் ஷாப்பிங் மோகம் பெண்களுக்கு அதிகம்தான்.

போதாக்குறைக்கு வருடம் முழுவதும் ஏதோ sale மற்றும் தள்ளுபடி. Summer Sale, Rainy Sale, ஆடி Sale, பண்டிகை Sale, Winter Sale என Sale ஓ Sale, பெண்களில் சிலர் விண்டோ ஷாப்பிங் செய்து டைம் பாஸ் பண்ணுவதுண்டு. இதற்கெல்லாம் ஆண்களை உடன் கூட்டிச் சென்று அநாவசியமாக முணுமுணுக்க வைப்பானேன்? பெண்கள் மூடுதான் கெட்டுப் போகும்.

அவர்கள் ‘ஆளை விடுங்க தாயே!’ என்று கூறுவதற்கு முன்பே, நீங்கள் விட்டு விடுங்கள் அவர்களை.

என்ன சரிதானே! தாயே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com