தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவிலான மழைப்பொழிவு, அதனால் கொசுத்தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் விதவிதமான உடல்நலக் குறைவுகள், காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, தற்போது பரவும் காய்ச்சல்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காய்ச்சலைத் தடுக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய ஆலோசனைகளைப் பார்க்கலாம்.
தண்ணீரை கொதிக்க வைத்து வெது வெது என்று இருக்கும் தன்மையோடு அருந்தப் பயன்படுத்த வேண்டும்.
உணவுகளை சமைத்து, சூடு ஆறுவதற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அதேபோல், சரியான நேரம் உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
அதிக புரதச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உடலில் சத்து குறையாமல் பாதுகாக்கும். ஊட்டச்சத்து அதிகம் இருக்கக்கூடிய சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறி போன்றவற்றை அதிகம் உட்கொள்வது உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
நிலவேம்பு கசாயத்தை தினமும் எடுத்துக்கொள்வது நோய் நீக்கும் மருந்தாக மட்டுமல்லாமல், நோய் தடுப்பு மருந்தாகவும் உடலைப் பாதுகாக்கும். நிலவேம்பு கசாயத்தை நபருக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு 240 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் 60 மில்லியாக சுண்டி காயும் வரை கொதிக்க வைத்து அவற்றை குழந்தைகளுக்கு 30 மில்லி என்று அளவிலும், பெரியவர்களுக்கு 60 மில்லி என்ற அளவிலும் கொடுக்க வேண்டும்.
மேலும், வீட்டின் அருகாமையில் உள்ள நீர் தேக்கங்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுவதால், கொசு பரவுதல் கட்டுப்படுத்தப்படும். இதனால் கொசுவால் ஏற்படும் கடுமையான காய்ச்சல்களைத் தடுக்க முடியும்.