காதல் என்பது நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சிக்கலான உணர்ச்சியாகும். ஆரம்பகட்டத்தில் இது மிகவும் குழப்பமான உணர்வுகளை ஏற்படுத்தும். உண்மையான காதல் என்பது இரு நபர்களுக்கு இடையில் உள்ள உண்மையான மற்றும் ஆழமான தொடர்புடன் சம்பந்தப்பட்டது. நம்பிக்கை, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட உண்மையான காதலை சில அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.
மரியாதை: ஒருவர் உங்களை உண்மையாகக் காதலிக்கிறார் என்றால் உங்களிடம் அவர் மரியாதையுடன் நடந்து கொள்வார். காதலில் இருக்கும் இருவரும் அவர்களின் கருத்துக்கள் மற்றும் தனித்துவத்தை மதிப்பார்கள். ஒருவர் சொல்வதை மற்றொருவர் கவனத்துடன் கேட்டறிந்து, தன் துணையைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு நடந்து கொள்வர். இருவருக்கும் இடையில் உள்ள மரியாதை அவர்களது அன்பை அதிகமாக்கும்.
நம்பிக்கை மற்றும் நேர்மை: உண்மையாக காதலிக்கும் யாரும் தங்களது துணையை சந்தேகப்பட மாட்டார்கள். அதே நேரம் அவர்களுடைய காதலுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். இத்தகைய காதலில் ஒருவரை ஒருவர் அதிகமாக நம்புவதால், தேவையில்லாத அச்சங்கள் சந்தேகங்கள் போன்றவை ஏற்படாது. இவர்கள் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் எவ்விதமான ஒலிவு மறைவும் இருக்காது என்பதால் அவர்களின் பிணைப்பு அதிகமாக இருக்கும்.
ஆதரவு அளித்தல்: ஒருவர் உங்களை உண்மையாக காதலித்தால், எல்லா தருணங்களிலும் உங்களுக்கு ஆதரவு அளிப்பவராகவே இருப்பார். தேவையானபோது உங்களுடன் இருப்பது, கஷ்ட காலத்தில் விட்டு செல்வது போன்ற பழக்கம் அவர்களிடம் இருக்காது. கஷ்ட காலங்களில் ஊக்கமளித்து உங்களுடன் சேர்ந்து உங்களது வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
உணர்வுபூர்வமான நெருக்கம்: உண்மையான காதலில் உணர்வுபூர்வமான நெருக்கம் அதிகமாக இருக்கும். இது உடல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டது. அவர்களது கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம், அவர்களது காதல் உண்மையா இல்லையா என்பதை. அந்த அளவுக்கு உணர்வின் மூலமாக காதலை வெளிப்படுத்துவார்கள். தங்களது துணை எதைப் பற்றியும் சொல்லாமலேயே அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருக்கும்.
முறையான கம்யூனிகேஷன்: உண்மையான காதலில் இருவருக்கு மத்தியில் முறையான தொடர்பு இருக்கும். தங்களது துணைக்காக நேரத்தை ஒதுக்கி அவ்வப்போது தொடர்பில் இருப்பார்கள். தங்களை எப்போதும் நேர்மையாக வெளிப்படுத்துவார்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை சமரசம் செய்ய அதிக முயற்சிகள் எடுப்பார்கள். இவர்களுக்கு பிரச்சனைகளை வளர்ப்பது பிடிக்காது. ஏனெனில், அதனால் உறவு முறியும் என்பதைப் புரிந்துகொண்டு, சமாதானமாகப் போவதையே அதிகம் விரும்புவார்கள்.
ஆழமான அன்பு: உண்மையான அன்பு என்பது எதையும் எதிர்பாராதது. உங்களது குறைபாடுகள் பலவீனங்கள் அல்லது கடந்த கால தவறுகள் எதையும் பொருட்படுத்தாமல், ஆழமான அன்பை வெளிப்படுத்துவார்கள் உண்மையான காதலர்கள். இது இருவருக்கு மத்தியில் புரிதலையும் அன்பையும் அதிகரிக்கும்.
இந்த ஆறு அறிகுறிகள் காதலர்களிடம் இருந்தால் அவர்களது காதல் உண்மையான காதல் என அர்த்தம். உண்மையான காதல் என்பது உடல் கவர்ச்சிக்கும் அப்பாற்பட்டது. எல்லாவிதமான சோதனைகளையும் தாங்கும். எனவே, இந்த அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, உங்களது உறவை எப்படி கொண்டு செல்லலாம் என நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.