
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பவர்கள் இவர்கள்தான் என்று துல்லியமாகக் கூறி விட முடியாது. சில நேரங்களில் அம்மா சிக்கனமாக இருப்பார். சில நேரங்களில் அப்பா சிக்கனமாக இருப்பார். ஆதலால் யார் எப்படி சிக்கனமாக இருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வீட்டில் காய்கறி குறைவாக இருந்தாலும் அதை வைத்து சூப்பராக சமாளிப்பவர்கள் அம்மாக்கள்தான். அதேபோல், கடைக்குச் சென்றால் வீட்டில் என்னென்ன காய் இருக்கிறது என்பதை கவனித்து, இல்லாததை வாங்கி, வாங்கியதையே திரும்ப வாங்காமல் வெரைட்டியாக சமைப்பதற்கு தகுந்த மாதிரியான காய்கறிகளையும் வாங்கி வருபவர்கள் அம்மாக்கள்.
அதேபோல், வீட்டிற்கு எத்தனை விருந்தாளிகள் வந்தாலும் அவர்களோடு சிரித்து பேசிக்கொண்டே அடுக்களை வேலைகளை அருமையாக முடிப்பவர்கள் அம்மாக்கள்தான். மேலும், துணிமணிகள் வாங்க பல கடைகள் சுற்றினாலும், வாங்கியதையே திரும்ப வாங்காமல் ட்ரெண்டிங்குடன் வாங்கி வருவார்கள்.
அதேபோல் நகை வாங்கினாலும் சேமிப்பில் உள்ளதைக் கொண்டு வாங்கி வருவார்கள். அதிகக் கடன் வாங்குவதை விரும்ப மாட்டார்கள். கூட்டாக சேர்ந்து ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று வந்தாலும் அவரவர் பங்குக்கான காசு பணத்தை கொடுத்து விடுவார்கள். இது ஒவ்வொன்றிலும் சிக்கனம் பிடித்து சேமிக்க வழி வகுப்பவர்கள் அம்மாக்கள்.
தந்தைமார்கள் கடைக்குச் சென்றால் வீட்டில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்கள். எந்தெந்த காய்கறிகள் தரமானதாக இருக்கிறதோ அது வீட்டில் இருந்தாலும் சரி, எவ்வளவு காசு ஆனாலும் சரி அப்படியே வாங்கி வந்து விடுவார்கள். அதேபோல் சமைப்பதற்கு என்றைக்காவது ஒரு நாள் கிச்சனுக்குள் நுழைந்தால் சூப்பராக சமைத்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். ஆனால், அவர்கள் சமைத்த இடத்தை துடைத்து சுத்தம் செய்வதற்கே சில மணி நேரம் ஆகிவிடும். அதோடு, ஒரு வாரத்திற்கான எண்ணெய் சமையல் பொருட்கள் ஒரே நாளில் தீர்ந்து விடும். இதிலிருந்து சிக்கனத்தை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், புடைவை துணிமணி வாங்கச் சென்றால் கடந்த ஆண்டு துணைவியாருக்கு எந்தக் கடையில், எந்தப் புடைவை வாங்கினாரோ தப்பாமல் தவறாமல் அதையே அடுத்த ஆண்டும் வாங்கிக் கொடுத்து விடுவார். அம்மா கேட்டால், ‘பரவாயில்லை கட்டிக்கோ. அடுத்த வருஷம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.
நகையிலிருந்து பழங்கள் வரை எதை வாங்கினாலும் பேரம் பேசுவது தந்தைமார்களுக்கு கிடையாது. கூட்டாக ஒரு இடத்திற்கு சென்றாலும் அத்தனை செலவுகளையும் அவரே செய்து விடுவார். மற்றவர்கள் காசு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்.
இன்னும் சில தந்தையர், மனைவியின் சம்பளத்தை அவரின் அக்கவுண்டுக்கே வரும்படி செய்து வைத்து விடுவார்கள். மனைவிக்கு அன்றாட செலவுக்கு மாத்திரம் பணம் கொடுப்பார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் ஒரே மாதிரியாக நகை, துணி என்று ஆரம்பம் முதலே செய்து வருவார்.
தாய்மார்கள் கணவரின் சம்பளத்தை தன்னுடைய அக்கவுண்டிற்கு வருமாறு செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டதில்லை. அதேபோல், தாய்மார்கள் எவ்வளவுதான் சமைத்தாலும் பெரிய பெரிய ஹோட்டல்களிலோ, திருமணம் போன்ற பெரிய விசேஷங்களிலோ விருந்து செய்ய முன்னிலை வகித்து முன்பணம் வாங்கி சமையலை செய்து அசத்துவது இல்லை. ஆதலால், அக்காலம் முதல் இக்காலம் வரை சிக்கனத்தில் சிறந்தவர்கள் பெண்கள்தான். பெரும் விருந்து படைக்கப் பிறந்தவர்கள் ஆண்கள்தான்.