மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல; சமயோசிதத்துக்கும் அறிகுறி!

மௌனம்
மௌனம்
Published on

ரிடத்தில் நாம் பேசுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல இடங்களில், பல சூழல்களில் பேசாமல் இருப்பதும் மிகவும் முக்கியமாகும். உளவியல் ரீதியாக எந்த இடங்களில் எல்லாம் பேசாமல் அமைதி காப்பது முக்கியம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

நம்மை விமர்சனம் செய்யும்போது: நம்மை யாராவது விமர்சனம் செய்யும் சமயம் அதை எதிர்கொள்வது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒருவர் நம்மை விமர்சிக்கும் பொழுது நாம் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதில் பலன் இருக்காது. அம்மாதிரி சமயங்கள் மௌனமாக பேசாமல் இருந்து விடுவது நல்லது.

வாக்குவாதம் செய்யும் சமயம்: சில சமயம் பேச ஆரம்பித்து, அந்தப் பேச்சு வாக்குவாதமாக மாறி பெரிய சண்டையில் போய் முடியும். அம்மாதிரி சமயங்களில் வாக்குவாதம் ஆரம்பிக்கும்பொழுதே அதனை வளர்க்காமல், மேற்கொண்டு பேசாமல் மௌனமாகி விடுவது நல்லது.

கோபமாக இருக்கும்பொழுது: நாம் கோபமாக இருக்கும் சமயம் கண்டிப்பாக பேச்சைத் தவிர்த்து விடுவது நல்லது. கோபம் கண்ணை மறைக்கும். தேவையில்லாத வார்த்தைகளைப் பேசத் தூண்டும். அந்த மாதிரி சமயங்களில் நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடுவோம்.

தெளிவில்லாத நிலையில்: எந்த விஷயமாக இருந்தாலும் அதைப்பற்றி உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே பேச வேண்டும். ‘இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ’ என்று யூகித்துக் கொண்டு, அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுவதைத் தவிர்த்தல் அவசியம்.

துக்கப்படும் சமயம்: நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் துக்கத்தில் இருக்கும்பொழுது ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று கண்டதையும் பேசி அவர்களை மேலும் கலங்கடிக்காமல் அமைதியாக, உறுதுணையாக, அவருக்கு ஆறுதலாக பக்கபலமாக இருப்பதே சிறந்தது.

புரளி பேசுபவர்கள் முன்பு: மற்றவர்களைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் பேசி புரளி கிளப்புபவர்களிடம் பேசாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதுடன், அம்மாதிரி செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்காமல் இருக்கவும் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவாசப் பிரச்னைகள் சீராக சில எளிய ஆலோசனைகள்!
மௌனம்

முக்கியமான முடிவு எடுக்கும் முன்பு: ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சமயத்தில் குழப்பத்தையும், கவனச் சிதறலையும் தடுக்க அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. இதனால் நம்மால் நன்கு சிந்தித்து நல்ல ஒரு முடிவை எடுக்க‌ முடியும்.

கிசுகிசு பேசுபவர்களிடத்தில்: நம்முடன் இல்லாதவரைப் பற்றி அவரின் முதுகுக்குப் பின்னால் பேசுவது மிகவும் தவறு. அம்மாதிரி இடங்களில் மௌனம் காப்பது நல்லது. இல்லையென்றால் நாளை நாம் இல்லாதபோது நம்மைப் பற்றியும் இப்படி கிசுகிசுக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நண்பர்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பகிரும் சமயம்: நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை உங்களிடம் பகிரும்பொழுது கருத்து கூறுகிறேன் பேர்வழி என்று இடையில் புகுந்து எதையும் பேசாமல் அவர்கள் கூறுவதை மௌமாக காது கொடுத்து கேட்பது மட்டுமே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com