

ஒரு உடை அழகாக இருந்தாலோ அல்லது அதை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலோ அதன் விலையை சிறிதும் பொருட்படுத்தாமல் உடனே கிரெடிட் கார்டையாவது பயன்படுத்தி வாங்கி விடுவது சிலரின் வழக்கம். இப்படி அதிகம் யோசிக்காமல் பல பொருட்களை வாங்கி குவிப்பவர்கள் அதிகம். அதுவும் ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்து விட்டால் அதனை எப்படியாவது வாங்கிட வேண்டும் என்று சிலர் பரபரக்கிறார்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் நேராக சம்பந்தப்பட்ட அந்தக் கடைக்குச் சென்று வாங்குவோம். அதுவும் அந்த பொருட்களுக்கான தேவை, அவசியம் இருந்தால் மட்டுமே வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் என்பதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே எதையும் வாங்க முடியும் என்பதால் தேவை இருக்கோ இல்லையோ பார்த்ததும் வாங்கிவிடத் தோன்றுகிறது.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் நம்மை மறைமுகமாக ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாக்குகின்றன. நமக்கே தெரியாமல் நாம் இதில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அடிக்கடி இம்மாதிரி தளங்களுக்குச் சென்று பார்ப்பதும் வாங்குவதுமாக ஆன்லைன் ஷாப்பிங்கில் அடிமையாகி இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என்பது ஒருவிதமான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்தத் தேவையில்லாத பழக்கத்தால் நிதி சிக்கல்கள், உறவில் விரிசல், வாழ்க்கை தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அவசர உலகில் வசதியான ஒன்றாக இருக்கிறது. இதில் பல்வேறு ஆஃபர்கள் மூலம் நம்மை வாங்கத் தூண்டி சிக்க வைக்கிறார்கள். ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், ஆசையையும் தரும் இந்த ஆஃபர்கள் நம்மை தேவையில்லாத பொருட்களையும் வாங்கிக் குவிக்க வைக்கிறது. மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு அல்லது தனிமை உணர்வு போன்றவற்றை சமாளிப்பதற்காக மக்கள் ஷாப்பிங் செய்வதாக உளவியல் காரணங்கள் கூறுகின்றன. இது தனிமை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து தற்காலிக நிவாரணம் தருவதாகவும், ஷாப்பிங் செய்வது மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் என்பது சிறந்த போதையாகக் கருதப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை எளிதாக அணுக முடிவதும், தள்ளுபடிகள், எண்ட் சேல் போன்றவற்றின் மூலம் நம்மை அடிக்கடி ஷாப்பிங் செய்யத் தூண்டுவதும் இதில் நம்மை அடிமையாக இருக்க வைக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில உருப்படியான டிப்ஸ்:
ஆன்லைன் ஷாப்பிங் ஆசை வரும்போது எல்லாம் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயற்சிக்கலாம்.
நண்பர்களை போனில் அழைத்து அல்லது நேரில் சந்தித்து அரட்டை அடிக்கலாம்.
ஜாகிங், வாக்கிங் போன்ற சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்து கவனத்தை திசை திரும்பலாம்.
முக்கியமாக, ஃபோனில் இருந்து ஷாப்பிங் ஆப்ஸை (apps) நீக்கி விடுவது இந்த பழக்கத்திலிருந்து வெளிவர சிறந்த வழியாகும்.
ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்த அறிவிப்புகளை நிறுத்துவது (turn off notifications) வாங்கத் தூண்டும் எண்ணத்தைக் குறைக்கும்.
டிவியில் ஒரு நல்ல படம் பார்க்கலாம் அல்லது வெளியில் சென்று வரலாம்.
ஏதாவது வாங்கத் தோன்றினால் உடனடியாக வாங்காமல் ஒரு நாள் முழுக்க காத்திருந்து, வாங்கும் விஷயத்தைப் பற்றி யோசிப்பதை தள்ளிப்போடுவதுடன், இது தேவையா என்று யோசிக்கவும் வேண்டும்.
இம்மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்திலிருந்து மெதுவாக விடுபட முடியும்.