எளிமை என்பது ஏழ்மை அல்ல!

எளிமை என்பது ஏழ்மை அல்ல!

ரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான். எளிமை என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று எளிமைகளில் பலவகை உண்டு.

பொருள் எளிமை (Material Simplicity): ஒருவர் பெரும் செல்வந்தராக இருப்பார். ஆனால், தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்தான் எளிமைக்குச் சொந்தக்காரர். அவர் சாதாரண தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத்தானே தவிர, தட்டையல்ல என்பது! அவர் உடையிலும், பயன்படுத்தும் பொருட்களிலும் அவரது எளிமைத் தெரியும்.

நடத்தையில் எளிமை (Behavioural Simplicity): நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது. பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது.

செயல்முறையில் எளிமை (Procedural Simplicity): செயல்முறை எளிமை என்பது, தனது அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது மற்றும் செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது. எதையும், எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்.

உணவில் எளிமை (Food Simplicity): உடலும் உள்ளமும் நலம் பெறும் வகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவை உண்பது.

மொழியில் எளிமை (Dress Simplicity): மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும் அனைவருக்கும், குறிப்பாக அந்தத் தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது.

எளிமை என்பது ஏழ்மை அல்ல; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, நோயற்ற உடல், நிறைந்த செல்வம், போட்டி, பொறாமையற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com