1. உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்: உங்கள் குழந்தை உங்களை விரும்பும்வண்ணம் உங்களுடைய பேச்சு, செயல், உட்காரும், நிற்கும் விதம் இருக்கிறதா என்று உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள் என்றால் அவர்களுடன் போதுமான நேரத்தை செலவழியுங்கள்.
2 சரியான சூழ்நிலையை உருவாக்கவும்: குழந்தைக்கு ஏற்ற அன்பான, ஆதரவான, மற்றும் உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள். உண்மையில் இங்கே அவர்களுக்கு கற்பிக்க எதுவும் இல்லை. அவர்கள் ஆபத்தை நோக்கி நகர்ந்தால், உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், குழந்தைகளால் உங்களை விட மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த முடியும். அவர்களிடமிருந்து அந்த அம்சங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒருபோதும் பின்பற்ற முடியாத கட்டளைகளை அவர்களுக்குக் கற்பிக்காதீர்கள்.
3. பொம்மைகளைத் தவிர்க்கவும்: குழந்தைகள் விளையாடுவதற்கு வெறும் பொம்மைகளை வாங்கிக் கொடுத்துப் பயனில்லை. இந்த பொம்மைகளை வாங்குபவர்கள் மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதற்குப் பதிலாக, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது, மரத்தில் ஏற வைப்பது, அவர்களுடன் எங்காவது நடந்து செல்வது, நீச்சல் அடிப்பது போன்றவற்றைச் செய்தால், குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வளரும்.
4. இருபது வருடத் திட்டம் தீட்டுங்கள்: குழந்தையை வளர்ப்பது என்பது அடுத்த தலைமுறையை உருவாக்குவது. ஏதோ ஒரு வகையில் அடுத்த தலைமுறையாவது நாம் இருக்கும் இடத்தை விட ஒரு படியாவது முன்னேற வேண்டும். அதை நோக்கி நாம் ஆசைப்பட்டு உழைக்க வேண்டும். அடுத்த தலைமுறையும் நம்மைப் போலவே இருக்கப்போகிறது என்றால் என்ன பயன்? குழந்தை சிறப்பாக வளர்வதற்கான இருபது ஆண்டுத் திட்டம் தீட்ட வேண்டும்.
5. இயற்கையோடு இணைந்திருங்கள்: குழந்தைகளுக்காக பெற்றோர் நேரத்தை அர்ப்பணிக்க வேண்டும். வாழ்க்கையில் உள்ள அனைத்து நேர்மறை, அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் இருக்க வேண்டும் என்றால் இயந்திரத்தனமான உலகில் இருந்து அவர்களை ஒரு வருடத்தில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு இயற்கை சூழ்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
6. உணர்ச்சி பாதுகாப்பை வழங்கவும்: தற்போது உணர்ச்சிவசப்படுவது என்பது எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாள்வது என்று ஆகிவிட்டது. ஒருவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என்று சொன்னால், அவர் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டார் என்று அர்த்தம். இந்த;ஃப் கருத்தை மாற்ற வேண்டும். மகிழ்ச்சி, பேரின்பம், அன்பு, பக்தி, பரவசம் ஆகிய நேர்மறை உணர்ச்சிகளைக் கையாண்டு, பிள்ளைகளுக்கு உணர்ச்சி பாதுகாப்பு தர வேண்டும்.
குழந்தை வளர்ப்பு பற்றி ஜக்கி வாசுதேவ் கூறியதிலிருந்து…