அறுபது வயதிலும் ஆக்டிவாக இருக்க உதவும் ஆறு வழிகள்!

Six Ways to Stay Active in Sixties
Six Ways to Stay Active in Sixtieshttps://fiftyforward.org
Published on

‘வயசு அறுபது ஆச்சு. இனிமேல் எனக்கென்று தனியாக என்ன இருக்கிறது’ என்று அலுத்துக்கொள்பவர்கள் பலரையும் நாம் தினம் தினம் பார்க்கலாம். வயசு அறுபது ஆனால் என்ன? இனிமேல்தான் வாழ்வில் பல்வேறு சந்தோஷங்களையும் அனுபவிக்க நேரமும் காலமும் கூடி இருக்கிறது என்று வாழ்வை பாசிடீவ்வாக எடுத்துக்கொண்டால் அறுபது வயதிலும் வாழ்வை ஆனந்தமாக அனுபவிக்கலாம். அறுபது வயதிலும் வாழ்வில் ஆக்டிவாக இருக்க உதவும் அறு வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அதிகாலை எழுவது: வயதாக ஆக தூக்கமின்மை என்பது இயற்கையான ஒன்றுதான். இரவில் வெகு நேரம்  விழித்திருப்பதும், காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதும் வயதாகிவிட்டால் வாடிக்கையான ஒன்று. இது நல்லதுதானே? ‘தூக்கமே இல்லை’ என புலம்பாமல் அதிகாலை எழும்போது கடமைகளை சரியான நேரத்தில் முடிக்க நமது உடல் தயாராகிவிடும். ஆம், காலைக்கடன்களை சிரமம் இன்றி முடித்துவிட்டு நமக்குப் பிடித்த நடைப்பயிற்சி அல்லது மிதமான யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தினால் அன்றைய நாள் இனிமையாகக் கழியும்.

2. வீட்டில் சிறு சிறு உதவிகள்: வயதாகிவிட்டதால் குடும்பப் பொறுப்புகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாமே அனைத்தையும் முன்நின்று செய்தது போய், அதைச் செய்யும் நமது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவலாமே. காலையில் எழுந்து காய்கறி கடைக்குச் செல்வது, பால் வாங்கச் செல்வது, பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது என்று சிறு சிறு வேலைகளை ஈகோ இன்றி பகிர்ந்து கொண்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி என்பதுடன், குடும்பத்தில் மதிப்பும் உயரும். குறிப்பாக, நம் வேலைகளை முடிந்த வரை யாரையும் எதிர்பாராமல் நாமே செய்துகொள்ளவும் பழக வேண்டும்.

3. எதையும் எதிர்பாராத குணம்: இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. வயதாக ஆக நாம் பிறரிடம் எதிர்பார்ப்பது அதிகமாகி விடுகிறது. முக்கியமாக அவர்கள் நம்மிடம் பேச மாட்டார்களா? இன்னும் அதிகம் அன்பு செலுத்த மாட்டார்களா? சற்று நேரம் நம்முடன் நேரத்தை கழிக்க மாட்டார்களா என்றெல்லாம் எதிர்பார்ப்போம். இன்றைய காலம் வேறு. இந்த அவசர காலத்தில் நம்மிடம் உட்கார்ந்து பேசுவதற்கோ அல்லது நேரம் கழிப்பதற்கோ அவர்களின் பணி இடையூறாக இருக்கும். இதை மனதில் கொண்டு எதையும் எதிர்பாராமல் இருப்பது நமது மனதிற்கு அமைதியை தரும்.

4. குறை கூறாமல் இருப்பது: இது மிக மிக அவசியமான ஒன்று. நமக்குத்தான் எல்லாம் தெரியுமே? நாம் அனுபவித்ததுதானே இது என்ற நோக்கில்  இளைய சமுதாயம் எது செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவர் வாழும் காலமும் சூழ்நிலையும் வெவ்வேறாக இருக்கும். அந்தக் காலத்தில் இல்லாத அறிவியல் வசதிகள் இன்று எக்கச்சக்கமாக பெருகிவிட்ட நிலையில் இளையவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் வேறாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு குறை கூறாமல் இருந்தாலே உறவுகள் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை அறவே நீக்கும் சில ஆரோக்கிய உணவுகள்!
Six Ways to Stay Active in Sixties

5. நண்பர்களுடன் சந்திப்பு: உங்கள் இளமையான காலத்தை மீட்டெடுக்க இந்த 60 வயதுதான் சரியான தருணம். ஆம், ஓய்வாக இருக்கும் இந்தத் தருணத்தில் உங்கள் உயிர் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது என்பது உங்கள் இளமையை மீட்டுத் தரும் விஷயங்களில் ஒன்று. அடிக்கடி உங்களுக்குப் பிடித்தவர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளுங்கள். பிடித்தமான இடங்களுக்கு நண்பர்களுடன் செல்லுங்கள். மனம் விட்டுப் பேசும்போது மனதுக்கு ரிலாக்ஸுடன் வாழ்க்கையும் ருசிக்கும்.

6. பிடித்த விஷயங்களில் ஈடுபாடு: உங்களுக்கு டென்னிஸ் பிடிக்கும் என்றால் நிச்சயமாக போய் விளையாடுங்கள். ‘எனக்கு வயதாகி விட்டது. இனி இது எதற்கு?’ என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். எத்தனை வயதானாலும் நமது விருப்பங்களுக்கு வயதாவது இல்லை. ஆகவே, நீங்கள் விரும்புவதை செய்வதற்கு தயாராக இருங்கள். ஐஸ் பிடிக்கும் என்றால் மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடும்போது மனதுக்குள் உற்சாகம் பெருகி அந்த உற்சாகம் உடலிலும்  நோய்களை தள்ளிப்போடும்  என்பதுதான் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com