சுகமான உறக்கம்...!

சுகமான உறக்கம்...!

வாழ்விடம் என்பதில் உண்டு, உறங்கி வாழும் வீடே முக்கியமானதாகும். வீட்டிற்கு அருகில் திறந்தவெளியில் அல்லது மேற்கூரை மட்டுமே உள்ள இடத்தில் இரவு முழுவதும் தூங்கும் வாய்ப்பு, பெரும் பாக்கியசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

அதற்கடுத்து பனை மற்றும் தென்னை ஓலைகளாலும், சுட்ட மண் ஓடுகளாலும் இரு அடுக்காக வேயப்பட்ட மேற்கூரைகள் சிறப்பானவை. இவற்றில் நிறைய ஜன்னல்களைக் கொண்ட அறைகளில் தூங்குவது நல்லது. அறையின் பக்கவாட்டுச் சுவர்களுக்கும் மேற்கூரைக்கும் சுமார் அரை அடி இடைவெளி இருப்பது மேலும் சிறப்பு.

இப்படிப்பட்ட அறைகளில் தூங்குபவர்கள் வெளிவிடும் சூடான அசுத்தகாற்று மேலே சென்று, கூரையின் இடைவெளி வழியாகத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. அதனால் அறையினுள் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப குளிர்ந்த வெளிக்காற்று தொடர்ந்து உள்ளே வந்துகொண்டே இருப்பதும்தான் இந்த வீடுகளின் சிறப்பு அம்சம்.

அதோடு இந்தக் கூரைகளின் பிரமிடு போன்ற அமைப்பு, சூரியன் மறைந்தவுடனே வேகமாகக் குளிர்ந்து இனிய, ஆழ்ந்த தூக்கத்துக்குப் பேருதவியாக இருக்கும். ஆனால் பெரும்பாலானோர், தற்போது கான்கிரீட் வீடுகளில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கான்கிரீட் கூரைகள், சூரிய வெப்பத்தை ஈரத்து உள்வாங்கிக் கொண்டிருப்பதால், பகல் முழுவதும் தொந்தரவு இல்லாமல்தான் இருக்கின்றன. ஆனால் இரவு, வெளியில் வெப்ப நிலை குறையத் தொடங்கியதும் தன்னிடம் தேங்கியுள்ள சூட்டை மேலும் கீழும் வெளியேற்றுகிறது.

நிறைய வீடுகளில் ஜன்னல் / கதவின் உயரத்திற்கு மேல் சுடுகாற்று வெளியேற போதுமான வழிகள் இருப்பதில்லை. போதாக்குறைக்கு மின் விசிறி அந்தச் சுடு காற்றை, தூங்குபவர்கள் மீது தொடர்ந்து விசிறியடிக்கின்றன.

உச்சகட்டமாக திருட்டுபயம், கொசு பயம் என்று அனைத்து ஜன்னல் கதவுகளும் மாலையிலிருந்தே அடைத்தும் வைக்கப்படுகின்றன. அதோடு கொசுவத்திகளால் மிச்சம் மீதி உள்ள நல்ல காற்றும் விஷமாய் மாறிவிடுகிறது.

நிறைய வீடுகளில் குளியலறைகள் மற்றும் கழிவறைகள் முழவதும் வழுவழுப்பான ஓடுகள் ஒட்டப்படுகின்றன. வயதில் மூத்தவர்கள், இதில் வழுக்கி விழுந்து எலும்புகளை உடைத்துக்கொண்டு படும் சிரமம் சொல்லி மாளாது.

நம் சொந்த வீட்டில், நாமே திருடனைப் போல் ஒவ்வொரு அடியாய் கவனமாக பார்த்து பார்த்து நடக்க வேண்டுமா? என்னே நம் விழிப்புணர்வு!

எது எப்படி இருப்பினும், தற்போது குடியிருக்கும் வீட்டில் சுகமாக வாழ வழி உண்டா?

மொட்டை மாடியிலும், பால்கனிகளிலும் தோட்டம் அமைப்பதன் மூலம் வீட்டுக்குக் குளிர்ச்சியும், காய்கறி கீரைகளும் சுலபமாக கிடைக்க வழி உண்டு.

தண்ணீரை நேரிடையாக ஊற்றியும் வளர்க்கலாம். எளிய செலவில் 50 லிட்டர் பிளாஸ்டிக் கேனைப் பயன்படுத்தி சொட்டு நீர் மூலமும் வளர்க்கலாம். இன்னும் அதிக பலன்களைப் பெற, நிழல் வலைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முயற்சி மட்டும் இருந்தால், பழைய பாக்கெட்டுகள் போன்ற வீணாகும் பொருட்களைப் பயன்படுத்தியே தரமான வெண்டை, தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, புதினா போன்றவற்றை உற்பத்தி செய்து, குடும்ப ஆரோக்கியத்தையே மேம்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டிற்கருகில் மரங்கள் இருந்தால், அதில் மிளகுக் கொடியை வளர்த்தால் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு வருமானமும் கிடைக்கும்.

வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் உடனே மரங்களை நட்டு வளர்க்கலாம். இடம் இல்லாதவர்கள் சுவரில் ஒட்டி வளரும் அலங்காரச் செடிகளை வளரத்தும், சுவர்கள் சூடாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரையில் சிறு சிறு சீரான இடைவெளிகளை உண்டாக்கி, மண் தெரியும்படி செய்துவிட்டால், மழை நீர் தேங்காது. அந்த இடங்களில் பற்பல வளர்ந்து நிறைய வெப்பத்தைக் குறைத்துவிடும்.

வீணாகும் மொட்டை மாடி மழை நீரை, துணியால் வடிகட்டி, பெரிய தொட்டியில் நிரப்பி சேமித்து வைத்துக்கொண்டால், நீண்ட நாட்களுக்கு நல்ல குடிநீர் கிடைத்துவிடும். தொட்டிக்குள் சூரிய வெளிச்சம் புகாதபடி வைத்திருந்தால் போதும், வருடக்கணக்கில் நீர்கெடாது.

தற்போது உபயோகிக்கும் எந்த நீரைக் காட்டிலும், இறைவனால் காய்ச்சி வடிக்கப்பட்ட இந்த மழைநீர் மிகவும் தூய்மையானது. ருசியானது. கெடாதது. இலவசமாக கிடைக்கக் கூடியது.

கொசுக்கள் மீது நாம் குற்றம் சொல்லக்கூடாது. அசுத்தமானவற்றைச் சாப்பிட்டு, ஊரை சுத்தமாக வைத்திருக்கவே, கொசு, பன்றி போன்றவற்றை இறைவன் படைத்துள்ளார். அவனருளால்தான், அவ்வளவு மோசமான இடத்திலும் அவற்றால் வேகமாகப் பல்கிப் பெருகி வாழ முடிகிறது.

ஓரிடத்தில் நிறைய பேர் இருக்கும்போது, நன்கு கவனித்தால், ஒரு சிலரை மட்டும் நிறையக் கொசுக்கள் கடிப்பது தெரியும்.

மலம், சிறுநீர், மாதவிலக்கு போன்ற கழிவுகள் சரியாக வெளியேறாவிட்டாலும் இரவு வெகுநேரம் தூங்காமல் இருந்தாலும் அதிக மன உளைச்சல் / டென்ஷனாலும் நமக்கு ரத்தம் கெட்டுபோய் விடுகிறது. அதை உணர்ந்து, அந்த அசுத்த இரத்தத்தைத் தேடித்தான் நிறைய கொசுக்கள் வருகின்றன.

அதே இடத்தில் இருக்கும் வேறு சிலரிடம் மிகக் குறைவான கொசுக்களே வரும். விசாரித்தால், அவர்கள் நன்றாகத் தூங்குபவர்களாகவும் நன்கு பசி வந்தபின் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமான ரத்தம் கொசுக்களுக்கு பிடிக்காது என்பதற்கு இவர்களே சாட்சி.

ரூபாய் இருநூறு, முந்நூறுக்குக் கிடைக்கும் விதவிதமான கொசு வலைகள் பத்து, இருபது வருடங்கள் உழைக்கக் காத்திருந்தும், அவற்றைப் பயன்படுத்த மறுப்பதேன்? ஒரு கொசுகூட கடிக்காது. ஃபேனும் தேவையில்லை. சிந்திப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com