

கோடை ஆரம்பித்து விட்டாலே வெப்பமும், வியர்வையும் நம்மை சோர்ந்துபோக வைத்துவிடும். கரண்ட் பில் ஏறிவிடும் என ஏசி போடவும் தயங்குவோம். இதற்கெல்லாம் தீர்வாக பெரிய பட்ஜெட் இல்லாமல் எளிய முறையில் குளிர்ச்சியாக்கி வீட்டை கூலாக்க சில வழிகள்.
இந்தக் கோடைக்காலம் முடியும் வரை காலை மாலை இரு வேளையும் வீட்டைச் சுற்றி தண்ணீர் தெளிக்கலாம்.
வீட்டின் வெளிப்புற பெயிண்டிங் அடர்த்தியான வண்ணங்களில் இல்லாமல், லைட் கலராக அடிக்கலாம். வெளிர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்காமல் பிரதிபலிக்கக் கூடியது.
தற்போது பெயிண்டிங் என்பது சுவருக்கு வண்ணத்தை கொடுப்பதைத் தாண்டி பலவகைகளில் வீட்டை மழை, வெப்பத்தில் இருந்து காக்கிறது. கொஞ்சம் மெனக்கெடல் மட்டுமே தேவை.
பிங்க், ஐவரி, வெளிர் பச்சை, ஆஃப் ஒயிட் என பல லைட் ஷேடுகளில் வண்ணங்களை வாங்கி அடித்துவிட பார்வைக்கும் உடலுக்கும் பாதுகாப்பைத் தருகிறது. அழகோடு, ஆரோக்யமும் கேரண்டி என பல பெயிண்ட் பிராண்ட்கள் நம்மை தேர்ந்தெடுக்க வைப்பதில் போட்டியிடுகின்றன.
மண்தரை உள்ள இடங்களை மாட்டுச் சாணம் கொண்டும் மெழுகி சுத்தமாக வைக்க குளிர்ச்சியாக இருப்பதோடு கிருமிகள் இல்லாமலும், வீடும் அழகாக மாறும்.
ஜன்னல்களை மூங்கில் தட்டி கொண்டு கவர் செய்ய காற்றோட்டமாக இருக்கும். மாலை வேலைகளில் திரைச்சீலைகளை ஒதுக்கி வெளி காற்று படும்படி வைக்க வீட்டிற்குள் வெப்பம் தங்காது.
வெளிர் நிற திரைச்சீலைகளை அறைக்கு, ஜன்னல்களுக்கு மாற்றி அமைக்க காற்று குளிர்ச்சியாக இருக்கும் உணர்வைத் தரும்.
டைல்ஸ் தரையை முடிந்தால் தினமும் தண்ணீர் கொண்டு மாப் செய்ய வீடு குளிர்ச்சியாக இருக்கும்.
வீட்டின் சமையலறை, குளியலறையில் எக்ஸ்ஹாஸ்ட் மின்விசிறியை உபயோகிக்க வெப்பம் மற்ற இடங்களில் உள்ளதை வெளியேற்றி காற்றை குளிர்விக்கும்.
வீட்டின் ஹாலில் பெரிய பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு டேபிள் ஃபேன் முன் வைத்துவிட கூல் கூல்தான்.
இந்த சீசனில் இயற்கை நீருற்றுகளை வீட்டினுள் வைத்தால், அழகு தருவதோடு, குளிர்ச்சியான காற்றிலும் மனதை நிறைக்கும்.
பசுமையான செடி, கொடிகளை வீட்டைச் சுற்றி வளர்த்து தண்ணீர் இரண்டு வேளையும் விட வீடு அனலாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
வீட்டினுள் ஃபேன், லைட் தொடர்ச்சியாக போடாமல் இருப்பதும் அனலை உண்டாக்காது. மொட்டை மாடியில் மாலை வேளைகளில் தண்ணீரை சணல் சாக்கின் மீது ஊற்றிவிட இரவு முழுவதும் குளிர்ச்சியான காற்றை பரப்பும். வீட்டினுள் அனல் இறங்காது. மாடி தோட்டம் போடுவதும் வீட்டைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.
இவ்வாறு பல வகைகளில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டு கோடையைக் கொண்டாடலாம்.