மகிழ்ச்சியான வாழ்வுக்கு சில மந்திர ஆலோசனைகள்!

மகிழ்ச்சியான வாழ்வுக்கு சில மந்திர ஆலோசனைகள்!
Published on

ப்பூவுலக வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை பணம். அதனால் உங்களுக்கான வருவாயை முதலில் எப்படி நிர்வகிப்பது என்பதில் தெளிவு ஏற்பட்டால் வாழ்க்கையை இனிமையாக நகர்த்த பேருதவியாக இருக்கும். அதனால் வரும் வருமானத்துக்கேற்றபடி செலவுகளை மதிப்பிடுவதற்கு சற்று நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

எதிர்வரும் வருங்காலச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, வருமானத்தில் சிறிதை சேமித்து வைக்கவும்  யோசியுங்கள். அது உங்கள் அவசர காலத்துக்கு பேருதவியாக இருக்கும். அதற்காக அனைத்து சந்தோஷங்களையும் இழந்துதான் அந்தப் பணத்தை நீங்கள் சேமித்து வைக்க வேண்டுமென்பதில்லை.  சில அநாவசிய கேளிக்கை செலவுகளைக் குறைத்தாலே அந்தப் பணம் உங்கள் சேமிப்பில் தானாக வந்துவிடும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எப்போதும் இணைந்திருப்பதே பெரிய பலம் ஆகும். இந்த அவசர உலகில் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பது அரிதுதான். ஆனாலும் அதற்காக சற்று நேரத்தை ஒதுக்குவது உங்களை மட்டுமின்றி, உங்கள் உறவு, நட்புகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒன்றாகும்.

விழா மற்றும் விசேஷங்களை பெரும்பாலும் புறக்கணிக்காதீர்கள். முடிந்தால் குடும்பத்தினரோடு சேர்ந்து சென்று அதில் கலந்துகொள்ளுங்கள். அந்த விழா, விசேஷத்தில் உறவு மற்றும் நட்பில் உள்ள யாரையும் புறக்கணிக்காமல் அனைவரோடும் சேர்ந்து உரையாடுங்கள், அவர்களோடு சேர்ந்து உணவருந்துங்கள். உங்கள் குடும்ப அங்கத்தினர்களை அவர்களுக்கு அடிக்கடி அறிமுகப்படுத்தி வைக்க மறக்காதீர்கள். அதுவே உறவு மற்றும் நட்பை பலப்படுத்தும் டானிக் ஆகும்.

நீங்கள் மிகவும் பிசியான நபராக இருக்கலாம். அதற்காக மனைவி, குழந்தைகளை ஒருநாளும் கவனிக்காமல் இருந்துவிட வேண்டாம். தினமும் அவர்களிடம் பேசுவதற்கு சற்று நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்தப்  பேச்சில் அவர்களின் நலன் மற்றும் படிப்பு போன்றவற்றை கேட்டறியுங்கள். அதுவே அவர்களிடம் ஒரு அன்புப் பாலத்தை உருவாக்க  உதவும். அதுமட்டுமின்றி, அது உங்களது அன்பு, அரவணைப்பு மற்றும் கண்காணிப்பு எப்போதும் அவர்களின் மேல் உள்ளது என்பதை அவர்களின் நினைவில் நிறுத்தும்.

உங்களைப் பற்றியும் உங்கள் நிலை பற்றியும் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்களோடு விவாதிக்கத் தயங்காதீர்கள். இது குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் பொருந்தும். எதையும் மனம் திறந்து பேசுவது ஒன்றே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தருவதாகும்.

இதுபோன்று சிறு சிறு செயல்களைச் செய்வதே, வாழ்க்கையில் மலையென மலைக்க வைக்கும் பெரிய பெரிய சாதனைக் கோட்டைகளை திறக்கும் மந்திர திறவுகோளாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com