விருந்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்!

விருந்து
விருந்து

றவினர் மற்றும் விருந்தினர் யாரையாவது நமது வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் போதும் அல்லது அவர்கள் வீட்டுக்கு நாம் விருந்துக்கு செல்லும்போதும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் உள்ளன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

விருந்துக்கு அழைக்கும்போது: விருந்தோம்பல் என்பது நமது பண்பாடுகளில்  முக்கிய அங்கம் வகிக்கிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் என்றால் யாரையெல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் மறக்காமல் அழைப்பது முக்கியம். வீட்டிற்குள் இடம் இல்லை என்றால் மொட்டை மாடி அல்லது காலி இடங்களில் சாமியானா பந்தல் போட்டு, இடத்தை முன்கூட்டியே சுத்தப்படுத்துதல் முக்கியம். நம்மால் சமைக்க முடியாவிட்டால் சமையல்காரர் பரிமாறுபவர்களை ஏற்பாடு செய்துவிட்டு நாம் மேற்பார்வை பார்க்கலாம்.

சமைக்கும் இடமும் பரிமாறும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். விருந்தாளிகள் வரும் முன்னரே விருந்து சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். விருந்துக்கு யாரையும் காக்க வைக்கக் கூடாது. வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் செல்லுங்கள். ஜாதி, மத அந்தஸ்து பேதம் பார்க்காமல், அனைவரையும் சமமாக மதித்து, உபசரிப்பதே நாகரிகம்.

விருந்தினர்களில் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு ஏற்ப உப்பு, இனிப்பு குறைந்த உணவுப் பொருட்களும் தனியாக, தயாராக இருக்க வேண்டும். அதோடு, எல்லோருக்கும் எல்லா உணவுப் பொருட்களும் பரிமாறப்படுகின்றனவா என்று கண்காணிப்பது அவசியம்.

விருந்தினர் முன்னிலையில் வீட்டுப் பிரச்னைகள், விவகாரங்கள் பற்றி பேச்சு எடுக்காமல் இருப்பது நல்லது. இலையோ, தட்டோ வைத்ததும் பரிமாறி விட வேண்டும். தாமதம் செய்யக்கூடாது. தண்ணீர் டம்ளர் அல்லது பாட்டில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், கை அலம்பும் இடத்தில் துடைத்துக்கொள்ள சுத்தமான துவாலைகள் அல்லது டிஷ்யூ பேப்பர்கள் வைத்திருப்பது அவசியம்.

விருந்து முடிந்ததும் விருந்தினரை மலர்ந்த முகத்துடன் வழி அனுப்பினால், அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் விடை பெறுவார்கள். தாம்பூலத்துடன் அன்பளிப்பு பொருட்கள் ஏதேனும் கொடுத்து அனுப்புவது சிறந்தது.

விருந்துக்குச் செல்லும்போது: விருந்துக்குச் செல்லும்போது நாகரிகமாக உடை அணிந்து செல்ல வேண்டும். அணியும் நகைகள் அளவோடு இருந்தாலே போதும். ஆடம்பரம் அவசியமில்லை. விருந்து தரும் வீட்டினரை நலம் விசாரித்து அன்புடன் பழகினால் அவர்களும் மகிழ்வார்கள்.

எல்லா பதார்த்தங்களும் பரிமாறப்பட்ட பின்பே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். நாகரிகமாக சாப்பிடுவது ஒரு கலைதான். அவசரம் அவசரமாக அள்ளி விழுங்குவது, அப்பளம் போன்றவற்றை சத்தம் வருமாறு சாப்பிடுவது, நாகரிகம் அல்ல. உரக்க சப்பு கொட்டுவது, ஓசை வரும்படி உறிஞ்சுவது போன்றவை  தவிர்க்கப்பட வேண்டியவை.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் சைடர் வினிகரின் 5 ஆரோக்கிய நன்மைகள்! 
விருந்து

சாப்பிடும்போது சத்தம் போட்டு பேசுவதோ, சிரிப்பதோ தவிர்க்க வேண்டியவை ஆகும். உணவு வகைகள் எப்படி இருந்தாலும் அது பற்றி பலர் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது. விருந்தளிப்பவர்களை தர்மசங்கடப் படுத்தக் கூடாது. வீட்டு பிரச்னைகள், சச்சரவுகளை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணம் அது.

புகைப்பிடிப்பதோ, மது அருந்துவதோ கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கக் கூடாது. விருந்துக்கு வந்த மற்றவர்களிடமும் சரளமாகப் பழகுவது நல்லது. எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்பு பந்தியை விட்டு எழ வேண்டும். விருந்து முடிந்ததும், விருந்து அளித்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எல்லாருடனும் சிறிது நேரம் பேசிவிட்டு, நன்றி கூறிவிட்டு அன்போடு விடைபெற்றுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com