விசேஷங்களில் கண்டு களித்த புரட்சிகர பாத பூஜை!

Some Revolutionary thoughts
Some Revolutionary thoughtshttps://www.facebook.com
Published on

க்கம் பக்கம், தெரிந்தவர், நட்பு வட்டம், உறவினர், குடியிருப்பு வளாகம் என்று ஏதாவது விசேஷங்களுக்கு அழைத்தால், நாம் அதில் மகிழ்ச்சியுடன் பங்கேற்பது உண்டு. அப்பொழுது அங்கே பாத பூஜை செய்யும்பொழுது சில வித்தியாசமான காட்சிகளைக் காண நேர்ந்தது. அதனைப் பற்றியதே இந்தப் பதிவு.

திருமணம்: ஒரு திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் பாத பூஜை செய்வதற்காக பெண்ணின் பெற்றோர்களை அழைத்தனர். அப்பொழுது பெண்ணின் அம்மாவும், அந்தப் பெண்ணின் சகோதரியும் வந்து நின்று தாம்பாளத்தில் காலை வைத்ததும் பெண் பாத பூஜை செய்தார். அவர்களிடம் காரணம் கேட்டபொழுது, பெண்ணின் தந்தை இந்தப் பெண்கள் இருவரும் பிறந்து சிறுமிகளாய் இருந்தபொழுதே வேறொரு திருமணம் செய்து கொண்டு போய் விட்டாராம்?! அதன் பிறகு அவர்களை வளர்த்து, ஆளாக்கி படிக்க வைத்தது அம்மா. அதனால் அப்பா உயிரோடு இருந்தும் அவரை அழைக்காமல் அம்மாவும். சகோதரியும் நிற்க, பெண் பாத பூஜை செய்ய, அதை பெரும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.

கிரஹப்பிரவேசம்: ஒரு தோழி, அவரது கணவரின் சேமிப்புத் தொகையுடன், தனது சேமிப்பையும், அவருக்காகக் கொடுத்த கருணை அடிப்படையிலான வேலையில் சேர்ந்து, பணி செய்துகொண்டே லோன் போட்டு வீடு கட்டினார். பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க, பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன், தாய் நின்று மாலை போட்டுக்கொண்டு ஒன்றாக அமர்ந்து புரோகிதர் மந்திரம் முழங்க, சுப காரியத்தில் ஈடுபட்டார். காரணம் கேட்டபொழுது, ‘என்னை விட இந்த வீடு மிகவும் அருமையாக முடிய வேண்டும்’ என்று அக்கறை காட்டப் போகிறவர்கள் வேறு யாரும் இல்லை. அதற்கான இஎம்ஐ நான்தான் கட்டப்போகிறேன். என்னை விட பெரிதாக யாரும் இதன் வளர்ச்சிக்கு உதவி செய்யப்போவதில்லை. ஆதலால்தான் நானும் எனது மகனுமே இந்த பூஜைக்கு ஒப்புக்கொண்டோம். எங்களுக்கு இல்லாத அக்கறையா மற்றவர்களுக்கு வந்துவிடப் போகிறது’ என்று கூறினார். இதைக்கேட்டு மற்றவர்கள் யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை.

மஞ்சள் நீராட்டு விழா: புஷ்பவதி ஆன ஒரு பெண்ணை அவரது தாயாரே அழைத்து வந்து மனையில் உட்காரவைத்து முதன்முதலாக மஞ்சள், குங்குமம் பூசி சுப காரியத்தைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகுதான் மாமன், மைத்துனர்களுக்கான உரிமையை செய்ய இடம் கொடுத்தார். ‘கணவனை இழந்த அந்தப் பெண் முதன் முதலாக இப்படிச் செய்வதா? அதுவும் மாமன் வீட்டார்கள்தானே இதை முறைப்படி முதன்முதலாகச் செய்ய வேண்டும்’ என்று கூறியவர்கள் பலர்.

அதற்கு அந்தப் பெண், ‘இவளை கடைசி வரையிலும் கண் கலங்காமல் பார்த்து, படிக்க வைத்து, தக்க நேரத்தில் நல்ல மணமகனை தேர்ந்தெடுத்து, மணமுடித்து வைத்து அனுப்பப் போகிறவள் நான்தான். அதேபோல, இதுவரையிலும் நான்தான் அவளுக்கு எல்லாம் செய்து வருகிறேன். இந்த ஒரு நாளில் நான் செய்வதால் என்ன குறைந்து விடப் போகிறது. தாயை விட சிறந்தவர் என்று யாரும் இல்லை. ஆதலால்தான் நானே செய்தேன்’ என்றார். இந்தப் புரட்சிகரமான செயலை அதன் பிறகு யாரும் விமர்சிக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!
Some Revolutionary thoughts

வளைகாப்பு: வளைகாப்பு செய்வதற்கு தாய்தான் முதன் முதலாக பெண்ணுக்கு வேப்ப வளையலை அணிவிக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு அம்மா இல்லை. பெரியம்மாதான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருக்கும் கை செயலிழந்து விட்டிருந்தது. அதனால் அவர், ‘முன் நின்று நாம் செய்வதா?’ என்று தயங்கினார். என்றாலும், அவரையே எல்லோரும் செய்யச் சொன்னார்கள். அவரும் மற்றொரு கையால் வளையலிட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து, இனிப்பு கொடுத்து, அந்தப் பெண்ணிற்கு வாழ்த்து கூறினார். இதனை அவரே செய்ய தயங்கினார் என்றாலும், மற்றவர்கள் அவரை பெருமைப்படுத்த, அவரும் மன அமைதியுடனே அதைச் செய்தார்.

‘பழையன கழிதலும்; புதியன புகுதலும் வழுவல கால வகையினானே!’ என்பதற்கு இணங்க, இந்தக் கால மாற்றத்தை கண்டு ரசித்தோம். பெண்களின் புதிய கோணத்தை, புரட்சிகரமான இந்த செயல்களை, குறிப்பாக மற்றவர்களுக்கு அஞ்சாத தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தோம். உண்டு, களித்து அன்புடனே விடை பெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com