

வாழ்க்கையை ஓரளவு எளிதாக்குவது நாம் எந்த அளவிற்கு பொறுப்புடன் தயாராக இருக்கின்றோம் என்பதைப் பொறுத்தது. வாழ்க்கையை எளிதாக்க எளிமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்வதற்கு சரியான திட்டமிடல், தேவையில்லாததை நீக்குதல், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இது வாழ்க்கையை சுமையின்றி, மகிழ்ச்சியாக வாழ உதவி செய்யும்.
1. திட்டமிடல் & ஒழுங்கமைத்தல்: வாழ்க்கையில் அடுத்த அடுத்தகட்டம் என்ன என்பதும், அதை எப்படி நம் முன்னே இருக்கும் மனிதர்கள் கடந்து வருகின்றார்கள் என்பதையும் நேரில் பார்த்தோ, கேட்டோ, படித்தோ அறிந்து கொள்வதுடன், அதை சிறிது உள்வாங்கி எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டு நடந்தாலே எளிதாக வாழ்ந்து விடலாம். அத்துடன் நாம் செய்யும் செயல்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து திட்டமிடுவது, நேரத்தை மிச்சப்படுத்தி வேலைகளை விரைவாக முடிக்க உதவும். தினசரி இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய முயற்சி செய்யலாம். சிறிய படிகள் கூட பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
2. தேவையற்றவற்றை நீக்குதல்: வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கியமானது குறைந்தபட்ச பொருட்களைக் கொண்டு நிறைவாக வாழ்வதுதான். தேவையில்லாத பொருட்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தேவையற்ற வேலைகளில் இருந்து விடுபடுவது நேரத்தை மிச்சப்படுத்தும். நேரத்தை மட்டும் மிச்சப்படுத்தினால் மட்டும் போதுமா? வாழ்க்கையை மிகவும் எளிதாக்க நடப்பவை எல்லாம் நன்மைக்கே என எண்ணிக் கடந்து வருவதும், கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்வதும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் வாழ்க்கையை சிக்கலின்றி மிகவும் எளிமையாக நடத்த உதவும்.
3. ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சீரான உணவு, போதுமான தூக்கம், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி, நேர்மறையான எண்ணங்கள் போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உண்டாக்குவதுடன், நம்மை சுறுசுறுப்பாகவும், மனதைத் தெளிவுடன் வைத்திருக்கவும் உதவும். அத்துடன் பேசுவதை விட அதிகம் கேட்பது நல்லது. நாம் பேசும்பொழுது அதை சுருக்கமாக புரியும் வகையில் அளவோடு பேசுவது, பிரச்னை இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.
4. நேர மேலாண்மை: நேர மேலாண்மை என்பது ஒருவரின் நேரம், ஆற்றல் மற்றும் கவனத்தை குறிப்பிட்ட செயல்களுக்கு திட்டமிட்டு, கட்டுப்படுத்தி, திறமையாகவும் செயல்படும் ஒரு முறையாகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து இலக்குகளை அடைய உதவும். எனவே, நேரத்தை திட்டமிட்டு செலவழிக்கப் பழகுவது அவசியம். முக்கியமான வேலைகளை முதலில் முடிக்கும் பொறுப்புணர்வு இருந்தால் கடைசி நேரப் பதற்றம் என்பது இருக்காது. விடுமுறைகளில் வேலைகளை தேக்கி வைக்காமல், தினமும் செய்து முடிப்பது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்.
5. மன ஆரோக்கியம்: பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறமையை நமக்குள் உருவாக்கிக் கொள்ளும்பொழுது வாழ்க்கை எளிதாகிவிடும். சமூகத் தொடர்புகளை வளர்ப்பது, மன மகிழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குவது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். அத்துடன் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதும், தேவையற்ற கவலைகளை விட்டு நிகழ்காலத்தில் வாழ்வதும், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும் அவசியம். முக்கியமாக, இருப்பவற்றைக் கொண்டு திருப்தி கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவும் எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் மன நிறைவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
6. பொறுப்புணர்வுடன் இருப்பது: வாழ்க்கையை எளிதாக்கவும், அர்த்தமுள்ளதாக மாற்றவும் பொறுப்புணர்வு என்பது மிக முக்கியமான பண்பாகும். மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம் தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் நாமே பொறுப்பேற்கும்போது வாழ்க்கை நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். இது தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும். எதிர்காலத்தைப் பற்றிய புரிதலுடன், என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை அறிந்து பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். நம் வேலையை சிரத்தையாக செய்வதுடன், அதை மெருகேற்றி, மேலும் மேலும் உயர்ந்து வர, வாழ்க்கை எளிதாக இருக்கும்.