
சமையலில் கொத்தமல்லி, புதினா இலைகளுக்கு என்றுமே ஒரு தனி இடமுண்டு. உணவின் மணத்தையும், சுவையையும் கூட்ட இவை பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல், இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலைகளை வாங்கி வந்த சில நாட்களிலேயே வாடி வதங்கிப் போவது பல நேரங்களில் வருத்தத்தை அளிக்கும். எனவே, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை நீண்ட நாட்களுக்கு புத்துணர்வுடன் வைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இவற்றை ஃபிரிட்ஜில் வைத்தாலும் கூட சில நேரங்களில் சீக்கிரமே பழுதாகிவிடும். ஆனால் சில எளிய முறைகளை கையாண்டால், இந்த வாசனை இலைகளை நீண்ட நாட்களுக்கு வாடாமல் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
ஒரு சிறந்த வழி என்னவென்றால், கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்றாக தண்ணீரில் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் உலர்த்த வேண்டும். பிறகு சுத்தமான காகிதத்திலோ அல்லது மெல்லிய துணியிலோ சுற்றி, காற்று புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் அவை சீக்கிரம் வாடிப் போவதை தடுக்கலாம்.
இன்னும் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க வேண்டுமென்றால், கழுவி உலர்த்திய கொத்தமல்லி மற்றும் புதினாவை ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடலாம். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். மற்றொரு முறை என்னவென்றால், கொத்தமல்லி மற்றும் புதினாவை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸ் செய்து கொள்ளலாம். பின்பு தேவைப்படும்போது ஐஸ் க்யூப் போல எடுத்து சமையலில் பயன்படுத்தலாம். இது மிகவும் சுலபமான முறையாகும்.
மேலும், கொத்தமல்லி மற்றும் புதினாவை மஞ்சள் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைப்பதும் ஒரு நல்ல முறை. மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், இது இலைகளை அழுகாமல் நீண்ட நேரம் பாதுகாக்கும். கொத்தமல்லி, புதினாவை சேமிக்க மெல்லிய காட்டன் துணி அல்லது பிரவுன் பேப்பர் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி இலைகளை பரிசோதித்து, கெட்டுப்போன இலைகள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இல்லையென்றால் மற்ற இலைகளும் சீக்கிரமே கெட்டுவிடும் வாய்ப்புள்ளது. மீண்டும் அவற்றை உலர வைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வையுங்கள்.
இந்த எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டு சமையலறையில் எப்போதும் ஃப்ரெஷ்ஷான கொத்தமல்லி மற்றும் புதினா இருக்கும். இதனால் வீணாகும் இலைகளை தவிர்க்கலாம், பணத்தையும் சேமிக்கலாம். மேலும், சமையல் செய்யும்போது உடனடியாக ஃப்ரெஷ்ஷான இலைகளை பயன்படுத்துவது உணவிற்கு கூடுதல் சுவையை தரும். எனவே, இந்த டிப்ஸைப் பயன்படுத்தி நீங்களும் பயனடையுங்கள்.