
நவராத்திரி பண்டிகைக்கு கொலு பொம்மைகள் வாங்குவது பெரிதல்ல, ஆனால் அவற்றை பத்திரமாக நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்வதற்குத் தேவையான பராமரிப்பு அவசியம். பாரம்பரியமாக கொலு வைப்பவர்களுக்கு பொம்மைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும், எப்படி பத்திரப்படுத்த வேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால், புதிதாக கொலு வைப்பவர்களுக்கு பொம்மைகளை எப்படிக் கையாள வேண்டும், பராமரிக்க வேண்டும் என்பது அவ்வளவாகத் தெரியாது. அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பொம்மைகள் வாங்கும்பொழுதே அவை மண்ணால் செய்யப்பட்டதா அல்லது காகித பொம்மைகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். காகித பொம்மைகள் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மைகளை ஈரம் இல்லாத உலர்ந்த பகுதிகளில் வைக்க வேண்டும். இவை ஈரக்காற்று பட்டாலே சீக்கிரம் ஊறி வீணாகி விடும்.
2. கொலு முடிந்ததும் விரிசல் விழுந்த அல்லது உடைந்த பொம்மைகளை சரிசெய்து பெட்டியில் அடுக்க, அடுத்த முறை அவற்றை எடுக்கும்போது சேதாரம் அதிகம் இல்லாமல் இருக்கும்.
3. மயிலாப்பூரில் உடைந்த பொம்மைகளை சரி செய்யவும், புதிதாக வண்ணம் தீட்டிக் கொடுக்கவும் கடைகள் உள்ளன.
4. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மெழுகுப் பூச்சு கொடுத்து பொம்மைகளை அதன் நிறம் மங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
5. மண் பொம்மைகள் நிறம் மங்கி இருந்தால் மண்ணெண்ணெய் கொண்டு துணியால் துடைத்து விட பளிச்சென்று இருக்கும். கலர் பெயிண்ட்களை வாங்கி ஒரு மென்மையான டச் கொடுக்க புதிது போல் இருக்கும்.
6. பொம்மைகளை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைப்பதைத் தவிர்க்கவும். இதனால் நிறம் மங்கி விடும். காட்டன் துணி அல்லது காகிதம் கொண்டு சுற்றி வைக்க பளிச்சென்று இருக்கும்.
7. செட் பொம்மைகளை பிரிக்காமல் ஒரே பெட்டியில் தனித்தனியாக காட்டன் துணி சுற்றி பத்திரப்படுத்தலாம். அப்போதுதான் அடுத்த முறை நவராத்திரிக்கு எடுக்கும்போது ஜோடியைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
8. கலர் மங்கி டல்லாகக் காணப்படும் பொம்மைகளுக்கு வீட்டிலேயே வார்னிஷ் கலந்து வண்ணப் பூச்சுகள் பூச பளபளப்பாகவும் கலர் மங்காமல் புதிது போல இருக்கும்.
9. சிறு விரிசல்கள் விழுந்த, உடைந்த மற்றும் நிறம் மங்கிப்போன பொம்மைகளை, அவை எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை சீரமைத்து வர்ணம் தீட்டி புதுசு போல செய்து தருகிறார் பரமசிவம் என்பவர். இவர் மயிலாப்பூர் சித்ர குளம் அருகே கடை வைத்துள்ளார்.
10. பேப்பர் மோல்ட் செய்யப்பட்ட பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பராமரிப்பது மிகவும் சிரமம். இவற்றை குளிர்ந்த காற்றோட்டமான இடங்களில் வைக்கக் கூடாது. ஈரம் இல்லாத இடங்களில் வைக்க வேண்டும்.
11. பேப்பர் போல்ட் பொம்மைகளை பட்டர் பேப்பர் கொண்டு சுற்றி, பிறகு அதன் மீது பப்பிள் ராப் (Bubble wrap) கொண்டு சுற்ற வேண்டும். அதற்கு மேல் காட்டன் துணி கொண்டு சுற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நிறைய வருடங்கள் வரும்.
12. பொம்மைகளிலேயே சிறந்தது மண் பொம்மைகள்தான். இதில் அதனுடைய நிறம்தான் மங்கிப்போகுமே தவிர, நீண்ட காலத்திற்கு இருக்கும். மண் பொம்மைகளை அட்டைப் பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது.
13. மண் பொம்மைகளை செய்தித்தாள்கள் கொண்டு சுற்றி வைப்பது தவறான பழக்கம்.
14. மார்பிள் பொம்மைகளை கண்ணாடி பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. இவை எடை அதிகம் இருக்கும். ஈரத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. அத்துடன் எளிதில் மாசடையும் என்பதால் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.
15. நவராத்திரி கொலு என்றாலே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மரப்பாச்சி பொம்மையும் அவசியம் வைக்க வேண்டும். இவற்றை பராமரிப்பதும் எளிது.