ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் நம்மால் செல்ல முடியாதபொழுது, அதை வேறு ஒருவருக்கு மாற்றித் தர முடியும். அது எப்படி? அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
நாம் ஆசையுடன் பயணம் செய்ய திட்டமிட்டு, ஆனால் கடைசி நேரத்தில் பயணிக்க முடியாமல் போகும்பொழுது வருத்தம் ஏற்படுவதுடன், டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணமும் நிறைய வீணாகும். அதற்கு பதில் நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டில் வேறு ஒருவர், குறிப்பாக இரத்த சம்பந்தப்பட்ட சகோதரன், சகோதரி, தாய், தந்தை போன்றோர் பயணம் செய்ய இந்திய ரயில்வே அனுமதிக்கிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் நம்மிடம் உறுதி செய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் இருப்பதுடன், அதில் பயணிக்க முடியாத காரணமும் இருந்தால் நம் டிக்கெட்டை மற்றவர்க்குக் கொடுக்கலாம். இதன் மூலம் நமது பணம் மிச்சப்படுவதுடன், ரயில்வேக்கும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுவதையும் தடுக்கும்.
இந்திய ரயில்வேயில், ‘ரயில் டிக்கெட் பரிமாற்றம்’ என்பது ஒரு பயணியிடமிருந்து மற்றொரு பயணிக்கு முன்பதிவை மாற்றம் செய்யும் செயல்முறையைக் குறிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுக்கு டிக்கெட்டை மாற்ற இந்த சேவை நம்மை அனுமதிக்கிறது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி ஒரு பயணி தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்ற முடியும். இதற்கு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே கோரிக்கை விடுக்க வேண்டும். பயணச்சீட்டில் பயணியின் பெயர் துண்டிக்கப்பட்டு யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டுள்ளதோ அந்த உறுப்பினரின் பெயர் எழுதப்படும்.
ஆனால், இந்த டிக்கெட் மாற்றும் முறை என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். அதாவது, ஒரு பயணி தனது பயணச்சீட்டை மற்றொருவருக்கு மாற்றி இருந்தால் பிறகு அந்த டிக்கெட்டை மீண்டும் வேறு யாருக்கும் மாற்ற முடியாது. இந்த வசதியை சிறப்பாகப் பயன்படுத்தி பயணிகள் பயன் பெறலாம். அதற்கு முதலில் நம்முடைய பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பிரதி எடுக்க வேண்டும். பிறகு டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு இந்தக் கோரிக்கை எழுப்பப்பட வேண்டும்.
இனி, தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் நம்மால் பயணிக்க முடியாதபொழுது நாம் முன் பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவதன் மூலம் பணத்தை வீணாக்காமல் இருப்பதுடன், மற்றவருக்கும் அது உதவியாக இருக்கும். செய்வோமா?