சிரிப்பு தருமே சிறப்பு!

சிரிப்பு தருமே சிறப்பு!
Published on

விலங்குகள், பறவைகளிடத்து இல்லாத ஒரு குணம் மனிதரிடையே உண்டென்றால்  அது சிரிப்புதான். சிரிப்பு மனித குலத்துக்கு இறைவன் கொடுத்த வரம். மனிதர்கள் காட்டும் உணர்வுகளில் சிறந்தது சிரிப்பு. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, அன்பின் வெளிப்பாடாக அனைவரையும் வசீகரிப்பது சிரிப்பு ஒன்றுதான். சிரிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிரிப்பால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். சிரிப்பின் பலன்கள் குறித்து இன்னும் சில தகவல்களைக் காண்போம்.

சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் நிகழ்வதுடன் முகத் தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தை மெருகேற்றுகிறது. இதனால் இயற்கையான அழகு அதிகரிக்கிறது.

சிரிப்பதால் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்மறையான எண்ணத்தை பெற முடிகிறது. புன்னகைக்கும்போது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. சிரிப்பு ஆயுளை நீட்டிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பதால் மனச்சோர்வு நீங்குகிறது. சிரிக்கும்போது மூளையில் சிறிய அளவில் நியூரோபெப்பட்கள் எனும் ரசாயனங்களை வெளிப்படுவதால் நரம்பியல் மண்டலத்தில் டோபமைன், எண்டார்பின் மற்றும் செரோடோனின் ஆகிய ஹார்மோன் சுரப்புகள் அதிகரிக்கின்றன.

சிரிப்பதால் மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் அதீத சிந்தனையிலிருந்து மீள முடியும். எண்ணங்களை தெளிவாக வகைப்படுத்தும் திறனும், நிர்வகிக்கும் திறனும் சிரிப்பதனால் மேம்படுகிறது. சிரிப்பு உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதோடு, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வகை செய்கிறது.

சிரிப்பதால் இரத்த அழுத்தம் சீராகும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும். வலிகளைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு நாளில் சில நிமிடங்கள் சிரிப்பதால் 40 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக, உடல் ஆரோக்கியம் மேம்பட மனம் விட்டு சிரிக்கப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com