

வாஷிங் மெஷினில் எல்லா துணிகளையும் ஒன்றாகப் போட்டுத் துவைத்து எடுக்கும்போது, நம்முடைய புத்தம் புதிய வெள்ளைச் சட்டை, அந்த சிவப்பு நிறப் புதிய துணியின் சாயத்தால், இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். பார்த்தவுடன் நெஞ்சே வலித்துவிடும். "இனி இது உதவாது" என்று பலர் அதைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது வீட்டைத் துடைக்கும் துணியாக மாற்றிவிடுவார்கள்.
ஆனால், அவசரப்படாதீர்கள். அப்படி சாயம் ஒட்டிக்கொண்ட துணிகளைக் கூட, சில எளிய வீட்டுப் பொருட்களை வைத்தே மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்.
நீங்கள் கடையில் இருந்து புதிதாக, குறிப்பாக அடர் நிறங்களில் துணிகளை வாங்கினால், அதைத் துவைக்கும்போது நிச்சயம் சாயம் போகும். அதனால், அந்தப் புதிய துணியை, முதல் முறை துவைப்பதற்கு முன், சிறிது நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வையுங்கள். இது ஓரளவுக்கு சாயத்தை அந்தத் துணியிலேயே நிலைநிறுத்த உதவும்.
அதையும் மீறி சாயம் ஒட்டிக்கொண்டால் என்ன செய்வது?
சாயம் ஒட்டிக்கொண்ட துணியை மீண்டும் மீண்டும் சோப்புப் போட்டுக் கழுவுவதால் எந்தப் பயனும் இல்லை. அதற்குப் பதிலாக, உங்கள் சமையலறைக்குச் செல்லுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் அளவுக்குத் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலக்குங்கள்.
இப்போது, சாயம் ஒட்டிய அந்த ஆடையை இந்தக் கரைசலில் மூழ்கடித்து, குறைந்தது 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊற வையுங்கள். பேக்கிங் சோடாவும், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமும் சேர்ந்து, அந்த வேண்டாத சாயத்தை உடைத்து வெளியேற்றும். பிறகு, கறையுள்ள இடத்தில் லேசாகக் கசக்கினாலே போதும், கறை மறைந்துவிடும்.
மேலே சொன்ன முறையில் கறை முழுதாகப் போகவில்லையா? அல்லது கறை மிகவும் அடர்த்தியாக இருக்கிறதா? அப்படியானால், 'ரப்பிங் ஆல்கஹால்' பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் துணியைப் போட்டு, அதன் மீது ஆல்கஹாலை ஊற்ற வேண்டாம். கறை படிந்த இடத்தில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் ஆல்கஹாலைத் தடவுங்கள்.
அதை அப்படியே ஒரு 10 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். ஆல்கஹால் அந்தச் சாயத்தை நன்றாக ஊறி, தளர்த்தியிருக்கும். இப்போது, ஒரு பழைய பிரஷ்ஷை எடுத்து அந்த இடத்தில் மென்மையாகத் தேய்த்தால், கறை எளிதாக வந்துவிடும். அதன் பிறகு, சுத்தமான தண்ணீரில் அலசி, வெயிலில் காயப் போடுங்கள்.
இனிமேல், அவசரத்தில் துணி துவைக்கும்போது சாயம் ஒட்டிக்கொண்டால், உங்கள் ஃபேவரைட் ஆடையை தூக்கிக் கடாசி விடாதீர்கள். இந்த எளிய சமையலறைப் பொருட்களை வைத்து முயற்சி செய்யுங்கள். இந்த தந்திரங்கள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பிரியமான ஆடையையும் மீட்டுத் தரும்.