தேடலை சுலபமாக்கும் ஸ்டோர் ரூம் பராமரிப்பு!

தேடலை சுலபமாக்கும் ஸ்டோர் ரூம் பராமரிப்பு!
Published on

தினமும் நாம் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்துகொண்டே இருப்போம். ஆனால், தேவையற்று இருக்கும் பொருட்கள், வீணாக இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் பொருட்கள் பலவற்றை ஸ்டோர் ரூமில் ஒரு ஒழுங்கில்லாமலும், பராமரிப்பில்லாமலும் போட்டு வைத்திருப்போம். திடீரென ஒரு நாள் ஸ்டோர் ரூமில் போட்டு வைத்திருக்கும் ஒரு பொருளை எடுக்க நினைத்தால் அது அவ்வளவு நடக்காது. இதைத் தவிர்க்க, சில எளிய பழக்கங்கள் மற்றும் செயல்களைச் செய்தோம் என்றால் ஸ்டோர் ரூம் தூய்மையாக இருப்பதோடு, விரைவாக ஒரு பொருளை எடுக்கவும் வசதியாக இருக்கும்.

அதற்கு முதலில் ஸ்டோர் ரூம் அளவுக்கேற்றவாறு பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். காற்றோட்டமும், வெளிச்சமும் பிரகாசமாக அங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இரவிலும் சென்றாலும் மிக எளிதாக ஒரு பொருளை எடுக்கக்கூடிய வகையில் ஸ்டோர் ரூம் அமைந்திருக்க வேண்டும்.

ஸ்டோர் ரூமில் வைத்திருக்கும் பொருட்களை அதன் வகை மற்றும் பயனுக்கேற்ப, தனித்தனி அட்டைப் பெட்டி அல்லது மரப்பெட்டிகளில் வைப்பது நல்லது. வேண்டாத பொருட்கள் வைத்திருக்கும் ஸ்டோர் ரூமை அடிக்கடி சுத்தப்படுத்தி நாப்தலீன் உருண்டை மற்றும் எறும்பு மருந்து, கரையான் மருந்து அடித்து விட்டு மீண்டும் பொருட்களை அடுக்கி வைத்தோம் என்றால் பூச்சி தொல்லைகள் இருக்காது. அதுட்டுமின்றி, அட்டை பெட்டியின் உள்ளே வைத்திருக்கும் பொருட்களின் விபரத்தை அட்டை பெட்டியின் மேலே எழுதி வைத்தோம் என்றால், திரும்ப எடுக்கும்போது சுலபமாக இருக்கும். அதேபோல், ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்க்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்தித் தருவதுடன் பொருட்களை வகைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.

முக்கியமாக, ஸ்டோர் ரூமில் ஜன்னல், எக்ஸாஸ்ட் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அறையில் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் கிடைக்கும். இது அறையில் தூசு, பழைய வாடையைத் தவிர்க்கவும் உதவும். ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை அவ்வப்போது எடுத்துப் பார்த்தால்தான் அது உபயோகிக்கும் நிலையில் உள்ளதா, காலாவதி தேதி முடிந்து விட்டதா என்பனவற்றை பார்க்க முடியும். இப்படி அடிக்கடி பார்த்து வருவதால், நீண்ட நேரம் தேடாமல் ஒரு பொருளை எடுக்க சௌகரியமாக இருக்கும். புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் லாஃப்ட் வசதி இருக்கும். அதையும் ஸ்டோர் ரூம் போலவே அடிக்கடி சுத்தம் செய்வது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com