எலக்ட்ரானிக் கழிவுகளை திறம்பட குறைக்கும் உத்திகள்!

அக்டோபர் 14, சர்வதேச மின் கழிவு (E waste) தினம்
E waste
E waste
Published on

E waste எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளைக் குறைப்பது நிலையான வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் கழிவுப் பிரச்னையாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 மில்லியன் டன்களுக்கு மேலாக மின்னணுக் கழிவுகள் உருவாகின்றன. இந்த உலகளாவிய பிரச்னையை சரி செய்ய வேண்டிய கடமை அத்தனை மனிதர்களுக்கும் உண்டு.

மின்னணுக் கழிவுகளில் கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், வீ சிஆர்கள், கேம் கண்ட்ரோல்கள், தொலைக்காட்சிகள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் போன்றவை அடங்கும். மின் கழிவுகளைத் திறம்படக் குறைக்கும் உத்திகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

எலக்ட்ரானிக் கழிவுகளை குறைக்கும் உத்திகள்:

பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல்: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பயன்பாட்டை நீட்டிக்க அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் பழுதை சரி செய்து மீண்டும் உபயோகிக்க வேண்டும். பெரும்பாலும் ரேம், ஹார்ட் டிரைவ்கள் அல்லது பேட்டரிகள் போன்றவற்றை மேம்படுத்துவது ஒரு சாதனத்தை முழுவதுமாக மாற்றுவதற்கு பதிலாக அதன் ஆயுளை நீட்டிக்கும்.

நீடித்த தயாரிப்புகளை தேர்ந்தெடுத்தல்: நல்ல தரமான பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்களின் ஆயுள் மற்றும் உயர்தர எலக்ட்ரானிக்ஸ் முதலீடு செய்ய கேரண்டி மற்றும் சர்வீஸ் தரும் பிராண்டுகள் சிறப்பானவை.

அப்கிரேடட் பொருட்களை வாங்குதல்: புதுப்பிக்கப்பட்ட, அதாவது அப்கிரேட் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க வேண்டும். அவை நன்றாக உழைப்பதோடு மட்டுமல்லாமல், புதியதாக பொருள்கள் வாங்க வேண்டிய தேவையைக் குறைக்கின்றன. அதேபோல தேவையான பொருட்களில் மட்டும் கவனம் வைக்க வேண்டும். சிறிய ஹாலுக்கு பெரிய சைஸ் டிவியும், நன்றாக இருக்கும் செல்போனை வருடா வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவதும் தேவையில்லை.

மின்கழிவு மற்றும் மறுசுழற்சி: உள்ளூர் மின்கழிவு, மறுசுழற்சி திட்டங்கள் அல்லது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். பல நகராட்சிகள் மற்றும் நிறுவனங்கள் நியமிக்கப்பட்ட மறுசுழற்சி நாட்களை வழங்குகின்றன.

ரீடெயில் டேக் பேக் ப்ரோக்ராம்கள்: பல எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் டேக் பேக் ப்ரோக்ராம்களை வழங்குகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் பழைய சாதனங்களை முறையான மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கிறார்கள்.

முறையான சேமிப்பு மற்றும் அகற்றல்: ஒரு சாதனம் இன்னும் செயல்பாட்டில் இருந்தால் அதை நிராகரித்து வெளியே குப்பையில் எரிவதை விட எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவும். எலக்ட்ரானிக் சாதனங்களை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அதில் உள்ள தனியுரிமையைப் பாதுகாக்கவும், அடையாளத் திருட்டை தடுக்கவும், தனிப்பட்ட தரவுகளும் பாதுகாப்பாக அழிக்கப்படுவதை உறுதி செய்யவும்.

இதையும் படியுங்கள்:
திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திண்டுக்கல் பூட்டுகள்!
E waste

நன்கொடை அல்லது விற்பனை: ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளிகள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நன்றாக வேலை செய்யும் நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை நன்கொடையாக வழங்கலாம் அல்லது தெரிந்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யலாம்.

நிலையான வடிவமைப்பை ஊக்குவித்தல்: சுற்றுச்சூழலுக்கு உகந்த பிராண்டுகளை ஆதரிக்க வேண்டும். நிலைத்தன்மை, முறையான உற்பத்தி செயல்முறைகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது மக்கும் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பிராண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். எளிதில் பழுது பார்க்க அல்லது மேம்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாதனங்களை வாங்கினால் கழிவுகளை குறைக்கலாம்.

டிஜிட்டல் மாற்றுகள்: புத்தகங்களுக்கு பதிலாக மின் புத்தகங்கள், இயற்பியல் ஊடகங்களுக்கு பதிலாக டிஜிட்டல் சந்தாக்கள் மற்றும் தனிப்பட்ட வன்பொருள்கள் அதாவது கிளவுட் பயன்பாடுகள், ஆன்லைன் சேவைகள் போன்ற டிஜிட்டல் மாற்றுகளை பயன்படுத்தலாம்.

மின்னணுக் கழிவுகளை குறைக்க தனி நபர்கள், சமூகங்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. இதனால் சுற்றுச்சூழலில் மின்னணு கழிவுகளின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com