மாணவர்களே! மேற்படிப்பைத் தொடங்கும் முன் இதையும் கொஞ்சம் பாருங்க!

Higher Studies
Higher Studies

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது மேற்படிப்பைத் தொடர கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள், மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

+2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது, எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் தத்தளிக்கின்றனர். மேற்படிப்பு தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் படிப்புகளை படித்து, நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பலரது கல்விப் பயணம் தொடர்கிறது. இருப்பினும், நல்ல படிப்பு மற்றும் நல்ல வேலை என்பதை எதைக் கொண்டு தீர்மானிக்க முடியும் என அறியாமல் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையைச் செய்து வருகின்றனர். அப்படி இருக்கையில் நாம் இப்போது தேர்ந்தெடுக்கும் படிப்பில், பின்னாட்களில் தொழில் வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் ஏன் படிக்க வேண்டும்? எதற்காக படிக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதிலை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவும் படிப்பு எதுவென அறிந்து செயல்பட்டால் மிகச் சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும். உதாரணத்திற்கு, உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகமாக உள்ளதோ அது தொடர்பான படிப்புகள் எந்தெந்தக் கல்லூரிகளில் படிக்க முடியும் என்பதை ஆராய வேண்டும். பிறகு, அதில் எந்தக் கல்லூரி தரமானதாகவும், உங்களுக்கு வசதியாகயும் உள்ளதோ அதைத் தேர்ந்தெடுத்தால் போதும். நிச்சயமாக அது சரியானத் தேர்வாக இருக்கும். ஏனெனில், நமக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்தால், அதில் வரும் பிரச்சினைகளைக் கூட மிக எளிதாக சமாளிக்க முடியும்.

“படிப்பு என்பது வெறும் வேலைக்காக மட்டுமின்றி, நல்ல பண்புகளையும், எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு நல்ல மனநிலையில் ஆனந்தமாக வாழ்வது” என்பதை உணர்ந்தாலே படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்லூரி படிப்பின் போதே நமக்கான வேலை அல்லது தொழில் பற்றி சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு, ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என நினைப்பவர்கள், வாழ்க்கைப் போராட்டத்தில் திண்டாடி வருகின்றனர். ஆகையால், மாணவர்களே இன்றைய சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவது நலம்.

இதையும் படியுங்கள்:
என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்?
Higher Studies

நான் தேர்ந்தெடுக்கும் வேலை அல்லது தொழில் எனது வாழ்க்கையை முன்னேற்றுமா? என்ற கேள்வியை யாரெல்லாம் தனக்குள்ளேயே கேட்டு விடை தெரிந்து கொள்கிறார்களோ அவர்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது.

சில பெற்றோர்கள் இன்றைய கல்விக்கான முதலீட்டை, நாளைய வருமானமாகப் பார்க்கின்றனர். இதனால், தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு ஏகப்பட்ட செலவை செய்கின்றனர். கல்வியில் நாளைய வருமானத்தை எப்படி பெறுவது மட்டுமின்றி தனித்திறன், சிறப்புத் தகுதிகள் மற்றும் நல்ல நேர்மறையான சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர் சரியான வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பது அவரவரின் முக்கிய கடமையாகும். மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்படிப்பு அறிவை வளர்ப்பதற்கு மட்டுமின்றி பல்வகையான திறன்களை வளர்த்துக் கொள்ளும் படிப்பைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கை எனும் பயணத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com