தோற்றுப்போவதில் இருக்கும் வெற்றி!

தோற்றுப்போவதில் இருக்கும் வெற்றி!
ilkercelik
Published on

காலையில் வீட்டில் ஒரே களேபரம். ஒரு பக்கம் பையன் பூரி மசால்தான் வேண்டும் என்கிறான். மறுபக்கம் மகள் நிறைய வெங்காயம் போட்ட  குண்டு பணியாரம்தான் வேண்டும் என்கிறாள். இதன் நடுவில் கணவர் வேறு அலுவலகத்திற்கு அவசரம் அதனால் வெறும் தோசை சுடு போதும் என்கிறார். ஆனால் மனைவியோ அன்று தான் ரவா தோசை செய்யலாமென்று எல்லாவற்றையும் எடுத்து வைத்திருக்கிறாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்ல, என்ன செய்யலாம் என்பதை ஆலோசனை செய்து வயதில் சிறிய மகனின் பூரி சாப்பிடும் ஆசையை நிறைவேற்றினார் மனைவி. இதற்கு நடுவில் கணவன் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று பொடிதோசையை சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறார். எடுத்து வைத்த ரவா தோசைக்குத் தேவையானவற்றை இரவு செய்து கொள்ளலாம் என்று மூடி வைக்கிறார். அந்த மகளுக்கு தனக்கு பணியாரம் இல்லை என்பதில் சிறு வருத்தம்தான். ஆனாலும் தன் தம்பி கேட்ட அந்த பூரியை அவள் மகிழ்ந்து உண்டாள். இந்த இடத்தில் தோற்றுப்போதல் என்பது அந்த மகளுக்கு. ஆனால் அதை சுகமான தோற்றுப்போதலாக உணர்கிறாள் மகள்.

தோற்பது என்பது எந்த விஷயத்தில் நாம் தோற்கிறோம் என்பதில் உள்ளது. ஒரு தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது வழக்கம். ஆனால் அன்பு பாசத்தில் தோற்றுபோனால் அதுவே சுகமான வாழ்விற்கு அடிப்படையாகிறது. தோற்றுப்போதல் என்பதற்கு விட்டுக் கொடுத்துப் போதல் என்றும் ஒரு அர்த்தம் உள்ளது. ‘விட்டுக்கொடுத்துச் செல்பவர்கள் என்றும் கெட்டுப் போவதில்லை.’ தொழிலில் தோற்றால் அது அனுபவம். அன்பில் தோற்றால் அது ஆனந்தம்.

அந்தக் காலத்தில் வீடு என்பது நிறைய மனிதர்கள் உள்ள கூட்டுக் குடும்பமாக இருக்கும். அங்கு பலரின் ஆலோசனைகளும் பலரின் கருத்து வேறுபாடுகளும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும். ஆனால் வளமாக, புத்திசாலியாக உள்ள ஒருவரின் கை மட்டுமே அங்கு ஓங்கி இருக்கும். மற்றவர்கள் அவர் சொல் கேட்டு அவருக்கு அடங்கி போவார்கள். இது குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஒரு தொழில் அகத்துக்கும் உண்டானதே. இந்த இடத்தில் அந்த மனிதருக்கு அடங்கிப்போதல் என்பது தோற்றுப்போவதில் அடங்கும். ஆனால், இந்த தோற்றுப்போதல் அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அந்த அலுவலகத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாகவே இருக்கும். காரணம், கருத்து வேறுபாடுகள் ஒரு குடும்பத்தை சிதைக்கும் காரணமாகிறது. அலுவலகத்தின் செயல் திறனை குறைத்து அதன் பின்னடைவை சந்திக்க செய்கிறது. ஆனால் சில விட்டுக்கொடுத்தல் அல்லது தோற்றுப்போதல் மூலமாக இந்த பாதிப்புகளை முழுவதுமாக நாம் அகற்றலாம்.

வாழ்க்கை சமன் ஆவது சில பெருந்தன்மையான தோற்றுப்போவோர்களால் மட்டுமே. ஒரு தந்தையும் மகளும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது  தந்தையின் பலம் பார்த்து மகள் பதுங்குகிறாள். தந்தையோ செஸ் சாம்பியன். ஆனால் மகளின் முகவாட்டம் கண்டு அந்த சாம்பியன் தந்தை அவளிடம் தோற்றுப் போகிறார். வேண்டுமென்றே தவறான காய் நகர்த்துதல் மூலம் இந்த இடத்தில் அந்த சிறு மகளின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சிதான் அந்த தந்தைக்கு வெற்றி. வேண்டுமென்றே தோற்பது இந்த இடத்தில் சுகமே. தோற்பதில் உள்ள இன்பத்தை புரிந்து கொண்டால் தகுதியான நேரத்தில், தகுதியான இடத்தில், தகுதியான நபர்களிடம் தோற்பது என்பது நமக்கு வாழ்வில் வெற்றியையே தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com