கோடை காலம் வந்துவிட்டது. இனி வெயில் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாகனங்களில் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பக் கூடாது என்று வாட்ஸ் அப்பில் பல செய்திகள் வலம் வருகிறது.
அதிலும், கடந்த சில நாட்களாகவே பாரத் பெட்ரோலியம் எச்சரிக்கிறது என்ற ஒரு செய்தி வாட்ஸ்அப் வாயிலாக வலம் வருகிறது. "இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகம் உயரும் என்பதால், வாகனத்தில் யாரும் எரிபொருள் முழுமையாக நிரப்ப வேண்டாம். ஒருவேளை முழுமையாக நிரப்பினால் அது வெடிப்பை ஏற்படுத்தலாம். தயவு செய்து வாகனத்தில் பாதி மட்டுமே எரிபொருளை நிரப்பி மீதி இடத்தில், காற்று புகுவதற்கு இடம் அளிக்கவும். இந்த வாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 5 பெட்ரோல் டேங்க் வெடிப்பு விபத்து நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க்கை திறந்து காற்றோட்டத்திற்கு வழிவகை செய்யுங்கள்" என்று அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த செய்தி குறித்து இந்தியன் ஆயில் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.
இதுபோன்ற சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் அனைத்து வாகனங்களிலும் தாராளமாக டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம். பெட்ரோல் முழுவதுமாக நிரப்பினால் வெடித்து விடும் என்ற பயம் யாருக்கும் தேவையில்லை. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பரவும் செய்தி தவறானதுத் என தெரிவித்துள்ளது.
"வாகனங்களின் பாதுகாப்புக் காரணிகள், செயல்திறன் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு வாகனத்தின் உற்பத்தியாளர்கள் அதனை வடிவமைக்கிறார்கள். எனவே குளிர்காலம் கோடை காலம் என எந்த காலமாக இருந்தாலும் உற்பத்தியாளர்கள் கொடுத்துள்ள வரம்புகளுக்குள் வாகனத்தில் எரிபொருள் நிரப்புவது பாதுகாப்பானது." என்று இந்தியன் ஆயில் நிறுவனம் சென்ற ஆண்டே விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக சில சமயங்களில் அதிக வெப்பத்தினால் (பெட்ரோல் டேங்க் பாதிப்பையும் மீறி) அசம்பாவிதம் நடக்கலாம். எனவே வெளியில் செல்லும்போது, வாகனத்தை எங்கேயாவது நிறுத்தினால் அதிகம் வெயில் படாத இடத்தில் நிறுத்துவது பாதுகாப்பானது.
மேலும் அதிக வெப்பம் பெட்ரோல் டேங்கில் இறங்காதவாறு, டேங்க் கவர் ஒன்று வாங்கிப் போடுவது நம் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். பிரச்சனை வராது என்றாலும், நம்மால் முடிந்தவரை பாதுகாப்பாக செயல்படுவது நம் கடமை.