

சண்டை போடாத தம்பதிகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். சிறு சிறு ஊடல்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாத உணவு போல் ருசிக்காது. ஏதாவது பிரச்னைகள் வரும்பொழுது வாக்குவாதம் வரத்தான் செய்யும். ஆனால், அதை நீண்ட நேரம் நீடிக்க விடாமல் சீக்கிரம் சமாதானம் ஆவதுதான் சிறந்த வழி. கோபம் வந்தால் அதை சரியான முறையில் வெளிப்படுத்தி விடுவதுதான் சரி. மௌனமாக இருந்தால் சிக்கல்கள் அதிகமாகிவிடும். தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. மனம் விட்டுப் பேசி விட எல்லாம் சரியாகிவிடும். இதுதான் உண்மையான தாம்பத்தியத்திற்கான வெற்றியும் கூட. கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க உதவும் சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அழுக்கு நைட்டியை தவிர்க்கலாமே: தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் நிறைய வேலை செய்துவிட்டு இரவு உறங்கச் செல்லும்பொழுது அப்படியே அழுக்கு நைட்டியுடன் உறங்கச் செல்வதைத் தவிர்க்கலாம். வியர்வை நாற்றமும் அழுக்கு நைட்டியும் விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்துவதால் நெருக்கம் குறைய வாய்ப்பு அதிகம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதற்கிடையே நம்மை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.
ஈகோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்வது: சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைப் பார்க்க வேண்டுமே தவிர, பிரச்னையை பெரிதுபடுத்த முயற்சிக்கக் கூடாது. ஆளுக்கொரு அறையில் உட்கார்ந்து கொண்டு மற்றொருவர் சமாதானம் பேச வருவார் என்று எதிர்பார்த்து இருப்பது தவறு. தவறு யார் மீது இருந்தாலும் தானாகவே முன்வந்து மன்னிப்பு கேட்பதிலோ, பேசுவதிலோ கௌரவம் பார்க்கக் கூடாது. பேசியது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஈகோ பார்க்காமல் சொல்லி விடுவதுதான் நல்லது. ஈகோ பார்த்தால் பிரச்னைதான் பெரிதாகும்.
தகவல் தொடர்பு: தம்பதியர்களுக்கிடையே பேச்சுவார்த்தை குறைந்தாலே ஏதோ சிக்கல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இதுவே சில சமயம் சண்டைக்கு காரணமாகிவிடும். எதுவாக இருந்தாலும் வாயைத் திறந்து பேசி, நம் எதிர்பார்ப்புகளை எடுத்து வைப்பது தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளை சரி செய்யப் பார்க்க வேண்டும். அதேபோல் நம் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதையும் பொறுமையுடன் காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்னை குறைந்து விடும். கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்வதும், அவருடன் மனம் விட்டுப் பேசுவதும் என இருப்பது சுமுகமான தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.
பொருளாதார பிரச்னை: தம்பதிகளுக்கிடையே பிரச்னைகள் வர முக்கியக் காரணியாக இருப்பது பணப் பிரச்னைதான். அதிகம் செலவு செய்வது யார் என்பதில் தொடங்கி, எதனால் செலவு ஏற்படுகிறது என்பது வரை சண்டையும், வாக்குவாதமும் நடைபெறும். இதனைத் தவிர்க்க பணத்தை வெளிப்படையாக கையாளத் தெரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படைத் தன்மை இருந்தாலே சண்டைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும்.
உறவுகளைப் பேணுவது: கணவன் வீட்டு உறவுகளோ, மனைவி வீட்டு உறவுகளோ இருவரையும் சமமாக மதித்து நடத்தும் பட்சத்தில் பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. சிலர் தன் வீட்டு உறவுகளை மட்டுமே உயர்த்தி பேசுவதும், எதிர் தரப்பினரின் உறவுகளை மதிக்காமல் இருப்பதும் பிரச்னைகளை உண்டுபண்ணும். எனவே, முடிந்தவரை இரு தரப்பினரின் உறவுகளையும் சமமாக மதிக்கும் வகையில் நடந்து கொள்வது கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவை நிலைத்து நிற்கச் செய்யும்.
அன்பால் வசப்படுத்துவது: சின்னச் சின்ன விட்டுக்கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாசமழை பொழிவது என அன்பால் ஒருவருக்கு ஒருவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க வழிவகுக்கும். காதலர்கள்தான் அன்பைப் பொழிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கணவன், மனைவியும் கூட காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அன்பு செய்வதுதான் ஒருவரை ஒருவர் வசப்படுத்தும் சிறந்த ஆயுதம் என்பதை மறக்க வேண்டாம்.