‘என்னை அவன் ஏமாத்திட்டான்’ – இந்த வாக்கியத்தை எத்தனை முறை பிறர் சொல்லிக் கேட்டிருப்போம் அல்லது பிறரிடம் சொல்லியிருப்போம். ‘ஒருமுறை கூட என் வாழ்வில் நான் ஏமாறவே இல்லை’ என்று யாரேனும் சொன்னால் எத்தனை பொறாமை வரும் அவர் மேல். அப்படி ஒரு அதிர்ஷ்டசாலி அல்லது துரதிஷ்டசாலியை எங்கேனும் கண்டிருந்தால் ஒரு ஆச்சரியக்குறி நம்முள் எழும் தானே? ஏமாற்றம் அடையாத ஒருவரை எப்படி துரதிஷ்டசாலி என்ற பட்டியலில் சேர்ப்பது? இருப்பினும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில், ஏமாற்றத்தை சுவைக்காதவர்களால் நம்பகத் தன்மையின் புனிதத்தை பல சமயங்களில் உணர முடியாமல் போய்விடலாம்.
ஏமாற்றத்தை எந்த பட்டியலும் சேர்க்க முடியும். உணர்வு, உணர்ச்சி, சம்பவம், உதாரணம், பாடம் இப்படி பலவற்றில். அன்பு, கோபம், பாசம், காதல், அக்கறை, வெறுப்பு போன்றவற்றை நாம் பிறருக்கு அளிக்கின்றோம் மற்றும் அளிக்கப்படுகின்றோம். ஆனால் இந்த ஏமாற்றத்தை மட்டும் கொடுப்பது யாரோ?அதன் பிறப்பிடம் எதுவோ? நீங்காத தழும்பாகவும், ஆறாத வடுவாகவும் மனதில் நின்று வாட்டுவது ஏனோ? எதனால் அல்லது யாரால் ஏமாற்றப்படுகிறோம் / ஏமாற்றம் அடைகிறோம்?
உதாரணத்திற்கு ஒருவர் தன்னை முழுதாக நம்பும் ஒரு நபரிடம் ,“இது பொய்யல்ல, நான் சொல்வதெல்லாம் நிஜம்தான். என்னை நம்பு” என்று சொல்கிறார். சிறிது காலம் கழித்து தன் வார்த்தைகளில் இருந்து பின்வாங்கி எதிர்மறையாக செயல்படுகிறார். அவரது வார்த்தைகளை நம்பியிருந்தவரின் நிலையின் பெயர் ஏமாற்றம் என்று சொல்வதில் சின்ன சிக்கல்.
முதல் காரணம், ஒருவேளை வாக்குக் கொடுத்தவரின் மனதில் பொய் சொல்ல வேண்டும் என்று எண்ணம் மட்டும் இருந்திருக்கலாம். ஏமாற்றம் அளிப்பது பற்றி அவர் துளியும் நினைத்திருக்க மாட்டார்.
இரண்டாவது காரணம், அவர் கொடுத்த வாக்கு உண்மையாகவே இருக்கலாம். அப்படி உண்மையாக இருப்பதில் அவருக்கு விருப்பமும் இருக்கலாம். இருப்பினும் காலப்போக்கில் சூழ்நிலைகேற்ப பிழைத்துக் கொள்வதற்காக தன்னை மாற்றிக் கொள்கிறார். ‘சர்வைவல்’ என்னும் கட்டாயத்துக்குள் அவர் விழுந்து சிக்கிக் கொண்டு, தன் விருப்பமின்றி செயல்பட்டு [அதாவது தன் விருப்பத்தை இழந்து], முடிவில் தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொண்டார். இங்கு தன்னை நம்பியிருந்த மனதை புறக்கணித்து, தனது உண்மைத்தன்மையை இழந்தவரே ஏமாந்தவராவார்.
ஒருவரின் உண்மையான ரூபம் என்றும் அழகானது மற்றும் அமைதியானதாகும். ஆனால் சில சூழ்நிலைகளில் தனது உண்மைத்தன்மையைப் பிரித்து, தனியாக எடுத்து வைத்துவிட்டு செயல்படும் கட்டாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர். அப்படி அந்தக் கட்டாயத்திற்கு இரையாகிறவர்கள் தன்னிடமே ஏமாறுகின்றனர். ‘சூழ்நிலைக்கைதி’ என்ற வட்டத்திற்குள் தன்னையறியாமல் நுழைந்து அதிலிருந்து மீள வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
கைகேயி எவ்வாறு பரதன் மற்றும் ராமனை வித்தியாசப்படுத்தி, பரதன் தன் மகன் என்றும், ராமன் தனது கணவரின் முதல் மனைவியின் மகன் என்றும் பிரித்துப் பார்த்தாளோ, அதேபோல் தன்னையும் இந்த உலகத்திற்காக தான் வாழும் வாழ்க்கையையும் பிரித்து வைத்து சிலர் வாழ்கின்றனர். இத்தனை நாளாக இராமனை தன் சொந்த மகனாக பாவித்து அன்பு செலுத்திய கைகேயி ‘சர்வைவல்’ என்னும் மர்ம வலையில் சிக்கிக் கொள்கிறார். அங்கு தன் உண்மையான அன்பு மற்றும் புனிதத்தை மறந்து அதற்கு எதிராகவே செயல்படுகிறார்.
இக்கால இளைஞர்கள் இந்த வலையில் அதிகப்படியாக விழுந்து கொண்டு இன்னல்படுவது மிகுந்த வருத்தத்திற் குரிய விஷயம். அந்த வலைக்கு இரையாக தனது கனவுகளை சமர்ப்பிக்கின்றனர். முடிவில் நிறைவு பெறாத திருப்தியற்ற வாழ்வை வாழ்கின்றனர். இதிலிருந்து வெளியேற வழியே இல்லையா?
நீதி போதனைக் கதைகள், அறிவுரைகள் மற்றும் கடவுள் உள்ளாரா இல்லையா என்ற ஆராய்ச்சிகள் என்பவை பல இருப்பினும், நம்மை பெரும்பாலான இக்கட்டான நேரத்தில் காப்பாற்றிக் கரையேற்றுவது ‘மனசாட்சி’ என்ற ஒன்றாகும். சரியெது தவறெது என்று பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவு என்னும் மிகப் பெரிய ஆயுதம் நம்மிடம் உள்ளது. எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் நம்மை சரியான பாதையில் வழி நடத்தி செல்வதும் அதுவே. ஏனெனில், மனசாட்சி என்றும் யாருக்காகவும் எந்த நிலைமையிலும் பாரபட்சம் பார்ப்பதில்லை. இருள் படர்ந்த நேரங்களிலும் தொடர்ந்து நம்மை ஊக்குவித்து முன்னேறிச்செல்ல காரணியாய் இருப்பதும் அதுவே.
‘நான் இந்த குறிப்பிட்ட காரணத்தால் தான் இந்த தவறான பாதையை தேர்ந்தெடுத்தேன்’ என்று சொல்வதை விட ‘எத்தனை காரணங்கள் இருந்தும் நான் உண்மையின் பாதையிலிருந்து விலகவில்லை’ என்று சொல்வது எத்தனை இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு? இங்கு சரி – தவறு என்று குறிப்பிட்டிருப்பது உங்களின் உண்மையான அழகான மனதைத் தான். அந்த அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது மனசாட்சிதான்.
நம் மனசாட்சியின் சொற்படி நடப்பதன் மூலம் சிலருக்கு ஏமாற்றம் ஏற்படலாம். அவர்கள் நம்மிடம் அனுமதி வாங்காமல் நம்மைப் பற்றி யூகித்து வைத்திருப்பவர்கள். அதனால் நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்தவித நஷ்டமுமில்லை. குறைந்தபட்சம் நம்மை நாம் ஏமாற்றாமல், உண்மையாக வாழலாமே!