மழைக்காலம் வந்தாச்சு... உங்க வீட்ல இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்கலனா உயிருக்கே ஆபத்து!
மழைக்காலத்தில் நாம் மழையை எவ்வளவுதான் கொண்டாடினாலும், அது கூடவே சில ஆபத்துகளையும் கூட்டிக்கொண்டுதான் வருகிறது. வெளியே தேங்கி நிற்கும் தண்ணீர், வழுக்கும் சாலைகள் ஒருபக்கம் என்றால், வீட்டுக்குள்ளேயே நம்முடன் இருக்கும் ஒரு 'சைலண்ட் வில்லன்' தான் மின்சாரம். வெயில் காலத்தில் அமைதியாக இருக்கும் நம் வீட்டு எலக்ட்ரிக் இணைப்புகள், மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தால் திடீரென விபரீதமாக மாறக்கூடும்.
ஒரு சின்ன அஜாக்கிரதை கூட, பெரிய விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் போகும் அபாயத்தைத் தவிர்க்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஏன் சுவிட்ச் போர்டில் ஷாக் அடிக்கிறது?
நம்மில் பலர், சுவிட்ச் போர்டைத் தொடும்போது லேசாக ஒரு அதிர்வை உணர்ந்திருப்போம். அதை, "ஏதோ லேசா ஷாக் அடிக்குது" என்று சாதாரணமாகக் கடந்து போயிருப்போம். ஆனால், அது மிகப்பெரிய தவறு. பொதுவாக, சுவிட்ச் போர்டில் விரிசல்கள் இருந்தாலோ, அல்லது உள்ளே இருக்கும் வயர்கள் தளர்ந்து போய் ஒன்றோடு ஒன்று உரசி, பிளாஸ்டிக் உறை பிய்ந்து இருந்தாலோ மின்சாரம் வெளியே கசிய ஆரம்பிக்கும்.
சாதாரண நாட்களில் இது தெரியாது. ஆனால், மழைக்காலத்தில் சுவர்களில் ஈரப்பதம் ஊடுருவும். இந்த ஈரம் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு பாலமாக மாறிவிடுகிறது. உடைந்த போர்டுகள் மற்றும் தளர்வான வயர்கள் வழியாக மின்சாரம் கசிந்து, சுவிட்ச் போர்டின் மேற்பரப்பிற்கே வந்துவிடும். அந்த நேரத்தில் நாம் அதைத் தொட்டால், விபத்து நிச்சயம்.
செய்யக்கூடாத தவறுகள்!
நம்மில் 90% பேர் செய்யும் தவறு இதுதான் - குளித்துவிட்டு வந்தவுடனே அல்லது கை, கால்களைக் கழுவிவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட மின்விசிறி சுவிட்சைப் போடுவது. இது தற்கொலைக்குச் சமம். தண்ணீர் மிகச் சிறந்த மின் கடத்தி. உங்கள் கையில் ஈரம் இருந்தால், அது ஷாக் அடிக்கும் வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது.
அதேபோல, சுவிட்ச் போர்டுகளின் மேல் தூசி, ஒட்டடை படிய விடாதீர்கள். இந்தத் தூசியும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வைத்துக்கொண்டு, மின்சாரத்தைக் கடத்த வழிவகுக்கும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
மழைக்காலம் முடியும் வரையாவது, வீட்டுக்குள் இருக்கும்போது ரப்பர் செருப்பு அணிந்து பழகுங்கள். இது உங்களை பூமியோடு நேரடித் தொடர்பில் இல்லாமல் பார்த்துக்கொள்ளும், ஷாக் அடிக்கும் தீவிரத்தைக் குறைக்கும்.
உங்கள் வீட்டில் இருப்பதெல்லாம் பழைய காலத்து சுவிட்ச் போர்டுகள் என்றால், அவற்றை மாற்றிவிடுங்கள். இப்போது சந்தையில் நவீனமான, பாதுகாப்பான 'ஷாக் புரூஃப்' சுவிட்ச் போர்டுகள் கிடைக்கின்றன.
சுவிட்ச் போர்டில் இருந்து 'கிர்ர்' என்று சத்தம் வந்தாலோ, தீப்பொறி வந்தாலோ, நீங்களே ஒரு டெஸ்டரை வைத்துக்கொண்டு ரிப்பேர் பார்க்க முயற்சிக்காதீர்கள்.
மின்சாரம், நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம், ஆனால் அதைச் சரியான முறையில் கையாளாவிட்டால் அதுவே எமனாக மாறிவிடும். உங்களுக்குச் சந்தேகம் வரும்படியான எந்த ஒரு மின்சாரப் பிரச்சனை இருந்தாலும், உடனே ஒரு தகுதியான எலெக்ட்ரீஷியனை அழைத்துச் சரி செய்துவிடுங்கள். அந்தச் சிறிய செலவு, ஒரு பெரிய உயிரிழப்பைத் தடுக்கும்.

