நிதி மேலாண்மையை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்!

நிதி மேலாண்மையை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்!

ரு குழந்தையை மூன்று வயதில் பள்ளியில் சேர்த்த உடனேயே, ‘நீ வருங்காலத்தில் டாக்டர் ஆகணும், கலெக்டர் ஆகணும்’ என்று அதன் மனதில் கனவுகளை திணிக்கும் பெற்றோர், அந்தக் குழந்தைக்கு 20 வயதானாலும் நிதி மேலாண்மையை மட்டும் கற்றுக் கொடுப்பதே இல்லை. பிள்ளைகளுக்கு  சிறு வயதிலேயே நிதி மேலாண்மையை சொல்லிக் கொடுத்தால் அது அவர்கள் வாழ்நாள் முழுக்க உதவியாக இருக்கும்.

1. பட்ஜெட்டும், செலவுக் கணக்கும் : பணத்தின் மதிப்பை பற்றி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களிடம் ரூபாய் நோட்டுக்களையும் சில்லரைக் காசுகளையும் கொடுத்து எப்படி அதை எண்ணுவது என்று சொல்லிக் கொடுங்கள். மாதாந்திர செலவுகளுக்கு பட்ஜெட் போட்டு, ஒரு வரவு செலவு கணக்கு நோட்டில் தினமும் செலவுக் கணக்கை எழுத வைக்க வேண்டும்.  மாத முடிவில் பிள்ளையிடம் கொடுத்து அதைக் கூட்டி டோட்டல் போட சொல்லி ‘இந்த மாதம் நம் வீட்டிற்கு இவ்வளவு செலவு ஆகி இருக்கிறது’ என்று சொல்லுங்கள்.

2. காத்திருப்பின் அத்தியாவசியம்: பிள்ளைகள் எந்தப் பொருள் கேட்டாலும் அன்றே வாங்கிக் கொடுக்காமல், சற்றே பொறுத்து வாங்கித் தர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு காத்திருப்பின் அருமையும், வாழ்வில் எதுவும் அத்தனை எளிதில் கிடைக்காது என்ற உண்மையும், பணத்தின் முக்கியத்துவமும் புரியும். தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லித் தாருங்கள். எது அத்தியாவசியம், எது ஆடம்பரம் என்று சொல்லித் தாருங்கள்.

3. சேமிப்பின் அருமை: வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தி, அதற்கான ஊக்கத்தொகை தாருங்கள். ஒரு உண்டியல் வாங்கிக்கொடுத்து அதை அதில் போட்டு வைக்கச் சொல்ல வேண்டும். இரண்டு மூன்று மாதங்கள் சேமித்த பணத்தில் அவர்கள் விரும்பியதை வாங்க சொல்லலாம். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வீண் செலவு செய்ய மாட்டார்கள்.

4. விருப்பத்திற்கு மரியாதை:  தீபாவளி, பொங்கல், பிறந்த நாள், வருடாந்திர சுற்றுலா போன்றவற்றிற்கு, குடும்ப பட்ஜெட்  இவ்வளவு என்று சொல்லி அதற்குள் அவர்களுக்குப் பிடித்த உடைகள், பார்க்க வேண்டிய இடங்களை தேர்வு செய்ய அனுமதி கொடுங்கள். அவர்கள் விருப்பத்திற்கு மரியாதை தருவதுடன், சிக்கனத்தையும் கற்றுக்கொள்கின்றனர்.

5. செயல்முறை விளக்கம்: வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருள்களை பிள்ளைகளிடம் ஒரு தாளில் பட்டியல் போடச் சொல்லுங்கள். கடைக்கு செல்லும்போது அவர்களையும் கூட்டிச் சென்று அந்த பட்டியலில் இருக்கும் பொருட்களை மட்டும் வாங்குங்கள். நீங்கள் எடுத்துச் சென்றிருக்கும் பணம் எவ்வளவு, எவ்வளவு செலவாகி இருக்கிறது, மீதம் உங்கள் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். இதனால் நடைமுறையில் ஒரு பொருளை எப்படி பார்த்து வாங்குவது என்றும், அனாவசியமாக பொருட்களை வாங்கக் கூடாது என்றும் அறிந்துகொள்கின்றனர்.

6. லோன் பற்றிய விவரம்: அவர்களின் கல்விக்கடன், வாகனம் மற்றும் வீட்டு  லோன் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவையில்லாத செலவு செய்ய மாட்டார்கள். தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது, பார்ட்டிக்கு செல்வது என்று வெட்டிச் செலவு செய்வது தவிர்க்கப்படும். பதினாறு வயதிலேயே பைக் வாங்கிக் கொடு என்று நிற்க மாட்டார்கள்.

7. எஜுகேஷன் லோன்: கல்லூரியில் படிக்கும்போது  பிள்ளைகளுக்கு எஜுகேஷன் லோன் போட்டு பின்னர் அவர்களையே அதை கட்டச்சொல்லவும். இதனால் நன்றாக படிப்பதுடன், வேலை கிடைத்ததும் பொறுப்பாக லோன் அடைக்கும் பக்குவமும் வரும்.

8. பகுதிநேர வேலை: கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை செய்ய சொல்லலாம். இதனால் படிப்பு, வேலை இரண்டையும் சமமாக பாலன்ஸ் செய்வதுடன், அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெட்டிப் பொழுது போக்க நேரமிருக்காது.

9. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை: பணம் முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை இல்லை. பணத்தால் பொருட்களை வாங்கலாம். ஆனால், மனிதமும் மனிதாபிமானமும் மிகவும் முக்கியம் என்பதை அழுத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com