வரவறிந்து சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!

வரவறிந்து சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!

மீபத்தில் என் தோழியின் மகளுடன், நாங்கள் கடைக்குச் சென்றிருந்தபொழுது, அவள் அம்மாவிடம், “அம்மா, இன்று அடுத்த வீட்டு ஆன்ட்டிக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கு” என்றாள். ஏன்? எதற்கு? என்று என்னுடைய தோழி கேட்டதற்கு, “அவங்களுக்கு இன்று பிறந்த நாள். நான் என் பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்கப் போனபோது அந்த ஆன்ட்டி எனக்கு நூறு ரூபாய் கொடுத்து என்னை ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்,” என்றாள். என் தோழிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கவில்லையே? என்ன செய்தாய்?” என்று கேட்டபொழுது, “சாக்லேட். பெப்ஸி வாங்கிச் சாப்பிட்டேன்” என்றாள்.

குழந்தைகளுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுங்கள். பழக்கத்துக்குக் கொண்டு வருவது கடினம். தகுந்த காரணங்களை நல்லதனமாகக் கூறி அவர்களுக்கு சேமிப்பதைக் கற்றுத் தர வேண்டும். எதிர்காலத்திற்கு சேமிக்கவேண்டும் என்றால் புரியாது! சேமிப்பதைக் கற்றுக் கொடுக்க, அளவுக்கு அதிகமாக கேட்பதை யெல்லாம் வாங்கிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளின் நச்சரிப்பு, அழுகை பொறுக்காமல் கடைகளுக்குச் செல்லும்போது அவசியமோ, அவசியமில்லையோ கேட்பதை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது தவறு! அந்த மாதிரி அவர்கள் பிடிவாதம் பிடிக்கும்போது இப்பொழுது இதைவாங்காமல் இருந்தாயானால் பணம் சேமித்து நீ கேட்ட சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று சொல்லுங்கள். அதேபோல கடைக்கு ஏதாவது ஒரு பொருள் வாங்க அவர்களை அழைத்துக்கொண்டு போகும்போது, நல்ல பொருளாகவும், விலையும் அதிகம் இல்லாமலும் எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓரளவு வளர்ந்துவிட்ட உதாரணமாக +2 படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டு வரவு செலவுக் கணக்குகளையும் பார்த்துக் கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதானே, பணத்தைக் கையாளக் கற்றுக் கொள்வார்கள். காந்திஜி இங்கிலாந்திற்குப் படிக்கச் சென்றபோது, ஒவ்வொரு நாளும் தான் செலவழித்துவந்த சிறு தொகைக்குக்கூட கணக்கு வைத்துக் கொண்டிருப்பாராம். அதைப் பிறகு எடுத்துப் பார்க்கும்போது அவர் அதுவரை செய்துவந்த அனாவசியச் செலவுகள் புரியுமாம். உடனே செலவில் சிக்கனம் பிடிக்கத் தொடங்கி விடுவாராம்.

சில குழந்தைகள் நண்பர்களோடு மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசுவார்கள். இப் பழக்கமுள்ள குழந்தையை அவன் பாக்கெட் மணியிலிருந்து சிறிதளவு தொலைபேசிக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அனாவசியமாக வண்டியை எடுத்துச் செல்லும் குழந்தைகளிடம், பாக்கெட் மணியிலிருந்து பெட்ரோல் போடச் சொல்லுங்கள். கடன் வாங்கும் பழக்கம் நல்லதல்ல என்பதை ஆரம்பத்திலிருந்தே அவர்கள் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். நாம் வரவறிந்து செலவு செய்வதைப் பழக்கமாக வைத்துக்கொண்டால் அவர்களும் அப்படியே வளர்வார்கள். ஆரம்பப் படிக்கட்டுகளை அழகாகப் போட்டுவிட்டால் எதிர் காலத்தில் துன்பமிருக்காது. அவமானம் நிகழாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com