உடல் மற்றும் மன நலம் பேண எளிய பத்து வழிகள்!

உடல் மற்றும் மன நலம் பேண எளிய பத்து வழிகள்!

ண்டியில் பூட்டப்பட்ட இரு மாடுகள் ஒருங்கிணைந்து சென்றால் மட்டுமே செல்ல வேண்டிய இடத்துக்கு தடையின்றி சென்று சேர முடியும். இரண்டு மாடுகளில் ஒன்று முரண்டு பிடித்தாலும் வண்டி நகராது. அதேபோல்தான் வாழ்விலும் உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்வின் இலட்சியத்தை அடைந்து ஒருவரால் சாதிக்க முடியும். இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் உடல் மற்றும் மன பாதிப்போடு, அவரது வெற்றியும் பாதிக்கும். உடல் மற்றும் மன நலம் பேண சில எளிய வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. உழைப்பு ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலுக்கு ஓய்வும் முக்கியம். ஆரோக்கியமான தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் முதுமை நம்மிடம் நெருங்கும் வாய்ப்புண்டு.

2 . நேரம் தவறி தூங்குவதைத் தவிருங்கள். தூக்கமின்மையால் அளவுக்கு மீறி உண்ணும் பழக்கம் ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படலாம்.

3. நன்றாக சிரிக்கப் பழகுங்கள். மன அழுத்தம் குறைக்கும் ஹார்மோன்கள் அதிகம் உள்ள சிரிப்பு, முகத்தில் வரும் சுருக்கங்களைத் தவிர்த்து, உங்கள் இளமையைத் தக்க வைக்கும்.

4. உங்கள் சாப்பிடும் பழக்கத்தை நீங்களே கூர்ந்து கவனியுங்கள். பேசிக்கொண்டே சாப்பிடுவதைத் தவிருங்கள். நன்றாக மென்று உணவில் கவனத்துடன் சாப்பிட்டால் உடல் உணவின் சத்துக்களால் பயன் பெறும்.

5. உணவில் வண்ண மயமான காய்கறிகள், பழங்களைக் கலந்து சாப்பிட வேண்டும். பசிக்கு பொறித்த மற்றும் பாக்கெட்டில் அடைத்த நொறுக்குத்தீனிகளை தவிர்த்து சத்துள்ள பயிர் வகைகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

6. எப்போதும் சொகுசாக இல்லாமல் சிறு சிறு இயக்கங்களை உடலுக்குத் தந்து வாருங்கள். உதாரணமாக, லிப்டில் செல்லாமல் படிக்கட்டில் செல்வது, அருகிலிருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது போன்றவை.

7. மனதை எப்போதும் கட்டுப்பாட்டில் வைக்கப் பழக வேண்டும். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் மனதும் உடலும் இணைந்து இயங்குவதே அந்தச் செயலுக்கு வெற்றியைத் தரும்.

8. மனம் ஒருமுகப்பட தியானம் போன்றவைகளை பயிற்சி செய்யுங்கள். உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு தியானப் பயிற்சி மிகவும் முக்கியம்.

9. மனம் அழுத்தமாக இருப்பதைப் போல உணர்ந்தால் உடனே உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். அது பாட்டாக இருக்கலாம், சமையலாக இருக்கலாம், பிடித்தவரிடம் பேசுவதாகக் கூட இருக்கலாம்.

10. கடந்த காலத்தை மனதில் போட்டு வைப்பதை நிச்சயம் தவிர்த்து, நிகழ்காலத்தில் மட்டும் கவனம் வையுங்கள். யாராலும் உங்கள் மனதின் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தாலே உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com