
டெரகோட்டா (Terracotta): டெரகோட்டா என்பது சுட்ட களிமண்ணால் செய்யப்படும் ஒரு பொருளாகும். இது பொதுவாக மண் சிற்பங்கள், பாத்திரங்கள், பூந்தொட்டிகள், கூரை ஓடுகள், செங்கற்கள், நீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் மற்றும் கட்டிட அலங்கார பொருட்கள் போன்ற பல வகையான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது 'சுட்ட மண்' என்று பொருள்படும் இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்துள்ளது.
1) டெரகோட்டாவின் வகைகள் (Types of Terracotta):
நுண்ணிய டெரகோட்டா (Un-glazed): மெருகூட்டப்படாத, அதிக நுண்துளைகள் கொண்ட, நீர் உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ள வகையாகும். இவை செங்கற்கள், ஓடுகள், பூந்தொட்டிகள் மற்றும் கலைப் பொருட்கள் போன்றவற்றை உருவாக்க பயன்படுகிறது.
மெருகூட்டப்பட்ட டெரகோட்டா (Glazed): சுட்ட களிமண்ணின் மேற்பரப்பில் ஒரு மெருகூட்டும் அடுக்கு படிய வைக்க ப்படுகிறது. இவை பல்வேறு வண்ணங்களிலும், பளபளப்பான தோற்றத்திலும் கிடைக்கும். இவை கட்டிடக்கலை அம்சங்கள், கலை மட்பாண்டங்கள் மற்றும் டைல்ஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பிரவுன்ஸ்டோன் டெரகோட்டா (Brownstone): இவை ஹாலோ வார்ப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
கட்டிடக்கலை டெரகோட்டா (Architectural): கட்டிடங்களில் அலங்கார மற்றும் செயல்பாட்டு கூறுகளை உருவாக்க பயன்படுத்தப்படும் வகை.
கட்டிடப் பாதுகாப்பு டெரகோட்டா (structural Terracotta): தீயை எதிர்க்கும் தன்மை கொண்ட இந்த வகை பெரும்பாலும் கட்டிட கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2) டெரகோட்டாவின் பண்புகள்: இவை பெரும்பாலும் இயற்கையாகவே பழுப்பு, ஆரஞ்சு, காவி அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும். களிமண்ணை சூளையில் சுட்டு எடுப்பதால் உறுதியானது, எளிதில் உடையாதது மற்றும் எளிதில் தேயாதது. இவை கலை, கைவினை, கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் என பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
3) டெரகோட்டா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? (How is Terracotta made?):
மென்மையான களிமண் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான வடிவம் அல்லது சிற்பம் உருவாக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட பொருட்கள் பக்குவமாக உலர்த்தப்படுகின்றன. அப்படி உலர்த்தப்பட்ட பொருட்கள் சூளை போன்ற முறையில் சுடப்பட்டு வடிவங்கள் கெட்டியாக்கப்படுகின்றன.
4) டெரகோட்டா தயாரிப்புகள் மற்றும் பயன்கள் (Terracotta products and uses):
கலை மற்றும் கைவினை: சிற்பங்கள், சிலைகள், நகைகள், நினைவுப் பொருட்கள் போன்ற கலைப் பொருட்களை உருவாக்க பயன்படுகின்றன. டெரகோட்டா நகைகள் பொதுவாக கையால் வர்ணம் தீட்டப்பட்டு, பாரம்பரியம் மற்றும் நவீனத்தை இணைத்து தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. கழுத்து நகைகள், காதணிகள், வளையல்கள் போன்ற பல வகைகளில் டெரகோட்டா நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
கட்டிடக்கலை: கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் கட்டிடங்களின் சுவர் பூச்சுகளின் மேற்பரப்பு அலங்காரப் பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
பிற பயன்பாட்டு பொருட்கள்: பூந்தொட்டிகள், நீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் போன்ற பல பயன்பாட்டு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
5) டெரகோட்டாவின் வரலாறு (History of Terracotta): டெரகோட்டா சிந்து சமவெளி நாகரிகம் (கிமு 3300-1700) போன்ற பண்டைய நாகரீகத்தின் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெரகோட்டா கூரை ஓடுகள், கொள்கலன்கள், முத்திரைகள், மற்றும் தெய்வங்களின் உருவங்களும் அக்காலத்தில் இருந்தே செதுக்கப்பட்டு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கீழடி போன்ற அகழாய்வுகளில் சுடுமண் முத்திரைகள் கிடைத்துள்ளன. அது அக்காலகட்டத்தில் நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறது.
6) நவீன டெரகோட்டா கலை (Modern Terracotta art): நவீன கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் டெரகோட்டாவின் பாரம்பரிய பண்புகளை புதிய மற்றும் புதுமையான வழிகளில் பயன்படுத்துகின்றனர். சிக்கலான வலை வடிவங்கள், வென்டிலேஷன்(காற்றோட்டம்) மற்றும் அழகியல் ஆகியவற்றை இணைத்து நவீன வடிவமைப்பில் டெரகோட்டா ஜாலிஸ் உருவாக்கப்படுகிறது. நவீன உட்புறங்களுக்கு வசீகரம் மற்றும் நிலைத்தன்மையை வழங்கும் டைல்ஸ், பானைகள், புதுமையான சிற்பங்கள் மற்றும் கேசரோல் டிஷ் போன்ற அலங்கார பொருட்களை உருவாக்குகின்றனர்.