குடும்பத்தில் மூத்த பெண்ணுக்குத்தான் சுகத்தைவிட பொறுப்புகள் அதிகம்!

குடும்பத்தில் மூத்த பெண்ணுக்குத்தான் சுகத்தைவிட பொறுப்புகள் அதிகம்!

குடும்பத்தில் மூத்த குழந்தைகளாக இருந்தால் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இளம் வயதில் பெரும் சுமைகளையும் பொறுப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இவர் எப்போதுமே தனித்துவமானவர்கள்.

பெற்றோர் மூத்தவர்களை, இளையவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. உங்களிடம் பொறுப்பு என்னும் சுமை ஏற்றப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மூத்தவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்ததால் தாம் சந்தித்த சுமைகளையும், போராட்டங்களையும் ஒரு பெண் சமீபத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவரது உரையாடலைக் கேட்ட பலரும் அவரது நிலையை புரிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கடவுளின் பெயரைக் கொண்ட அந்த பெண்மணி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: “குடும்பத்தில் மூத்த பெண் என்பதால் அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டார்களா என்று பார்ப்பது முதல், தேநீர், சிற்றுண்டி தயாரிப்பது, விருந்தினர்களை வரவேற்பது, நெருக்கடி வரும்போது பொறுமையாக இருந்து அனைத்தையும் சமாளிப்பது, மற்றவர்களை

சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவது, மற்றவர்களின் உணர்வையும் புரிந்துகொள்வது என பல விஷயங்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் குடும்பத்தில் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் இளையவர்களுக்கு வழிகாட்டியாகவும் நான் இருக்க வேண்டியிருந்தது. வீட்டில் மற்றவர்களுக்கு உதவி செய்வது, அலுவலகத்தில் அனைவரையும் அரவணைத்து பணி செய்வது, குடும்பத்தில் இளையவர்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்துகொண்டு செயல்படுவது, அவர்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்வது, அவர்கள் நன்றாக படிக்கிறார்களா என்று கவனிப்பது, வீட்டு கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது என பல வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது என்கிறார் அவர்.

என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் எனக்கு என்று சில கவலைகள் இருந்தபோதிலும் நான் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் புன்னகையுடன் இருப்பேன். மறந்தும்கூட யார் மனதையும் புண்படுத்தியதில்லை. சில சமயங்களில் என்னுடைய தவறு இல்லை என்றாலும் எல்லாவற்றுக்கும் நானே காரணம் என்பதுபோல் பலமுறை நான் மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயத்தின் பேரில் மிகவும் மகிழ்ச்சியானவளாக நான் காட்டிக் கொண்டிருந்தேன். ஏனெனில் அப்போதுதான் எனது

குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாம் நன்றாக நடக்க வேண்டும். ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அது என்னால்தானோ என்று நினைத்து கவலைப்படுவேன் என்கிறார் அவர்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவரது உரையாடலை இதுவரை 12 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளர். சுமார் 7,700 பேர் பதில்களை டுவிட் செய்துள்ளனர்.

என் வாழ்க்கையிலும் நடந்தது இதுதான் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்திய உங்களுக்கு பாராட்டுகள் என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் மூத்த குழந்தைகளுக்குத்தான் சுகத்தைவிட பொறுப்புகள் அதிகம். நம்மை மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவர்களைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டிவரும் என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார். நான் மனதில் வைத்திருந்த்தை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com