Confident person
Self-respect

எதிராளி பலம் பெறுவது எப்போது?

Published on

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய முக்கிய உணர்வுகளுள் சுயமரியாதையும் ஒன்று. சுயமரியாதை நம் வாழ்க்கையோடு கலந்த முக்கிய உணர்வாகும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு அடக்கி ஆள்வதில் ஒரு குறுகுறுப்பான ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட அடிமை என்ற வார்த்தையே இதன் அடிப்படையில் தான் வந்திருக்க முடியும். எந்த ஒரு செயலிலும் நாம் நமது தரப்பு கருத்துக்களை வைக்காவிட்டால், எதிராளி பலமாக மாறிவிடுகிறார். எப்படி? இந்த கதையை படித்தால் புரியும்...

ஒரு ஊரில் தொழிற்சாலை முதலாளி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்தப் பெண் குழந்தையை கவனித்துக் கொள்ள அவர் புதிதாய் ஒரு வேலைக்கார பெண்ணை நியமித்தார்.

அவரது குழந்தைகளுக்கு தேவையான வேலைகளை அந்த வேலைக்காரப் பெண்  செய்து கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து அந்தப் பெண்ணுக்கு படிப்பும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு சம்பளமாக 40 காசுகளை கொடுப்பதாக முதலாளி  அறிவித்தார்.

அந்த பெண் வேலைக்கு சேர்ந்து  ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஆனால் அவரோ சம்பளம் கொடுப்பதாகவே தெரியவில்லை. ஒரு நாள் அந்த வேலைக்கார பெண்ணை அழைத்தார். நீ வேலைக்கு சேர்ந்து 25 நாட்கள் தான் ஆகின்றன, அதனால் இந்த மாதத்திற்கான சம்பளத்தை உனக்கு கொடுக்கிறேன் என்றார். அந்தப் பெண் வேலைக்கு சேர்ந்தது மாதத்தின் முதல் தேதியில், ஆனால் முதலாளியோ ஐந்து நாட்களைக் குறைத்து 25 நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்தார். அந்தப் பெண் நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது என்று தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

முதலாளி அந்த பெண்ணிடம் உனக்கு முப்பது காசுகள் தானே சம்பளமாக பேசப்பட்டது என்றார். அந்தப் பெண் தனக்கு சம்பளமாக பேசப்பட்டது 40 காசுகள் என தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டாள். இந்த மாதத்தில் மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக வந்தன, அந்த மூன்று நாட்களும் நீ என் பெண்ணை கவனித்துக் கொள்ளவில்லை. அதனால் மூன்று காசுகளை கழித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ ஒரு நாள் தானே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். நீ இந்த மாதத்தில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துள்ளாய். அதனால் அதற்காகவும் மூன்று காசுகளை கழித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ விடுமுறை எடுத்தது அரை நாள் மட்டுமே என்பதை தனக்குள்ளாவே சொல்லிக் கொண்டாள்.

நீ இந்த மாசம் வீட்டை பெருக்கும் போது கவனிக்காமல் இரண்டு கண்ணாடி டம்ளர்களை உடைத்து விட்டாய். அதன் மதிப்பு 15 காசுகள். உனக்காக குறைத்து நான் ஒரு 10 காசுகளை குறைத்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் அந்த வேலைக்காரப் பெண்ணோ கண்ணாடி டம்ளர்களை உடைக்கவே இல்லை. முதலாளி பார்க்கும்போது உடைந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அதை உடைத்தது முதலாளியின் மனைவி தான். ஆனால் அதையும் அவளுக்கு முதலாளியிடம் சொல்ல பயமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
நுண்ணிய மேலாண்மையின் சிறப்புகளும் இழப்புகளும்!
Confident person

இறுதியாக எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்துவிட்டு மீதமுள்ள 14 காசுகளை அந்த பெண்ணுக்கு சம்பளமாக கொடுத்தார். அந்த வேலைக்கார பெண்  அப்பொழுதும் ஒன்றுமே கூறாமல் மிக்க நன்றி ஐயா! என்று கூறிக்கொண்டு அதனை வாங்கிக் கொண்டு சென்றாள்.

முதலாளிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்களா? தன் முழு உழைப்பையும் கொடுத்தும் கூட எதிர்த்து கூறும் அளவுக்கு வலிமையற்று மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் வேலைக்கார பெண்ணுக்கோ 60 காசுகளுக்கு மேல் தேவை இருந்தது. இந்த 40 காசுகளை வைத்து ஓரளவு சமாளித்து விட முடியும் என அவள் எண்ணி இருந்தாள். ஆனால் சம்பளமாக கொடுக்கப்பட்ட 14 காசுகளை நினைத்தபோது அவளுக்கு அழுகை அடக்க முடியாமல்  கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

முதலாளி அந்த வேலைக்கார பெண்ணை மறுபடியும் கூப்பிட்டார். "நான் ஒவ்வொரு கணக்கு சொல்லும் போதும்  நீ என்ன சொல்ல நினைத்தாய் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீ ஏன் இப்படி இருக்கிறாய்? ஏன் உன்னால்  உண்மைக்கு ஆதரவாக பேச முடியவில்லை? நான் பேசுவது எல்லாம் அநியாயம் என்று தெரிந்திருந்தும் ஏன் மௌனமாக இருந்தாய்? அதுதான் எனக்குப் புரியவில்லை," என்றார். ஆனால் அந்த வேலைக்கார பெண்ணோ இப்போதும் மௌனமாகவே இருந்தாள். முதலாளி அந்த பெண்ணிடம் இந்தா உன்னுடைய உழைப்புக்கான பலன் என்று 40 காசுகளை கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
கண்டிப்பான பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் 9 பாதிப்புகள்!
Confident person

நாமும் நம் வாழ்வில் கூட பல நேரங்களில் நியாயம் நமது பக்கம் இருந்தும்  கூட பேசாமல் மௌனமாக இருந்து விடுகிறோம். அப்படி இருப்பதால் நம் இழப்புகளையும் தாண்டி, ஏதோ ஒரு இடத்தில் எதிராளி பலமாக மாறிவிடுகிறார். எனவே எந்த ஒரு இடத்திலும்  நம்முடைய தரப்பு வாதத்தை நாம் வைப்பதன் மூலமே நம் பொருளையும் நம்முடைய சுயமரியாதையையும் நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும்!

logo
Kalki Online
kalkionline.com