Hospitality
HospitalityImg Credit: Adobe stock

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

Published on

- தா. சரவணன்

தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தில் மிக முக்கியமானது, விருந்தோம்பல் ஆகும். வீட்டுக்கு வந்திருப்பது நமது எதிரியே என்றாலும், அவர்களுக்கு முதலில் குடிக்க தண்ணீர், அதன் பின்னர் சாப்பாடு போட்டு அனுப்புவதுதான் நமது சிறப்பு. அதுவும் கிராமங்களில் நீண்ட நாள் செல்லாத விருந்தாளிகளாக இருந்து, அதுவும் மாமன், மச்சான் உறவு முறையாகவும் இருந்து விட்டால் அவ்வளவுதான். அந்த வீட்டைச் சுற்றித் திரியும் 2 அல்லது 3 வெடக் கோழிகள் பரலோகம் பார்த்துவிடும். ‛கோழி அடிச்சு கொழம்பு வச்சு, ‘ நல்லா சாப்புடு மாப்ளே’ என்பதில்தான் இன்னமும் நம் கிராமப்புறங்களில் விருந்து என்பதே நிறைவு பெற்றதாக இருந்து வருகிறது.

இந்த விருந்தோம்பல் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் சற்றே வித்தியாசப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேச கிராமங்களில் வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு தண்ணீர், டீ அத்துடன் பீடி வழங்குவது இன்னும் சில கிராமங்களில் பழக்கமாக உள்ளது. ஆனால், இந்தக் கலாச்சாரம் (பீடி கொடுப்பதை சொல்லவில்லை) இப்போது நகர்ப்பகுதிகளில் மங்கி வருகிறது. இதற்குக் காரணம், நகர்ப்புறங்களில், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு யார் உறவினர், யார் ரத்த சம்பந்த உறவினர் என்பதே தெரிவதில்லை. இது போன்றவர்களின் வீடுகளுக்குக் கிராமப்புற உறவினர்கள் செல்லும்போது, அவர்களிடம் அமர்ந்து பேசக்கூட நகரத்தவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதேபோல உற்றார், உறவினர்களுடன் ஒன்றாக சேர்ந்து எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. இப்படி இருக்கும்போது, நகர்ப்பகுதிகளில் வளரும் குழந்தைகளுக்கு விருந்தோம்பல் என்பது, நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமே என்பதாக போய் விடுகிறது.

இதையும் படியுங்கள்:
மனித எண்ணங்களை மாற்றும் வண்ணங்களின் மகத்துவம் தெரியுமா?
Hospitality

இன்னும் சில ஆண்டுகள் கழித்து, நகர்ப்புறங்களில் விருந்தோம்பல் என்பது, காணக்கிடைக்காத நிகழ்வாக மாறிவிடும். அதனால் நம்முடைய கலாச்சாரம் , பண்பாடு குறி்த்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடக் கூடும். அதற்கேற்றபடி, டப்பிங் செய்யப்பட்ட ஆங்கிலப் படங்களில் வரும் பெரும்பான்மையான வசனங்கள் போல வீட்டுக்கு வந்த விருந்தினரிடம், வீட்டு உரிமையாளர், ‛நீங்க ஏன் வந்திருக்கீங்கணு தெரிஞ்சுக்கலாமா? நீங்க ஏன் உக்காரக் கூடாது? நீங்க ஏன் டீ சாப்பிடக் கூடாது‛ எனக் கேட்பதாக இருக்கும். ஆனால், நமது கலாச்சாரமோ, வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, வாங்க என வாய் நிறைய அழைத்து, அவர்களுக்கு உணவளித்து உபசரிப்பது விட்டு அதன் பிறகுதான் என்ன விசேஷம்? எனக் கேட்பது. ஆனால் இப்போதுள்ள நகரச் சூழல் இன்னமும் நீடித்தால், ஆங்கில டப்பிங் திரைப்படங்களில் வரும் வசனம் நமது வீடுகளில்  நடப்பதற்கான காலம் வெகு துாரத்தில் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com