Surgeons with Green Dress
Surgeons

அறுவை சிகிச்சை நிபுணர்கள் பச்சை நிற ஆடை அணிவதன் ரகசியம்!

Published on

பொதுவாக, பச்சை நிறம் என்பது மனித உளவியல் மற்றும் உடலியல் மீது பல நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் அமைதி மற்றும் தளர்வு உணர்வுகளுடன் தொடர்புடையது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து அமைதிப்படுத்தும் இயல்பு கொண்டது பச்சை நிறம். பூங்காக்கள் அல்லது காடுகள் போன்ற இயற்கையான பச்சை சூழல்கள் ஒரு இனிமையான சூழ்நிலையை உருவாக்கக் கூடியது. பச்சை நிறம் கண்களுக்கு இதமானது மற்றும் பார்வை சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது. கவனம் மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது. இத்தகைய சிறப்பான காரணங்களினால்தான் நம்பிக்கை தரும் ஆன்மிகம் மற்றும் மருத்துவத்தில் பச்சை நிறம் ஏதேனும் ஒரு பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்மிகத்தில் வருடா வருடம் விமர்சையாக நடைபெறும் பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கும் கள்ளழகர் முதல் பச்சைக்கிளி கையிலேந்திய பசுமை நிற மீனாட்சி அம்மன் திருவுருவம் போன்றவைகளும். மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் பச்சை நிற அங்கிகளும் பச்சை நிற சிறப்புக்கு சான்று. குறிப்பாக, மருத்துவர்கள் அணியும் பச்சை நிற அங்கியின் பின்னணி என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
துரித உணவு விளம்பரங்களும் குழந்தைகளின் ஆரோக்கியமும்!
Surgeons with Green Dress

பொதுவாக, மருத்துவர்கள் வெண்மை நிறத்தையே விரும்பி பயன்படுத்தி வந்தனர். 1900களின் தொடக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் உடை மட்டுமல்லாது, சுற்றுப்புற சூழலான சுவர், நோயாளிகள் பயன்படுத்தும் மெத்தை விரிப்பு, தலையணை, ஸ்கிரீன் போன்றவைகளும் வெள்ளை நிறத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தன. காரணம், வெள்ளை தூய்மையைக் குறிப்பதால் மட்டுமின்றி, சமாதானம் மற்றும் அமைதியான உணர்வுகளையும் ஊக்குவிக்கும் என்பதால் வெண்மைக்கு முன்னுரிமை தரப்பட்டது. இன்றும் மருத்துவர்கள்  உடை விஷயத்தில் வெண்மை நிறம் மாறவில்லை.

ஆனால், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் அங்கிகள் மற்றும் விரிப்புகள் நோயாளிகள் உடைகள் போன்றவை பச்சை நிறத்தில் இருப்பதைக் காண்கிறோம். எதனால் பச்சை வண்ணம் பயன்படுத்தத் தொடங்கினர் என்பதற்கான சிறு விளக்கம்.

ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சையின்போது நீண்ட நேரம் நோயாளியின் உடலைக் கையாளுவதால் இரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தை அதிக நேரம் உற்று நோக்கும்போது கண்களில் உள்ள கூம்பு வடிவ செல்கள் (வண்ணப் பார்வைக்கு காரணமானவை) உணர்விழக்க ஆரம்பித்து, மூளையின் சிவப்பு நிற சிக்னல் மங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக அவரால் சிவப்பு நிறத்தின் வகைகளை இனங்காண முடியாமல் போய், மனித உடலின் நுணுக்கங்களைக் காணக் கடினமாக இருக்கும்.

இந்த சூழலில் தனது கண்களுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டி அல்லது சக மருத்துவர்கள், செவிலியரிடம் உரையாட தனது பார்வையை சுற்றுப்புற வெள்ளை நிறத்தில் பார்த்தால் அவருக்கு தான் கண்ட நோயாளியின் சிவப்பு நிற உறுப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் தெரியும். இந்த நிற எதிரொலி ‘கோஸ்ட் எஃபக்ட்’ என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பருத்தி ஆடைகளை பராமரிப்பது எப்படி தெரியுமா?
Surgeons with Green Dress

இதனால் ஏற்படும் கண் சோர்வைத் தடுப்பதற்காக அறுவை சிகிச்சை அரங்கில் பயன்பாட்டில் இருந்த வெள்ளை நிறத்திற்கு பதில் பச்சையோ, இளம்பச்சையோ, நீலப்பச்சை நிறமோ பயன்படுத்தத் தொடங்கினர் என்கிறது மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கும் குறிப்புகள்.

மேலும், நோயாளிகளுக்கும் பச்சை நிறம் நேர்மறை எண்ணங்களையும், அமைதி, வலியிலிருந்து ஆறுதல் தரும் என்பதால் அவர்களுக்கும் அந்த நிற சூழலே வழங்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com