

மழைக்காலம் வந்துவிட்டாலே துவைத்த துணிமணிகள் நன்றாகக் காயாது. பால்கனி எப்பொழுதும் நசநசவென்று இருக்கும். அதிலும் மரம், செடி, கொடிகள் பால்கனியை தொட்டுக் கொண்டிருந்தால் எப்பொழுதும் இலைகள் பால்கனியில் உதிர்ந்து கிடக்கும். எப்படி சுத்தம் செய்தாலும் காற்றில் இலைகள் விழுவதைத் தடுக்க முடியாது. இதுபோல், ஒவ்வொன்றிலும் நிறைய வேலை வாங்கும் நிகழ்வுகள் நடப்பது இந்த மழைக்காலத்தில்தான். அதை சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
மழை, குளிருக்கு இதமான கருப்பு, கருநீலம், அடர் பச்சை போன்ற அடர் கலர் துணிமணிகளை அணிவதற்கு ஏற்றபடி எடுத்து வைத்து விடுங்கள். போர்வை, ஷால், ஸ்வெட்டர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். வாஷிங் மெஷினில் துணியை போட்டு எடுத்தவுடன் அதன் உள் ஓரங்களில் இருக்கும் தண்ணீரை நன்றாக துடைத்து விட்டு, சிறிது நேரம் உலர விட்டு மெஷினை மூடி, நன்றாகக் கவரைப் போட்டு வைத்து விட்டால் பால்கனியில் வைத்திருக்கும் வாஷிங் மெஷின் பாதுகாப்பாக இருக்கும்.
துணிகளை ஹேங்கரில் காயப் போட்டால் காய வைப்பதற்கு போதிய இடவசதி கிடைக்கும். சீக்கிரம் காய்ந்தவற்றை எடுத்து விட்டு மற்ற ஈர துணிகளை காயப் போடுவதற்கும் வசதியாக இருக்கும். கர்சிப், சாக்ஸ் போன்றவற்றை பயன்படாத கேஸ் கட்டில் காய வைக்கலாம்.
பால்கனியில் லூவர் போட்டு வைத்து விட்டால் தொட்டிச் செடிகளில் தண்ணீர் விழுந்து தரையில் அவை படியாமல் இருக்கும். செடிகளிலும் மழை நீர், காற்று போன்றவை அளவுக்கு அதிகமாக பட்டு உடையாமல் இருக்கும். பால்கனியை தொட்டுக்கொண்டு இருக்கும் மரக் கிளைகளை அடிக்கடி வெட்டி விட்டால் தூசு கொட்டாது. அதேபோல், வீட்டை சுத்தம் செய்துவிட்டு பால்கனிக்கு வெளியில் வைத்திருக்கும் மாப், துடைப்பம் போன்றவற்றை அங்கு வைக்காமல் மழை நீர் படாதபடிக்கு ஒரு இடத்தில் வைக்கவும். இல்லையென்றால் துடைப்பம் போன்றவற்றில் தொடர்ந்து மழை நீர் பட்டு கருப்பாக ஆகிவிடும். மாப்பும் பயன்படுத்த முடியாமல் வீணாகிவிடும். நீண்ட நாட்கள் வெளியூர் சென்றாலும் இவற்றை பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லுங்கள்.
‘எல்’ போர்டு போட்டுக்கொண்டு வண்டியை ஓட்டுபவர்கள் மழைக்காலத்தில் அதிகம் வண்டி ஒட்டாமல் இருப்பது நல்லது. அப்படியே ஓட்டினாலும் செல்லில் பேசுவதோ, அளவுக்கதிகமான மழை நீர், சகதியுள்ள பகுதிகளில் ஒட்டுவதோ கூடாது. மேலும், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக், வாகன வரி, பொல்யூஷன் சர்டிபிகேட் போன்ற முக்கியமான பேப்பர்களை வைத்துக் கொண்டு ஓட்டுவது அவசியம். நெரிசலில் லாரிகள், பேருந்துகளுக்கு இடையில் செல்லாதீர்கள். சீட் பெல்ட்டை மறவாமல் போடுங்கள்.
மழைக்காலத்தில் கொதிக்கும் தண்ணீரில் சில துளசி இலைகளை போட்டு வடிகட்டி குடிக்கலாம். இது ஜலதோஷத்தை எதிர்க்கும், சளி பிடித்திருந்தாலும் அதைப் போக்கும். அதேபோல், சூடான, எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ணுவது அவசியம். இட்லி, தோசைக்கு மாவு அரைத்து சூடான தண்ணீர் பாத்திரங்களுக்கு பக்கத்தில் வைத்தால் நன்றாகப் புளிக்கும்.
அப்பளத்தை உளுத்தம் பருப்பு டப்பாவில் போட்டு இறுக்க மூடி விட்டால் நமுக்காமல் இருக்கும். தேங்காய் எண்ணெயில் சிறு துளி விளக்கெண்ணெய் சேர்த்தால் உறையாமல் இருக்கும். கல் உப்பை வறுத்து ஜாடியில் போட்டு வைக்கலாம். இல்லையேல் இரண்டு பச்சை மிளகாயை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் ஈரம் கசியாமல் இருக்கும். கால் வெடிப்பில் உருளைக் கிழங்கு சாற்றை இரவில் தடவி வரலாம். குடை, ரெயின் கோட், செல் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க திக்கான சில பாலிதீன் பைகள் போன்றவற்றை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வெளியில் உணவுகளை ஆர்டர் செய்திருந்தால் அவர்கள் வீட்டிற்கு வந்து கொடுப்பதற்கு கால தாமதம் ஏற்படலாம். மழையின் காரணமாக இதெல்லாம் சகஜம்தான். ஆதலால் அப்படி உணவு கொண்டு வருபவர்களை துரிதப்படுத்தாதீர்கள். லேட்டாக வந்தால் திட்டி அனுப்பாதீர்கள். அனுசரணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
பினாயில், டெட்டால் போன்றவற்றை நீர் உள்ள பகுதிகளில் அடிக்கடி பயன்படுத்துங்கள். இதனால் புழு பூச்சிகள் உள்ளே வராமல் இருக்கும். நீர் புழங்கும் இடங்களில் துர்வாடையும் வீசாது. துணிமணி உள்ள ஷெல்ப்புகளில் சாக்பீசுகளை போட்டு வைக்கலாம். அது ஈரத்தை உறிஞ்சும்.
ஒரு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி ஒரு ஓரத்தில் வைத்து விட்டால் கொசு அதில் விழுந்து விடும். நாம் தப்பிக்கலாம். தோல் பர்ஸ், பைகளை நன்றாகத் துடைத்து வைத்து விட்டால் பூஞ்சை வராது. உணவுப் பொருட்கள் கீழே சிந்தினால் உடனே அதை துடைத்து விட வேண்டும். இல்லையென்றால் மழைக்காலத்தில் சட்டென்று பூஞ்சை பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.