

மனிதர்கள் என்னதான் ஓடி ஓடி பணம் சம்பாதித்தாலும், புகழைத் தேடினாலும் இறுதியில் ஆசைப்படுவது என்னவோ நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத்தான். டென்மார்க் மக்கள் எளிமையான, சௌகரியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை முறை ஒன்றை பின்பற்றுகிறார்கள். அதற்கு, ‘ஹுகா வாழ்க்கை முறை’ எனப் பெயர். இதில் உள்ள சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹுகா - பொருள்: Hygge என்ற டேனிஷ் மற்றும் நார்வேஜியன் வார்த்தை ஹுகா என்று உச்சரிக்கப்படுகிறது. திருப்திகரமான, எளிமையான அதேசமயம் சௌகரியமான வாழ்க்கை முறையை இது குறிக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசித்து வாழும் வாழ்க்கையை இது வலியுறுத்துகிறது. நடைமுறை வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்னைகள், சிக்கல்கள் இவற்றில் இருந்து விலகி அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை தனிமையிலோ அல்லது மனதுக்குப் பிடித்தவர்களுடன் வாழும் முறை இது.
ஹுகா வாழ்க்கை முறை: டென்மார்கில் கடுமையான குளிர் மற்றும் இருண்ட காலங்களில் மக்கள் ஹுகா வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார்கள். இதன்படி வீட்டில் உள்ள ஒரு அறை அல்லது மொத்த வீட்டையும் மாற்றிக் கொள்ளலாம். இதை அழகான முறையில் அலங்கரித்து அங்கே பொழுதைக் கழிக்க வேண்டும். மன அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இங்கே அமர்ந்து காபி குடிக்கலாம், சமையல் செய்யலாம், குடும்பத்தினருடன் அல்லது மனதுக்கு பிடித்தவர்கள் உடன் அமர்ந்து பேசலாம். உண்ணலாம். ஆனால், பரபரப்பு இல்லாமல், டென்ஷன் இல்லாமல் ரசித்து அனுபவித்து செய்ய வேண்டும். சினிமாவோ சோசியல் மீடியாக்களில் வரும் ரீல்ஸ் இவற்றை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அதிலிருக்கும் சண்டை, சச்சரவுகள் எதிர்மறை விஷயங்கள் மனதை பாதிக்கக்கூடும்.
மேலும், அறை முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க வேண்டும். பின்னணியில் மெல்லிசை ஒலிக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம், கடந்த காலத்தைப் பற்றிய கசப்பு எதுவும் இல்லாமல் அந்த நிமிடத்தை அனுபவித்து ரசித்து வாழ்வதே இந்த வாழ்க்கை முறையின் முக்கிய அம்சமாகும்.
டென்மார்க் மக்கள் அறை முழுவதும் கண்ணை உறுத்தாத மெல்லிய விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து வரும் குறைந்த வெளிச்சம் மனதுக்கு இதம் தரும். பிடித்தவர்களுடன் மனம் விட்டுப் பேசி சிரிக்கிறார்கள். புத்தகங்கள் வாசிப்பது, புதிர்களை விடுவிப்பது, கை வேலைகள் போன்றவற்றை செய்கிறார்கள். வீட்டில் சமைத்த உணவை உண்பது என்று நேரத்தை கழிக்கிறார்கள்.
டென்மார்க் மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்: அந்த ஊர் மக்கள் இந்த முறையை அடிக்கடி கடைப்பிடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் நம்பிக்கையை பரிமாறிக் கொள்ளவும், ஒன்றாக இருக்கிறோம் என்கிற ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் இது உதவுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அன்றைய நிமிடத்தில் கவனம் வைத்து அதை அனுபவித்து ரசித்து வாழ்வதுதான் இதில் சிறப்பு.
எந்தவிதமான குறுக்கீடுகளும் தொந்தரவுகளும் இருக்கக் கூடாது என்பது முக்கியமான அம்சம். குளிரைப் போக்குவதற்கு மிகவும் விலை உயர்ந்த போர்வைகள், பொருட்களை வாங்குவது பற்றி கவலைப்படாமல் தன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தியாக வாழும் முறையை இது வலியுறுத்துகிறது.
கடுமையான குளிரும் இருளும் சூழ்ந்த டென்மார்க்கில் இந்த வாழ்க்கை முறையை மக்கள் அடிக்கடி கடைபிடிப்பதால் அவர்கள் நடைமுறை வாழ்க்கையை சிக்கல் இல்லாமல் எதிர்கொள்ள முடிகிறது. அதனால்தான் டென்மார்க், உலகிலேயே மிகவும் சந்தோஷமாக வாழும் மக்களைக் கொண்ட நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையை நாமும் கடைபிடித்தால் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுத்தது போல புத்துணர்ச்சி தரும்.