

நட்பில் பல வகை உண்டு. சில நட்பானது உறவுகளுக்கும் மேலாக உயர்வாக மதிக்கப்படுபவை. வேறு சில, சில காலங்கள் மட்டுமே இருந்து, பின் தொடர்பே இல்லாமல் தொலைந்துபோகும். பிரயோஜனம் ஏதுமின்றி அவ்வப்போது போனில் நலம் விசாரித்து விட்டு, 'உண்டா இல்லையா' என்ற அளவில் ஊசலாடும் நட்பும் உண்டு.
நட்பு மனித வாழ்க்கையின் முக்கியமான ஒரு அங்கமாகும். மனிதன் சமூக உயிரினமாக இருப்பதால், அவனது வாழ்வில் நட்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் அவரது Nicomachean Ethics என்ற நூலில் நட்பின் இயல்பையும் அதன் வகைகளையும் விரிவாக விளக்குகிறார். அவர் நட்பை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். அவை பயன் தரும் அடிப்படையிலான நட்பு, மகிழ்ச்சி தரும் அடிப்படையில் உருவாகும் நட்பு மற்றும் நல்லொழுக்கம், நற்பண்புகள் போன்ற குணநலன்களின் அடிப்படையில் உருவாகும் நட்பு ஆகும்.
1. பயன் அடிப்படையிலான நட்பு (Friendship of Utility): இந்த வகை நட்பு, ஒருவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகள் அல்லது உதவியை அடிப்படையாகக் கொண்டது. ஒருவருக்கொருவர் தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே இந்த நட்பு நீடிக்கும். உதாரணமாக, பிசினஸ் பார்ட்னர், ஒரு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் போன்றவர்களுடன் சகஜமாகப் பழகும்போது உருவாகும் நட்பு போன்றவை இந்த வகை நட்பில் அடங்கும். இடமாற்றம் அல்லது வேறொரு பணியை தேர்ந்தெடுத்து செல்லுதல் போன்ற சூழ்நிலை உண்டாகும்போது இந்த வகை நட்பும் தானாக முடிவுக்கு வந்து விடும். அரிஸ்டாட்டில் இதை தற்காலிகமான நட்பாகக் கூறுகிறார்.
2. மகிழ்ச்சி தரும் அடிப்படையில் உருவாகும் நட்பு (Friendship of Pleasure): இந்த நட்பு, ஒருவருடன் பழகுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இளம் வயதில் உருவாகும் பல நட்புகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒரே விருப்பங்கள், பொழுதுபோக்குகள், சிரிப்பு, விளையாட்டு போன்றவை இந்த நட்பின் அடித்தளம். ஆனால், மகிழ்ச்சி தரும் விளையாட்டுகளில் செலவிட நேரம் குறையும்போது அல்லது விருப்பங்கள் மாறும்போது, இந்த நட்பும் மங்கிவிடும். எனவே, இதுவும் நிலைத்த நட்பாக இருக்காது.
3. நல்லொழுக்க அடிப்படையிலான நட்பு (Friendship of Virtue): இது அரிஸ்டாட்டில் கூறும் மிக உயர்ந்த மற்றும் சிறந்த நட்பு ஆகும். இந்த நட்பு, ஒருவரின் நல்ல குணங்கள், நேர்மை, பண்பாடு போன்றவற்றை அறிந்து, அவரின் நற்குணங்களை மதித்து உருவாகிறது. இதில் நண்பர்கள் ஒருவர் மற்றவரின் நலனை உண்மையுடன் விரும்புவார்கள். இந்த நட்பு நீண்ட காலம் நிலைத்திருக்கும். ஏனெனில், நல்லொழுக்கமானது காலப்போக்கில் மாறிவிடாது. இப்படிப்பட்ட நட்பு அரிதாக இருந்தாலும், மனித வாழ்க்கைக்கு மிக மதிப்பு மிக்கதாகும்.
அரிஸ்டாட்டில் கூறும் மூன்று வகை நட்புகள் மனித உறவுகளின் பல்வேறு நிலைகளை விளக்குகின்றன. பயன்பாடு மற்றும் மகிழ்ச்சி தரும் அடிப்படையிலான நட்புகள் தற்காலிகமானவை. நல்லொழுக்க அடிப்படையிலான நட்பு மட்டும் உண்மையான மற்றும் நிலையான நட்பாகும். மனிதன் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் பெற, இப்படிப்பட்ட உயர்ந்த நட்பை வளர்த்துக்கொள்வதே அவசியம் எனலாம்.