கோடைக்கு இதம் தரும் பருத்தி சேலைகளின் பயன்பாடு அறிவோம்!
அக்னி நட்சத்திர கோடையில் சிந்தடிக் சேலைகளை கட்டினால் கூடுதலாக உடலில் கசகசப்பும் வேர்க்குருவும் தோன்ற வழிவகுத்து விடும். அதனால் காட்டன் சேலைகளை கட்டுவதே மிகவும் நல்லது. தூய பருத்தி சேலை என்றால் மிக மிக நல்லது. காட்டன் சேலைகளை பக்குவமாகப் பராமரித்தால், முறையாகக் கையாண்டால் அதை அணிவது மிகவும் சுலபமாக இருக்கும்.
விலை உயர்ந்த காட்டன் சேலைகளை ஒவ்வொரு முறையும் வெளியில் அணிந்து சென்று வந்துவிட்டு துவைக்க வேண்டாம். கொடியில் காற்றாட உலர விட்டு பின்பு அயர்ன் செய்து மடித்து வைத்தாலே போதும். புதிய காட்டன் சேலைகளை முதல் முறை துவைப்பதற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்னால் ராக் சால்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் சேலையில் இருக்கும் அதிகப்படியான கஞ்சி மொடமொடப்பு மற்றும் அதிகப்படியான கலரானது முதல் துவைப்பிலேயே சேலையை விட்டு நீங்கிவிடும். அடுத்தடுத்து துவைக்கும்போது சேலையில் இருந்து கலர் செல்வது என்பது அதிக அளவில் தடுக்கப்படுகிறது.
மிருதுவான சோப்பு மற்றும் சோப்பு தூள் கொண்டு காட்டன் சேலைகளை துவைக்க வேண்டும். அதேபோல் காட்டன் சேலைகளை பலம் கொண்டு மட்டும் அடித்து துவைப்பதும் முறுக்கிப் பிழிவது கூடாது. நீரில் சேலையை அலசிய பிறகு சேலையில் இருக்கும் நீர் வடிவதற்கு வாட்டர் டேப் அல்லது துணி உணர்த்தும் கொடியில் தொங்கவிட்டு நீர் முற்றிலும் வடிந்த பிறகு சேலையை காய வைக்க வேண்டும்.
சேலையில் உள்ள நீர் வடிந்த பிறகு வடித்த கஞ்சி அல்லது ஸ்டார்ச் பவுடர் கலந்த நீரில் சேலையை நனைத்து பிழியாமல் காய வைக்க வேண்டும். மேலும் சூரிய வெயில் படாதவாறு நிழலில் உணர்த்துவது மிகவும் நல்லது. சூரிய ஒளி நேரடியாகப் படும்படி சேலையை காய வைத்தால் நிறமானது மாறுவதற்கு ஏராளமான வாய்ப்பு உள்ளது.
காட்டன் சேலையானது நன்கு உலர்ந்த பிறகு சரியாக மடித்து பெட்டின் அடியில் வைக்கலாம் அல்லது அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். மிதமான வெப்பத்தில் மெதுவாக அயன் செய்ய வேண்டும். இரண்டு மூன்று காட்டன் சேலைகளை ஒன்றாக துவைக்கக் கூடாது. ஒன்றாகத் துவைக்கும்போது ஒரு சேலையில் இருக்கும் கலரானது மற்றொரு சேலையில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் தனித்தனியாக சேலைகளைத் துவைப்பதே நல்லது.
காட்டன் சேலைகளை வாஷிங் மிஷினில் போட்டு துவைப்பது என்றால் மென்மையான துணிகளை துவைக்கும் ஆப்ஷனை தேர்வு செய்து வைப்பது நல்லது. ஆனால், கைகளில் துவைப்பது மிகச்சிறந்த வழி என்றே கூறலாம். காட்டன் சேலைகளில் கறைகள் ஏதாவது இருந்தால் அவற்றை பிரஷ் போட்டு கடினமாக துவைப்பதற்கு பதிலாக வொயிட் பெட்ரோல் கொண்டு கறைகளை நீக்கலாம் அல்லது டிரைகிளினர்களிடம் கொடுத்து கறைகளை நீக்கலாம்.
கஞ்சி போட்டு அயர்ன் செய்த காட்டன் சேலைகளை மடித்து ஒரு துணியின் மேல் மற்றொன்று வைப்பதற்கு பதிலாக ஹேங்கரில் தொங்கவிட்டு உபயோகப்படுத்தலாம். காட்டன் புடைவைகளை நீண்ட நேரம் சோப்பு தண்ணீரில் ஊற வைத்தால் சாயம் மங்கிவிடும் அழுக்கு இல்லை என்றால் துவைக்கும் போது தண்ணீரில் நனைத்து அப்படியே துவைக்கலாம். முதல் இரண்டு முறை புதிய காட்டன் சேலைகளை கண்டிப்பாக தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது. வாஷிங் பவுடர் தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகே துணிகளை ஊற வைக்க வேண்டும். துணிகளை அதிக நேரம் ஊற வைப்பதனால் துணியினுடைய லைஃப் டைம் குறையவும், நிறம் பெயிட் ஆவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. துவைத்த பிறகு அயர்ன் செய்தால் கூடுதல் அழகாக இருக்கும்.
இந்த அக்னி நட்சத்திர கோடைக்கு காட்டன் புடைவைகளை இதை போல் பயன்படுத்தி அணிந்து கொண்டால் உடலுக்கு சுகமாக இருக்கும். கோடையின் வெப்பத்தையும் தணிக்கும், வியர்வையையும் உறிஞ்சும்.