
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வாரந்தோறும் வீட்டைத் துடைத்து சுத்தம் செய்யும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. இன்றைய நவீன உலகில் வீட்டை சுத்தம் செய்வதற்கு பல கெமிக்கல் திரவங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. இவை வீட்டை சுத்தம் செய்து பளபளப்பாக மாற்றுகின்றன. இதில் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுவாதால், வீட்டில் நறுமணம் வீசும். ஆனால் பூச்சிகள், எறும்புகள் மற்றும் ஈக்கள் போன்ற உயிரினங்களை வீட்டின் உள்ளே வர இவை அனுமதிக்கின்றன. இதனால் தேவையற்ற அசௌகரியம் ஏற்படும். வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களைக் கொண்டே இதனைத் தடுக்க முடியும்.
கோடை வெயில் கொளுத்தும் இந்நேரத்தில் வீட்டில் அனலாக இருக்கும். அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்வித்தாலும், மழைநீர் தேங்குவதால் ஈக்களும், பூச்சிகளும் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம்; கொசுக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் நாம் அடிக்கடி வீட்டைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
நம் முன்னோர்கள் அன்றைய காலகட்டத்தில் நலமுடன் வாழ, நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களையே அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று அப்படி இல்லை. எதற்கெடுத்தாலும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கி விடுகிறோம். அதன் உண்மையான பலன் மற்றும் எதிர்வினைகள் என்ன என்பதை அறியாமல் பயன்படுத்துகிறோம். எளிதாக கிடைக்கும் பொருட்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம். இதிலிருந்து விடுபட்டு ஒவ்வொரு பொருளையும் எப்படி இலாவகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில், வீட்டை சுத்தம் செய்யவும் சில பொருட்கள் உண்டு.
வீட்டைத் துடைக்கவும், பூச்சிகள் நுழையாமல் இருக்கவும் வீட்டிலேயே இருக்கும் இரண்டு பொருட்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில் முதலிடத்தில் இருப்பது படிகாரம். வீட்டைச் சுத்தம் செய்யும் தண்ணீரில் சிறிதளவு படிகாரத்தைக் கரைத்து விட்டால், பூச்சிகள் மற்றும் ஈக்கள் உள்ளே நுழையாது. அதிக விலை கொடுத்து கெமிக்கல் திரவங்கள் வாங்குவதைக் காட்டிலும், இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கும் படிகாரம், ஒரு பூச்சிக்கொல்லியைப் போல் செயல்படும்.
பூச்சிகளை விரட்ட உதவும் மற்றொரு பொருள் எலுமிச்சை. இதன் சாற்றை தண்ணீரில் கரைத்து வீட்டைத் துடைத்தால் வீடும் சுத்தமாகும்; பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. எலுமிச்சை மற்றும் படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து பூச்சிகள் மற்றும் எறும்புகள் இருக்குமிடத்திலும் தெளிக்கலாம். அதோடு குளியலறை, சமையலறை மற்றும் கழிவறையிலும் இதனைத் தெளிக்கலாம். இதன்மூலம் மிக மிக குறைந்த செலவில் பூச்சித் தொல்லையை நம்மால் ஒழித்துக் கட்ட முடியும்.
படிகாரம் மற்றும் எலுமிச்சை ஆகியவை இரண்டும் வலுவான வாசனையைக் கொண்டுள்ளன. இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. ஆகையால் தான் இந்த சிறுசிறு உயிரினங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. இவை மிகச்சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்பட்டு உங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. எலுமிச்சை மற்றும் படிகாரத்தைக் கொண்டு நீங்கள் தொடர்ந்து வீட்டைத் துடைத்து வந்தால், பிறகு வீட்டிற்குள் பூச்சிகளை நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள்!