
சுத்தம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பளிச்சென்ற தரைகளும், பளபளக்கும் கழிவறையும்தான். கழிவறையை சுத்தம் செய்வதில் நாம் காட்டும் அக்கறையை, அன்றாடம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் காட்டுகிறோமா என்பது சந்தேகமே. ஆனால், அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், நாம் சுத்தமானது என்று கருதும் பல வீட்டுப் பொருட்களில், கழிவறை இருக்கையை விட பல நூறு மடங்கு அதிக கிருமிகள் குடியிருக்கின்றன.
சமையலறை எனும் கிருமிகளின் கூடாரம்!
நம் ஆரோக்கியத்தின் தொடக்கப் புள்ளியான சமையலறையில்தான் முதல் எதிரி ஒளிந்திருக்கிறது. பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச், கிருமிகள் வாழ்வதற்கு ஏற்ற சொர்க்கபுரியாகும். உணவுத் துகள்கள், ஈரப்பதம் போன்றவை பாக்டீரியாக்கள் லட்சக்கணக்கில் பெருகுவதற்கு வழிவகுக்கின்றன.
இது வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை ஏற்படுத்தலாம். இதேபோல, காய்கறி மற்றும் இறைச்சி நறுக்கப் பயன்படுத்தும் பலகையின் கீறல்களுக்குள் கோடிக்கணக்கான கிருமிகள் மறைந்திருக்கும். குறிப்பாக, இறைச்சியை வெட்டிய பின் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், அது மற்ற உணவுப் பொருட்களையும் விஷமாக்கிவிடும்.
தனிப்பட்ட பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து!
அடுத்ததாக, நாம் தினமும் எட்டு மணி நேரம் உறங்கும் படுக்கையறைக்கு வருவோம். நமது தலையணை உறை, கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது. நமது வியர்வை, உமிழ்நீர் மற்றும் இறந்த சரும செல்கள் ஆகியவை சேர்ந்து, கிருமிகளுக்கு ஒரு மாபெரும் விருந்தளிக்கின்றன. இது முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
இதே பட்டியலில், நமது 'ஆறாவது விரல்' என்று கூறப்படும் கைப்பேசியும் உண்டு. நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நம்மோடு பயணிக்கும் இது, கழிவறையை விடவும் பத்து மடங்கு அசுத்தமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கைகளை சுத்தப்படுத்தாமல் கைப்பேசியைத் தொடுவதால், அது ஒரு நடமாடும் கிருமிக் கூடாரமாகவே மாறிவிடுகிறது.
பொழுதுபோக்கு சாதனத்தில் மறைந்திருக்கும் பேராபத்து!
ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பயன்படுத்தும் தொலைக்காட்சி ரிமோட், கிருமிகள் பரவுவதற்கான மிக எளிதான ஒரு சாதனம். கை அழுக்கு, உணவுப் பிசுக்குகள் போன்றவை அதன் பொத்தான்களுக்கு இடையில் எளிதாகச் சேர்ந்துவிடும். வீட்டில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படுவதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று பரவ இது ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது.
நாம் சுத்தமாக இருப்பதாக நினைக்கும் இடங்களில்தான் அதிக அசுத்தம் மறைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான சுத்தம் என்பது கண்ணுக்குத் தெரிவதை விட, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிப்பதில்தான் அடங்கியிருக்கிறது.