
2025ஆம் ஆண்டில் சென்று கொண்டிருக்கும் நாம் டிஜிட்டல் உலகத்தில் மூழ்கி கொண்டிருக்கோம். தற்போது நமது சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட பணம் தான் முக்கியமானது. அதிலும் பள்ளி படிப்பு செலவுகள் எல்லாம் உச்சவரம்பை கடந்து வருகிறது. இதனாலே பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் இதன் காரணமாகவே தாத்தா - பாட்டி அல்லது உறவினர்களிடமே வளர்ந்துவருவதால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் படிப்பில் உதவி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
அப்படி பல பெற்றோர்களுக்கு இருக்கும் கவலைகளில் ஒன்று தான் குழந்தைகளின் ஞாபக மறதி பிரச்சனை. எந்த காலம் ஆனாலும் படிப்பு தான் முக்கியமானது. எந்த சொத்தை வேண்டுமானாலும் இழந்துவிடலாம், ஆனால் கல்வி செல்வம் தான் சிறந்த செல்வம் என்றே பலரும் குறிப்பிடுவார்கள். கல்வியில் ஒரு குழந்தை சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஏகோபத்ய ஆசையாகும். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம் என்று தெரிஞ்சுக்கோங்க!
குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க தூக்கம் அவசியம். தூக்கம் மூளையை ஓய்ந்திருக்க செய்வது மட்டுமின்றி, முந்தைய நாள் கற்றுக் கொண்டதை இன்று நினைவுக்கு கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைக்கும்.
3 முதல் 5 வயது உடைய குழந்தைகள் பகல் நேரமும் தூங்க வேண்டும்.
வளர்ந்த குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் டிவி, செல்போன் போன்ற எதையும் பார்க்கக் கூடாது.
குழந்தைகளை பொருத்தவரை 9 முதல் 12 மணி நேரம் தூக்கம் அவசியம். இது வயதுக்கேற்றவாறு மாறுபடலாம்.
குழந்தைகள் வகுப்பறையில் தூங்குவது அவர்களின் கற்றலை ஆதரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு ஏரோபிக் செயல்பாடு அவசியம். இது அவர்களின் கற்றலை மேம்படுத்தும். ஏதேனும் உடற்செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அது ஏதேனும் விளையாட்டுகள், சைக்கிள் ஓட்டுதல் போன்றவையாக இருக்கலாம்.
தினமும் வீட்டுப்பாடம் செய்யும் முன் 10 முதல் 15 நிமிடங்கள் தோப்புக்கரணம், ஜம்பிங் ஜக்ஸ் போன்ற சிறுபயிற்சிகளை செய்யலாம்.
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க சில விஷயங்களை செய்யலாம். அதில் வினாடி வினாவுக்கு முக்கிய பயனுண்டு. அவர்களுடைய நினைவில் இருந்து தகவல்களை சொல்வதற்கு வினாடி- வினா போல கேள்வி பதில்களை கேட்கலாம். இது அவர்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மீண்டும் மீண்டும் படிப்பதை விடவும் படித்ததை நினைவூட்ட, கற்றலை மேம்படுத்த இது போன்று கேள்வி கேட்கலாம். ஃபிளாஷ் கார்டுகள், படித்தவற்றில் இருந்து 2 முதல் 3 கேள்விகளை கேட்கலாம். மறுநாள் அதே டாபிக்கில் 2 நிமிடங்களுக்கு 'பாப் வினாடி வினா' செய்யலாம்.