குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பதற்கு இவைகூட காரணமாக இருக்கலாம்!

குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பதற்கு இவைகூட காரணமாக இருக்கலாம்!

பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், பிள்ளைகள் படிப்பில் சற்றே பின்தங்கி இருக்கலாம். அதற்கான காரணங்களாக இவைகூட இருக்கலாம்.

நேர மேலாண்மைக் குறைபாடு: பிள்ளைகள் படிப்பில் பின்தங்குவதற்கு முக்கியமான காரணம் நேர மேலாண்மை பற்றிய புரிதல் இன்றி இருப்பது. தங்களுடைய பாடங்களை சரியாக பிளான் செய்து படிக்காமல், பொழுதுபோக்கில் நேரம் செலவழித்து விட்டு பிறகு படிக்கிறேன் என்று சொல்வதும், இரவு தூங்கும்போது வீட்டுப் பாடம் செய்வதும், அன்றைய பாடங்களை அன்றே படிக்காமல், பிறகு படிக்கலாம் என்று தள்ளிப்போடுவது, பின் மொத்தமாக  சேர்த்து வைத்து படிக்க முடியாமல் திணறுவது. இதை பெற்றோர் முறைப்படுத்த வேண்டும்.

சரியான தூண்டுதல் இல்லாமை: பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினால் வீட்டில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை மக்கு என்று சொல்லித் திட்டுவார்கள். அதனால் தாங்கள் என்னதான் படித்தாலும் நன்றாக மார்க் வாங்க முடியாது என்ற எண்ணம் அழுத்தமாக அவர்கள் மனதில் பதிந்து விடும். அதனால் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய் விடும். குறைவாக மதிப்பெண் எடுத்தாலும், ‘உன்னால் படிக்க முடியும்’ என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கமளித்தால்  அந்த குழந்தை நன்றாகப் படிக்கும்.

படிக்க சரியான சூழ்நிலை இல்லாமல் இருப்பது: வீட்டில் பெற்றவர்கள் சண்டை போட்டுக்கொண்டோ அல்லது டிவியை அதிக சத்தமாக வைத்துக்கொண்டோ, சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தால் குழந்தைகள் படிப்பதற்கான அமைதியான சூழல் இருக்காது. அதனால் அவர்களுக்குப் படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.

கற்பித்தலில் குறைபாடு: சில சமயங்களில் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்துவது பிள்ளைகளுக்குப் புரியாமல் இருக்கலாம். அவர்களுக்குப் புரியும்படி ஆசிரியர் நடத்துகிறாரா என்று பிள்ளைகளைக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கான சிறப்பு வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்பலாம். அல்லது வீட்டில் பெற்றோர் சொல்லித் தரலாம். பள்ளியிலும் ஆசிரியரிடம் இந்த விஷயத்தை சொல்லி தீர்வு காணலாம்.

பிற விஷயங்களில் நாட்டம்: அதிகமாக செல்போன் பார்ப்பது, நண்பர்களுடன் விளையாட்டு,வெளியில் சுற்றுவது, பொழுதுபோக்கில் ஆர்வம் என்று பிற விஷயங்களில் நாட்டம் இருந்தால், படிப்பில் ஆர்வம் இல்லாமல் போகும். இதைக் கவனித்து சரி செய்ய வேண்டும்.

படிப்பதற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் இருப்பது: அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், நோட்ஸ் எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் நன்றாகப் படிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்!
குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பதற்கு இவைகூட காரணமாக இருக்கலாம்!

கண் பார்வையில் குறைபாடு: சில பிள்ளைகளுக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கலாம். அதைச் சொல்லத் தெரியாமல் கூட அவர்கள் இருக்கலாம். எனவே, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போடுவது சரியாகத் தெரிகிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.

அதீத எதிர்பார்ப்பு: 40, 50 மார்க் வாங்கும் குழந்தைகள், பெரும் முயற்சி செய்து 60 மார்க் வாங்கினால், அதைப் பாராட்டாமல், 90, 95 வாங்கு என்று பெற்றோர் அதீத எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வது தவறு. இதனால் அவர்கள் மனம் நொந்து சாதாரணமாக படிப்பதைக் கூட நிறுத்தி விடுவார்கள்.

மேலும், பிள்ளைகளுக்குப் பிடித்த கோர்ஸில் சேர்த்து விடுவது மிகவும் முக்கியம். பெற்றோர் தங்கள் ஆசையை பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. பிள்ளைகளை வெறும் மார்க் எடுக்கும் இயந்திரங்களாக மட்டும் எண்ணாமல், அவர்களுக்குப் படிப்பு தவிர, பிற விஷயங்களில் இருக்கும் ஆர்வத்தை மதித்து ஊக்குவிக்க வேண்டும். இதனால் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com