
ஒருவரின் இளமையையும் பொலிவையும் காட்டுவதில் அவரது தலை முடி பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் தங்கள் தலை முடி உதிர்வை தடுப்பதில் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. முடி உதிராமல் இருக்க நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய ஜூஸ்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முடி உதிர்வை தடுக்க பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து சோர்வடைந்து விட்டீர்களா? முடி கொட்டாமல் இருக்க தலை முடிக்கு வெளியே கொடுக்கும் வைத்தியத்தை போலவே, கேசத்தின் உள்ளே சில விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது, ஆரோக்கியமாக சிலவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக, முடிக்கு ஊட்டம் தரும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள் மிக மிக அவசியம்.
இவற்றை அன்றாட உணவில் சேர்த்துகொள்ள மறக்கக் கூடாது. உடலுக்குச் செல்ல வேண்டிய ஆகாரங்கள் சரியாகச் சென்றால் முடி மற்றும் சருமத்துக்கு எந்த பிரச்னையும் வராது. அந்த வகையில் இந்தப் பதிவில் முடி உதிர்வை தடுக்கும் ஜூஸ்கள் பற்றி பார்க்கலாம். இந்த வகை ஜூஸ்களை வாரம் இரு முறை அல்லது குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் முடி உதிர்தல் பிரச்னை படிபடியாக நின்று விடும்.
இந்தியாவில் பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை. இதை சரிசெய்ய இரும்புச்சத்து நிறைந்த ஜூஸ்களை எடுத்துக் கொள்வது நல்லது.
வெள்ளரிக்காய் ஜூஸ்: வெள்ளரிக்காய் ஜூஸ் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது. முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கவல்லது. மதிய நேரத்தில் இந்த வகை ஜூஸை எடுத்து கொள்ளலாம். வெள்ளரிக்காயுடன் புதினா, எலுமிச்சை சேர்த்து நன்கு அரைத்துக் குடிக்கவும்.
நெல்லிக்காய் ஜூஸ்: தலை முடிக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் ஏற்றது. வெறும் நெல்லிக்காயை கூட தினமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு முடி உதிர்வை திறம்பட கட்டுப்படுத்தும்.
பசலைக்கீரை ஜூஸ்: இரும்புச்சத்து அதிகம் உள்ள பசலைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கீரையில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது இரும்புச்சத்து நிறைந்தது. அப்படியே அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து வடிக்கட்டி குடிக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பழத்தை பசலைக்கீரையுடன் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.