பிள்ளைகளின் குழந்தைப் பருவம் குறித்து பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!

Stubborn children
Stubborn childrenhttps://ta.quora.com

பிள்ளைகளின் குழந்தை பருவத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றவர்களுக்கு உள்ளது. ஒரு குழந்தை பிறந்தால் முதல் இரண்டு மாதங்களுக்கு அவர்களை, ‘பிறந்த குழந்தை’ என்று குறிப்பிடலாம். இந்த சமயத்தில் அவர்கள் தூங்குவது, பால் குடிப்பது, மலம் கழிப்பது, அழுவதை மட்டுமே செய்கிறார்கள். குழந்தைப் பருவம் என்பது இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை எனக் கொள்ளலாம். இந்நிலையில் அவர்களின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது.

பிறந்த குழந்தைகளுக்கு அழுவது என்பது முதன்மையான தகவல் தொடர்பு விஷயமாகும். ஏனெனில், அவர்களுக்குத் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அழுகையைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது. தத்தி தத்தி நடந்து பழகும் வயதில் அவர்களின் முழுமையற்ற, தெளிவற்ற ஒலிகளை, வார்த்தைகளை நாமே நம் கற்பனைக்கேற்ப யூகித்துக் கொள்கிறோம். இவன் இதைத்தான் சொல்கிறான், அதைப்பற்றி கேட்கிறாள் என்று நாமாக யூகித்துக் கொள்கிறோம். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வார்த்தைகளில் தெளிவாக வெளிப்படுத்த முடியாததால் நாமாக யூகித்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில் அவர்களைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் நம்மை பெருமளவில் சார்ந்துள்ளன. எனவே, அந்த சமயத்தில் நாம் அவர்களை அன்புடன் கையாள்வது மிகவும் அவசியம். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதோ, மிரட்டுவதோ, அடிப்பதோ அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அழும். அது தவறல்ல. காரணம் குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை, தேவைகளை வெளிப்படுத்த அழுகையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நாம்தான் குறிப்பறிந்து இவள் இதற்காக அழுகிறாள், இவனுக்கு இது தேவைப்படுகிறது என்று புரிந்து கொண்டு அவர்களை பொறுமையாக கையாள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தாமரை விதையில் இவ்வளவு நன்மைகளா? அடேங்கப்பா! 
Stubborn children

சிறு குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பையும், பரிவையும் மட்டும்தான். அவர்களை பெரியவர்களைப் போல நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் பிடிவாதம் பிடிக்கும் சமயம் தண்டிப்பது சரியான தீர்வாகாது. முரண்டு பிடித்தால் விட்டுப் பிடிக்க வேண்டும். சில குழந்தைகள் தாங்கள் நினைப்பதை நடத்த தரையில் விழுந்து புரண்டு அழும். அம்மாதிரி சமயங்களில் நாம் அவர்களை அடிப்பதோ, தண்டிப்பதோ, மிரட்டுவதோ பலனளிக்காது. அன்பு என்னும் ஆயுதத்தை மட்டுமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களை நல்வழிப்படுத்தும். நாம் அவர்களை மிகவும் கண்டித்து மிரட்டினால் இரவில் தூங்காமல் பயந்து  அழுவார்கள்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் மெனக்கிடும் பருவம் இது. எனவே அவர்களை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டியது அவசியம். குழந்தையின் வளர்ச்சிக்கு முழுமையான பாதுகாப்பை பெற்றோராகிய நாம்தான் தர வேண்டும். அவர்களுடன் நிறைய பேச வேண்டும். அவர்கள் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்கவும் வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள முனைவார்கள். அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்தாமல் ஊக்குவிக்க வேண்டும். இதுவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வழிவகுக்கும். செய்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com