

நமது வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தாத பொருட்கள் என்றாலே, உடனே நமது நினைவுக்கு வருவது பரண் அல்லது மொட்டை மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூம் (Store room) மட்டுமே. இடப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பழைய பொருட்களைக் கண்களில் படாதவாறு மேலே தூக்கிப் போட்டுவிடுகிறோம்.
ஆனால், நாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் அந்த இடங்கள் உண்மையில் சில பொருட்களுக்குக் கல்லறையாக மாறக்கூடும் என்பதைப் பலரும் உணர்வதில்லை. குறிப்பாகக் காற்றோட்டம் இல்லாத பரண்கள் மற்றும் வெப்பம் அதிகம் தாக்கும் ஸ்டோர் ரூம்களில் நிலவும் தட்பவெப்ப நிலை, விலை உயர்ந்த பொருட்களையும் நினைவுகளையும் அழித்துவிடும்.
வீட்டின் வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய முக்கியப் பொருட்கள் எவை என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.
ஆவணங்கள், புகைப்படங்கள்!
முதலாவதாக நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, முக்கியமான சான்றிதழ்கள் மற்றும் பழைய ஆவணங்களைப் பரணில் வைப்பதாகும். பிறப்புச் சான்றிதழ், வரி ரசீதுகள், பத்திரங்கள் போன்றவை காகிதத்தால் ஆனவை. பரணில் இருக்கும் அதிகப்படியான வெப்பமும் ஈரப்பதமும் காகிதங்களை மஞ்சள் நிறமாக மாற்றுவது மட்டுமல்லாமல், பூஞ்சை தொற்றையும் உண்டாக்கும்.
இதே நிலைதான் புகைப்படங்களுக்கும் பொருந்தும். நமது பழைய நினைவுகளைச் சுமக்கும் ஃபோட்டோ ஆல்பங்களை அதிக வெப்பத்தில் வைக்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிதைந்துவிடும். எனவே இவற்றைத் தீப்பிடிக்காத பெட்டிகளிலோ அல்லது வீட்டின் அலமாரியிலோ வைப்பதே பாதுகாப்பானது.
உணவு, மெழுகு!
அடுத்ததாக, மிச்சம் இருக்கும் மளிகைப் பொருட்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கான உணவைப் பரணில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். டப்பாக்களில் அடைத்து வைத்தாலும், வெப்பத்தால் கெட்டுப்போகவும், எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கவும் இவை காரணமாக அமையும். அதேபோல அலங்காரத்திற்காக வாங்கிய மெழுகுவர்த்திகளைப் பரணில் வைத்தால், கோடைக்கால வெப்பத்தில் அவை உருகி மற்ற பொருட்களின் மீது வடிந்து சேதத்தை ஏற்படுத்தும்.
எலக்ட்ரானிக்ஸ், பேட்டரிகள்!
பழைய டிவி, லேப்டாப் அல்லது பொம்மைகளில் உள்ள பேட்டரிகள் போன்றவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல் பரணில் போடுவது ஆபத்தானது. அதிக வெப்பம் காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள சர்க்யூட் போர்டுகள் உருகிச் செயலிழக்கக்கூடும். அதைவிட ஆபத்தானது பேட்டரிகள். அவை வெப்பம் தாளாமல் வெடிக்கவோ அல்லது திரவம் கசிந்து மற்ற பொருட்களை நாசமாக்கவோ வாய்ப்புள்ளது.
துணிகள், மரச்சாமான்கள்!
பாரம்பரியமான மரச்சாமான்கள் அல்லது பழைய பட்டுப்புடவைகளைப் பரணில் வைப்பது அவற்றை அழிப்பதற்குச் சமம். வெப்பநிலை மாறுபாட்டால் மரம் விரிசல் விட்டு உடைந்துவிடும் அல்லது வடிவத்தை இழக்கும். துணிகளைப் பரணில் வைக்கும்போது எலித்தொல்லை மற்றும் பூச்சிகளால் அவை அரிக்கப்பட்டு வீணாகிவிடும். மேலும் அதிகப்படியான வெப்பம் துணிகளின் நிறத்தை மங்கச் செய்யும்.
வேதிப்பொருட்கள்!
வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் திரவங்கள், பெயிண்ட் டப்பாக்களை மூடிய அறையில் வைப்பது மிகவும் ஆபத்தானது. வெப்பத்தால் இவை ஆவியாகி நச்சுப்புகையை வெளியிடும் அல்லது உறைந்து போய் பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும்.
வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பொருட்களை அப்புறப்படுத்துவது நல்ல பழக்கம் தான். ஆனால் எதை எங்கே வைக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.